ஸ்டாலின் தலைமையை ஏற்க ஆற்காடு, துரைமுருகன், வீரபாண்டி, கோ.சி மணி தயார்
சென்னை: நான் மட்டுமல்ல, கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம் என மின்துறை அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சரும் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி பேசுகையில்,
திமுக சாதாரண இயக்கம் அல்ல. அண்ணா இட்ட கட்டளையை இன்று வரை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் மு.க.ஸ்டாலின் அயராது பாடுபடுகிறார். பேராசிரியர் அன்பழகன் ஒரு திருமண விழாவில் பேசும்போது, ஸ்டாலின் தலைமை பதவிக்கு வருவதை ஏற்பதாக சுட்டிக் காட்டினார்.
அவர் மட்டுமல்ல. நானும் பல்வேறு கூட்டங்களில் பேசும்போது எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நான் மட்டுமல்ல. கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராகத்தான் இருக்கிறோம்.
அதற்கு காரணம் ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதல்ல. 1976ம் ஆண்டு மிசா காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு தியாகங்களை கட்சிக்காக செய்தவர் ஸ்டாலின். அவருக்கு கட்சியின் தலைமையை ஏற்று நடத்தும் தகுதி திறமை இருக்கிறது என்பதே இதற்கு காரணம் என்றார்.
பின்னர் ஸ்டாலின் பேசுகையில்,
அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்னை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக் காட்டினார். 76ம் ஆண்டு மிசா காலத்தில் எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை சிறை அனுபவங்களையும் சுட்டிக்காட்டி பேசினார்.
நான் என்றும் அதை தியாகமாக கருதியதில்லை. கடமையாகத்தான் உணர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
67, 68ம் ஆண்டுகளில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்று என்னால் தொடங்கப்பட்ட இயக்கம் மதுரையில் 80ம் ஆண்டு இளைஞரணியாக உருவெடுத்தது. இப்போது தமிழகம் முழுவதும் இளைஞர் அணி கம்பீரமாக உலா வருகிறது.
திமுகவில் எல்லா அணிகளையும் விட இளைஞர் அணிக்குத்தான் தனி சிறப்பு. நெல்லையில் இளைஞரணி மாநாட்டை நடத்துகிறோம். அது வெற்றி மாநாடாக அமைய நீங்கள் அனைவரும் வரவேண்டும்.
நாட்டில் புதிதாக கட்சிகள் வரலாம். திடீர் திடீரென தலைவர்கள் வரலாம். வரக்கூடிய கட்சிகளுக்கு கொள்கை குறிக்கோள் இருக்கிறதா. அவர்களது ஒரே கொள்கை ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். நான் தான் முதலமைச்சர் என்ற முடிவோடு கட்சி தொடங்குகிறார்கள்.
இன்றைக்கு புதிய கட்சிகளை பார்த்து சில இளைஞர்கள் தடுமாறலாம். அவர்களை நமது இளைஞர்கள் பக்குவப்படுத்த வேண்டும். நாம் பதவியை தேடி செல்ல கூடாது. பதவி நம்மை தேடி வரவேண்டும். நெல்லை மாநாட்டை தடுத்து நிறுத்த அதிமுக என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டது, எதுவும் எடுபடவில்லை என்றார் ஸ்டாலின்.
நெல்லை மாநாட்டில் ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு உயர்த்தப்படலாம், முதல்வராகக் கூட முடி சூட்டப்படலாம் என்ற பேச்சு நிலவும் நிலையில் ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: செய்தி: தட்ஸ்தமிழ்
Tuesday, December 4, 2007
ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment