சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து ரயில் ஓடத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னையில் மக்கள் நெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தரைக்கு அடியில் செல்லும் வகையில், டெல்லியில் உள்ளதுபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்தின்படி, இரண்டு பாதைகளில் மெட்ரோ ரயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திட்டப் பணிகள் தொடக்க விழா, கோயம்பேட்டில் நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொடி அசைத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும். இதில் 59 சதவீதத்தை ஜப்பான் வழங்கும். இதற்கான ஒப்பந்தம் 21-11-2008ல் டோக்கியோவில் கையெழுத்தானது. மத்திய அரசு 20 சதவீதம் வழங்கும்.
இந்த திட்டப்படி 2 வழித்தடங்கள் அமையும்.
முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ. நீளம் அமையும். வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை, 20 அடி ஆழ சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும்.
2ம் வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக புனித தோமையர் மலையை அடையும். இதன் நீளம் 22 கி.மீ. அண்ணா நகர் வரை சுரங்கப்பாதையிலும் மீதி தூரம் மேம்பாலத்திலும் ரயில் செல்லும். திட்ட ஆலோசகர்களாக இந்தியா, பிரான்ஸ், ஹாங்காங், ஜப்பான் நிபுணர்கள் இருப்பார்கள்.
கோயம்பேட்டிலிருந்து அசோக் நகர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.199.20 கோடியில் நடைபெறும். இந்த பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது. நூறு அடி சாலையின் மத்தியில் இதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடியும்.
திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
செய்தி: படம்: நன்றி: தினகரன்
மெட்ரோ ரயில் பாதை
Chenai Metro Website
Thursday, June 11, 2009
சென்னை மெட்ரோ: 2014-2015
Labels:
Chennai Metro,
சென்னை மெட்ரோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment