Monday, September 10, 2007

கருணாநிதி அதிரடி ? மாமல்லபுரத்தில் ஆலோசனை

6 மந்திரிகளின் இலாகாக்களில் மாற்றம் ?? கருணாநிதி அதிரடி - மாமல்லபுரத்தில் ரகசிய ஆலோசனை

தமிழக அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, என்.கே.கே.பி.ராஜா, கே.பி.பி.சாமி உட்பட 6 அமைச்சர்களின் இலாகாக்களை அதிரடியாக மாற்ற முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்று மாமல்ல புரத்தில் அவர் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை 2006 மே 13ந் தேதி பதவியேற்றது. 30 மந்திரிகள் உள்ளனர். இதில் சில மந்திரிகளின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு திருப்திகரமாக இல்லையென்று கூறப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடைய இலாகாவை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பரிதி இளம்வழுதி, பெரிய கருப்பன், கே.பி.பி.சாமி, என்.கே.கே.பி.ராஜா ஆகிய அமைச்சர்களின் செயல் பாட்டில் முதலமைச்சருக்கு திருப்தி இல்லையென்று கூறப்படுகிறது. ஆகவே அவர்களின் இலாகாவையும் மாற்ற முதலமைச்சர் திட்ட மிட்டிருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அவர் இன்று காலை மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருடன் அமைச்சர் பொன்முடி சென்றதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் தனியாக புறப்பட்டுச் சென்று முதல்வருடன் ஆலோசனை யில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருப்திகரமாக செயல்படாத அமைச்சர்களின் இலாகாவை மாற்றுவது தொடர்பாகவும், ஒரு சிலரை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் ஆவுடையப்பனை அமைச்சராக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை அமைச்சராக ஆக்கினால் துணை சபாநாயகராக இருக்கும் வி.பி.துரைசாமியை சபாநாயகராக பதவி உயர்த்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

இது குறித்து விரைவில் முடிவெடுத்து முதல்வர் அமைச் சரவையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் திமுக அரசுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுத்து வரும் நெருக்கடி குறித்தும் அதை சமாளிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சேலம் ரெயில்வே கோட்ட திறப்பு விழா, அண்ணா பிறந்தநாள் விழா, கலைஞர் தொலைக்காட்சி துவக்க விழா ஆகியவை குறித்தும் முதல்வர் கருணாநிதி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Source: Nandri: Maalaisudar

No comments: