Friday, December 14, 2007

கிளார்க் வீராசாமி: ராமதாஸ்

"வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்."

சென்னை: திமுக, பாமக இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்த அறிக்கை போர் இப்போது அமைச்சர் வீராசாமிக்கும் ராமதாசுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறி, இப்போது கூட்டணியையே ஆட்டிப் பார்த்துக் கொண்டுள்ளது.

திமுக மாநாட்டுக்கு ராமதாசுக்கு இதுவரை மரியாதைக்குக்கு கூட அழைப்பு விடுக்காமல் தவிர்த்து வருகிறது அக் கட்சியின் தலைமை.

திமுக பொருளாளரும் மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நேற்று ஆற்காடு வீராசாமியைத் தாக்கி மிகக் கடுமையான அறிக்கை விட்ட ராமதாஸ், பாமகவைச் சேர்ந்த ஒருவரின் திருமண விழாவில் பேசுகையில், மக்களுக்குத் தேவையான கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மதுக் கடைகளை மட்டும் அரசே ஏற்று நடத்துகிறது.

நம் சமுதாயம் இப்போது தான் முன்னேறி வருகிறது. ஆனால், அதை பொறுக்க முடியாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நம் சமுதாயத்தை அழிக்கப் பார்க்கிறது. சாராயம் குடித்து நம் சமுதாய மக்கள் அழிகின்றனர்.

சமுதாயம் திருந்த வேண்டும் என்று தான் கல்விப் பணியில் இறங்கினோம். கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 100 ஆண்டுகளாக காடுமேடாகக் கிடந்த நிலத்தை இஸ்லாமியர்களிடம் இருந்து வாங்கி கல்லூரி கட்டினோம். அதில் எங்கோ அரை ஏக்கர், ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாம். ஆற்காடு வீராசாமி சொல்கிறார்.

வீராசாமியைப் பற்றி எனக்குத் தெரியாதா. மின் வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தபோது ஆளும்கட்சி குறித்து எதிர்க் கட்சிக்கு உளவு சொன்னவர் தானே இவர். நாங்கள் எத்தனையோ ஆற்காடு வீராசாமிகளைப் பார்த்திருக்கிறோம்.

இன்று தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. கேட்டால் நீ நிலத்தை அபகரித்துவிட்டாய் என்று பேசுகிறார் மின்சார அமைச்சர் என்று பேசிய ராமதாஸ் பல இடங்களில் வீராசாமியை கோபம் கொப்பளிக்க ஒருமையில் பிடித்து வாங்கினார்.

ஆற்காடு பதிலடி:

இந் நிலையில் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்று அறிக்கை விட்டு விட்டு அவர் சவாலையேற்று நான் ஆதாரங்களைத் தெரிவித்த பிறகு அவரே ஆத்திரவயப்பட்டு அறிக்கை விடுகிறார்.

திருமண விழாக்களில் பேசுகிறார். என்னைப் பற்றி ஏதேதோ கூறுகிறார். ஒருமையில் என்னை விளித்து உருப்படாமல் போய் விடுவாய் என்கிறார். மின்வாரியத்தில் கிளார்க்காக வேலை பார்த்தாய் என்கிறார்.

இவைகளில் இருந்தே யார் ஆத்திரத்தில் பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆத்திரம் எப்போது வரும் என்றால், வாதத்தில் பலகீனம் ஏற்படும் போதுதான். அவர் சவால்விட்டு ஆதாரம் கேட்டதால்தான் நான் அவைகளை வெளியிட நேர்ந்தது. அவரே ஆதாரத்தை கேட்டுவிட்டு அதற்காக என் மீது இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார்.

பொது நலத்துக்காக நிலம் கையகப்படுத்துவது என்பது நீண்ட காலமாக இருந்து வரும் முறை என்று குறிப்பிட்டுள்ள டாக்டர், கடந்த ஓராண்டு காலமாகத்தான் அதற்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது என்றும் சொல்கிறார்.

அந்த எதிர்ப்புக்கெல்லாம் காரணம் சாட்சாத் இவர்தான் என்பதை இவரது மனசாட்சியே அறியும். வேறு சில தனியார் தங்கள் நிறுவனங்களைத் தொடங்க நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என்று நிலம் கையகப்படுத்துவதைத் தொடர்ந்து டாக்டர் எதிர்த்த காரணத்தில்தான் அவரே கல்லூரி தொடங்குவதற்காக 200க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திய விவரத்தை நான் கூற வேண்டியதாயிற்று.

உடனே அவர் நூறாண்டு காலத்திற்கு மேல் அங்கே எதுவுமே சாகுபடி செய்யவில்லை. களர் நிலம் என்று கூறிய பிறகு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலம் வாங்கப்படும் வரையில் அங்கே என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன என்ற விவரத்தை அடங்கல் எண்களோடு நான் தெரிவிக்க நேர்ந்தது.

தற்போது சவுக்கு என்பது பயிரே இல்லை என்கிறார். சவுக்கு மட்டுமல்ல, பூஞ்செடி, நெல் போன்றவைகளும் அங்கே சாகுபடி செய்யப்பட்ட விவரத்தை நான் தெரிவித்திருக்கிறேன். டாக்டர் ராமதாஸ் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். என்னையும் டாக்டர் ராமதாசையும் தெரிந்தவர்களுக்கு யார் கோபப்படுவார்கள் என்பது நன்றாகத் தெரியும்.

வன்னியர் சமுதாயத்திற்கே அவர்தான் பிரதிநிதி என்பதைப் போலவும், அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலவும், அந்த ஒட்டு மொத்த சமுதாயமே அவரிடம் இருப்பதைப் போலவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுச் சரித்திரத்திலேயே இது வரையில்லாத அளவிற்கு வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தற்போது கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் முக்கிய துறைகளுக்குப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். அது மாத்திரமல்ல முதன் முதலாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த டி.ஜி.வெங்கட்ராமனை மத்திய அமைச்சராக அங்கம் வகிக்க செய்ததும் தலைவர் கலைஞர்தான்.

அதைப்போலவே கட்சியிலே கூட தலைமைக் கழகச் செயலாளர்களாக, மாவட்டக் கழகச் செயலாளர்களாக, ஒன்றியக் கழகச் செயலாளர்களாக மற்றும் பல்வேறு பொறுப்புகளிலே வன்னிய சமூகத்தினர் இருந்து வருகிறார்கள்.

திமுகவிலே மட்டுமல்ல, இன்னும் சில கட்சிகளிலும் வன்னியர் சமுதாயத்தினர் பொறுப்புகளில் உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு கட்சியிலும் பல்லாயிரக்கணக்கான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருந்து வருகிறார்கள்.

எனவே ஒன்றரை கோடி வன்னியர்களுக்கும் இவர்தான் பிரதிநிதி என்பதைப்போல கூறிக் கொள்வது விந்தையாக உள்ளது.

மேலும் அந்தக் கல்லூரியை அவர்கள் தொடங்குவது பற்றியும் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் அந்தக் கல்லூரியின் தொடக்க விழாவின்போது, அன்றைய அரசாங்கம் அதற்கான அனுமதியை மறுத்து விட்ட நிலையிலும் தலைவர் கலைஞர் அந்த விழாவிற்காகச் சென்றபோது, அவரோடு சென்றவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தக் கல்லூரிக்காக வாங்கப்பட்ட இடம் முழுவதும் களர் நிலம் என்று கூறிய டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் பரப்பளவு ஒரு ஹெக்டேர் அளவுக்குத்தான் உள்ளது என்று வழுக்கியிருக்கிறார். முதலில் இல்லவே இல்லை என்று சொன்னவர் தற்போது இந்த அளவிற்கு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அது போலவேதான் முதலில் அரசு புறம்போக்கு நிலம் என்று ஒப்புக்கொண்டு, ஆனால் அங்கே வேலி போடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே அவரது நியாயம் எந்த அளவிற்கு தடுமாறியுள்ளது என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

தன்னிடம் என்னைப்பற்றி ஏதோ பட்டியல் அவரிடம் உள்ளதாகவும், வீராசாமியைப் போல எத்தனையோ பேரை தான் சந்தித்திருப்பதாகவும் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டியல் உண்டு. ஒவ்வொரு நபருக்கும், ஏன் ஒவ்வொரு கல்லூரிக்கும் அதுபோலவே ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் பட்டியல் உண்டு.

என்னைப் பொறுத்தவரையில் டாக்டர் ராமதாஸ் கூறுவதற்கு முன்பே, வருமான வரித்துறை, வருவாய்க்கு மேல் சொத்துக் குவிப்பு என்பது போன்ற வழக்குகள் எல்லாம் வந்து அவற்றையெல்லாம் சந்தித்து என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகத்தான் உள்ளது.

அதுபற்றி டாக்டர் ராமதாஸ் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம். நான் கிளார்க்காக இருந்தேன் என்கிறார் டாக்டர் ராமதாஸ். கிளார்க்காக பணியாற்றுவது ஒன்றும் பாவமான தொழில் அல்ல.

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு எத்தனை முறை சிறை சென்றேன் என்ற கணக்கு எனக்குத் தெரியாது. மிசா காலத்திலே சிறையிலே அடைக்கப்பட்டு அடி வாங்கி இன்றளவும் என் காது கேட்காத நிலைமை உள்ளது ஒன்றே என்னைப் பற்றிய உண்மையை உலகத்திற்குத் தெரிவிக்கும்.

ஆனால் நான் சிறைபட்ட நேரத்தில் என்னுடைய குடும்பத்தினர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல யாரும் மேலிடத்தைப் பார்த்து மன்னிப்பு கோரி மண்டியிடவில்லை என்ற வரலாறும் எனக்கு உண்டு. இறுதியாக ராமதாஸ் நான் உருப்படமாட்டேன் என்று சாபம் விடுத்திருக்கிறார். சாபம், விமோசனம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சிதான் திமுக.

ஏழைகளின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று சொன்ன அண்ணாவின் தம்பியாம் கருணாநிதியின் தலைமையில் கீழ் உள்ள நான் இவரது சாபத்திற்காக கவலைப்படவில்லை. அவர் நன்றாக வாழட்டும். எந்தக்கட்சிக்கும் துணை புரியாமல் தாங்களே தனியாக 2011ல் ஆட்சிக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் மற்ற கட்சிக்கு துணை போய் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி ஆட்சியிலே ஒரு கட்சியை உட்கார வைத்து விட்டு அந்த ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அளவிற்கு துணை இருந்திருக்கிறார் என்ற சரித்திரம் தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே பசுமையாக இருக்கத்தான் செய்யும். நான் என்னிடம் இருக்கும் விபரங்களைத் தெரிவிக்கிறேன். இவை தவறு என்றால் டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தோடரலாம். அதை நான் சந்திக்கத் தயார் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

மாநாட்டுக்கு ராமதாசுக்கு அழைப்பில்லை:

இந் நிலையில் திருநெல்வேலியில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ராமதாசுக்கு ஒரு மரியாதைக்காகக் கூட இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையாம். இதை அவரே நிருபர்களிடம் தெரிவித்தார்.

Nandri: Thatstamil

No comments: