Friday, September 28, 2007

பந்த்துக்கு தடை இல்லை - ஆனால் ......

டவுசர் கிழியும் ஆனால் கிழியாது என்பது போல

அக்டோபர் 1ந் தேதி திமுக கூட்டணி அழைப்பு விடுத்துள்ள பந்த்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. எனினும் பந்த்தின்போது பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் வரும் 1ந் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர் பொது நல மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோரை கொண்ட முதலாவது அமர்வு நேற்று விசாரித்து. அதில் அவர்கள் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் விடுத்துள்ள இந்த பந்த்துக்கு அடிப்படை ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அரசியல் கட்சிகள் கூறியிருப்பது பந்த். அதை வேலை நிறுத்தம் என்றோ, கடையடைப்பு போராட்டம் என்றோ கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 24.10.2007க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
பந்த் நடைபெறும் நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு இராது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதன்படி மாநில அரசு, காவல்துறை டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அக்டோபர் 1ந் தேதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ கட்டாயப்படுத்தி குடிமக்களின் அன்றாட வேலையில் குறுக்கிட்டால், அப்படி குறுக்கிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து உட்பட எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அன்றைய தினம் இயல்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதை தடுக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிகைகளில் விளம்பரம் வாயிலாக இதனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருந்தனர்.


Source: Nandri: Maalaisudar

No comments: