Tuesday, January 15, 2008

ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத விஷயம்

கருணாநிதி - ராஜாத்தியம்மாள் - தயாளு அம்மாள் - மனோரமா

"ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, "ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது"

மனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி

சென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமையேற்று கருணாநிதி பேசியதாவது: "மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக்குக் காரணம் எங்களுடைய கலையுலகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.

குடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் "அண்ணா கவி யரங்கு' நடைபெறவிருந்தது.

அந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.

செய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனுமதித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.

அப்போது மனோரமாவும் அவரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார்.

அப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு "இது யார்?' என மனோரமாவிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்... "ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!' என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, "ஊருக்குத் தெரிந்த - வீட்டுக்குத் தெரியாத' விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோரமா என்ன நினைத்து சொன்னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒப்பற்ற நடிகை: "உதயசூரியன்' என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்தோம். அதில் நான் தேசியவாதியாகவும் மனோரமா திராவிடம் என்றால் என்ன என்று விளக்கும் கதாபாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவிடத்தைப் பரப்புவதற்காகத்தான்.
ஏனென்றால் பெண்கள் திருந்தினால் போதும் நாடே திருந்திவிடும்.

மனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றையும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
ஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவையொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நாளில் பெற்ற பாக்கியம்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.

ரஜினிகாந்த்: நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாராமன்தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலிவுட்டில் முக்கிய நடிகர்கள், தமிழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.

ஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோரமா. அவருடன் "குப்பத்து ராஜா' படத்தில் முதல்முறையாக நடித்தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து "இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு' என்று கூறியவர்.
ஒருசமயம் "பில்லா' படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் "பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே' என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில் என்னைப் பற்றி ஒருவிதமாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.


அப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, "அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்' என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.

கமல்ஹாசன்: சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.

மனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரியும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோறும் விழா நடத்தினாலும் கண்டிப்பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.

மனோரமா: எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கருணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னுடைய தாய். இரண்டாவது
என்னுடைய தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய "மணிமகுடம்' நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.

தொடர்ந்து அவருடைய நாடகங்களில் நடித்துத்தான் புகழடைந்தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த்துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் "மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.

அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.

செய்தி: நன்றி: தினமணி
தேதி 15-ஜனவரி௨ 2008 - பக்கம் 6

ஆமாம் - ஜெயலலிதா பத்தி ஏன் மனோரமா எதுவுமே சொல்லலை ?

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முன்னனுமதி பெற்றாவது ஒரு சில வார்த்தைகள் சக நடிகை என்ற அளவிலாவது முன்னாள் முதல்வர் பற்றிக் கூறி இருந்தால் அத்தனை பேரும் உயர்ந்தவராகியிருப்பார்கள்.இத்தனை பிரச்சனையுள்ளும் ரஜனி
தன் மகள் திருமணத்துக்கு முன்னாள் முதல்வரையும் அழைத்தவர். ரஜனிக்கும் ஆச்சிக்கும் கூட சிக்கல் இருந்தது.
இந்த மேடையில் அவை மறைந்துள்ளது. முன்னாள் முதல்வரிடம் மாத்திரம் பகை பாராட்டுவது ஏனோ
தெரியவில்லை.இந்நாள் முதல்வர் கூட இவர்களைக் "காகங்கள்" எனக் கவிதை எழுதியவர்.
ஒருதர் குறைகளை மறந்து நிறைகளைப் போற்ற வேண்டுமெனும்
நயந்தகு நாகரீகம் உலகிலேயே நம் தமிழகத்தில் செத்து பலகாலமாகிவிட்டது.

Sambar Vadai said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் அண்ணா.

அதே தான் எனது கருத்தும். சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்காக தேர்தலில் மிகவும் பரிந்துபேசி (அப்போது ரஜினியை மிகவும் மோசமாகத் திட்டியும் பிறகு ரஜினி மிகவும் பரந்த மனதுடன் தனது அடுத்த படங்களில் அவரை சேர்த்துக் கொண்டார்) ஜெ. ஆட்சியில் மனோரமா ஜெ.க்கும் மிகவும் நட்புடன் இருந்ததும் உண்டு. ஆனால் இந்த மேடையில் அவரைப் பற்றி புகழ்ந்து பேசாவிட்டாலும் கலைஞர் மாத்திரம்தான் எல்லா உதவிகளையும் செய்தமாதிரி பேசியுள்ளது எனக்கு ஆச்சரியமே.

கருணாநிதி செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுவது நல்லதே. ஆனால் இந்த பாராட்டு விழாவே இந்த ஆட்சியில்தான் நடக்கணும் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையாகத் தெரிகிறது. அநேகமாக மனோரமா நேற்று இரவே போயஸ் தோட்டத்துக்கும் ஒரு போன் பேசியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

Thanjavurkaran said...

உங்களது கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை.
மனோரமா தன்னை இந்த வேலையில் சேர காரணமானவர்களை நன்றி பாராட்டி இருக்கிறார். இதில் சக பணியாளராக இருந்தவரைப்பற்றி ஏன் பேச வேண்டும்.
ஜெயலலிதாவை ஒரு விழாவில் உச்சி மோர்ந்து புகழ்ந்து பேசியது சக நடிகை முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்துல்லாரே என்று தான்.

அதிமுகவிற்கு பிரச்சாரம் கூட ஜெயலலிதா செய்த உதவிக்கு பிரதி உபகாரம்தான்.
மற்றப்படி எல்லோரும் காக்கை கூட்டம் தான். கலைஞர் கூட மனோரமாவின் பள்ளி விவகாரத்தில் உதவி செய்தார் என்று படித்தேன். அதற்காகவும் இருக்கும் இந்த ஜால்ரா.

எப்படியோ கலைஞர் டிவிக்கு மூன்று மணி நேர நிகழ்ச்சி ரெடி.