Wednesday, June 17, 2009

ஸ்டாலினுக்கு தங்கப் பதக்கம் - ராமநாதபுரம் குடிநீர் திட்டம்

குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்த ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கம் அணிவித்தார் கருணாநிதி


சென்னை, ஜூன் 17: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்ததற்காக, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை முதல்வர் கருணாநிதி பாராட்டி தங்கப் பதக்கம் அணிவித்தார். சான்றிதழும் வழங்கினார்.



அதைத் தொடர்ந்து துணை முதல்வரின் செயலர் தீனபந்து, குடிநீர் வழங்கல் செயலர் நிரஞ்சன் மார்டி, குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ஸ்வரண் சிங் ஆகியோருக்கும் முதல்வர் கருணாநிதி பாராட்டு சான்றிதழும், பதக்கமும் அணிவித்தார்.

இத்திட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 220 பேருக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர் உப்புத்தன்மை உடையது. இங்கு குடிநீர் ஆதாரங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. முதல்வர் கருணாநிதி, மக்களின் குறையை அறிந்து பிரச்னையை முழுவதுமாக நீக்குவதற்கு 30-01-07 அன்று அடிக்கல் நாட்டினார். கடந்த 11ம் தேதி திட்டத்தை தொடங்கியும் வைத்து விட்டார்.

திருச்சி காவிரி ஆற்றுப் பகுதியை நீர் ஆதாரமாக கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில பகுதியிலும் உள்ள மக்கள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

இத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு பதில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றினால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பரிசளிப்பதாக அறிவித்தார். அதேபோல விரைவாக முடிக்க செயல்பட்டவர்களுக்காக இன்று முதல்வர் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி உள்ளார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

No comments: