சென்னை கலைவாணர் அரங்கில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலைத்துறையில் செயற்கரிய செயல்புரிந்த கலைஞர் களுக்கு 2006 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில், பொற்பதக்கங்களை வழங்கி உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், "தமிழின் பெயரால் ஒருவரைக் குற்றம் சொல்லி குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி தமிழ் உணர்வே இல்லை என்று சொல்வது நல்லதல்ல. எல்லோரும் சேர்ந்துதான் தமிழைக் காப்பாற்ற வேண்டும். வளர்க்கவேண்டும். கலைஞர் தொலைக்காட்சி யிலாவது தமிழ் வாழுமா? என்று சந்தேகப்படு கிறார்கள். தமிழ் வாழும்; நிச்சயமாக எல்லோரையும் வாழவைக்கும்" என்று குறிப்பிட்டார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
இன்று ஏறத்தாழ கலைமாமணி விருதுகள் 70 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இத்தனை பேருக்கு இந்த அவையில் நானும் ஆளுநர் அவர்களும் வழங்கியுள்ள இந்த விருதும், பரிசளிப்பும், பாராட்டுப் பத்திரமும் அவர்கள் இதுவரையிலே ஆற்றியிருக்கின்ற தொண்டுக்காக, அவர்கள் தமிழகத்திலே தங்களுடைய திறமையின் மூலமாக, எடுத்துக்காட்டிய கலைக்காக, இசைக்காக, காவியத்திற்காக என்று எடுத்துக் கொண்டாலுங்கூட, இவர்களைப் பார்த்து இந்த விழாவிலே அவர்கள் விருது பெறுவதைப் பார்த்து அடுத்த அடுத்த
விழாக்களில் நாமும் இத்தகைய சிறப்பைப் பெற வேண்டுமென்கிற எண்ணம், வருங்காலக் கலைஞர்களுக் கெல்லாம் ஏற்பட வேண்டுமென்பதற்காகத் தான், இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சின்னத்திரை கலைஞர்கள் சிறப்பிக்கப்படுவதில் பெரும் மகிழ்ச்சி
இந்த ஆண்டு "சின்னத்திரை’’ கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீண்ட காலமாக ஒரு ஆதங்கம் இருந்தது. என்னிடத்திலே அந்த ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்திய போது, அதை நிறைவு செய்கின்ற இடத்தில் அப்போது நானில்லை. நான் வருவேன் என்று காத்திருந்தார்கள், வந்தவுடனே (கைதட்டல்) அதனை வெளியிட்டார்கள், நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், மன்னிக்க வேண்டும், கேட்டுக் கொண்டார்கள் என்பதை விட அன்புக் கட்டளையிட்டார்கள். அதனை இன்றைக்கு நிறைவேற்றிய பெரும் மகிழ்ச்சியும், பூரிப்பும் எனக்கு இருக்கின்றது.
இந்த மன்றத்திற்கு எனக்கு முன்னால் பேசிய நம்முடைய ராமநாராயணன் குறிப்பிட்டதைப் போல "சங்கீத நாடக சபா’’ என்று தான் தொடக்கத்திலே பெயர் இருந்தது. நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் இயல், இசை, கூத்து என்று நம்முடைய தனித் தமிழில் அந்தச் சொற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஏதோ அந்தச் சொற்களில் தெய்வீகம் இல்லை, அதிலே கடவுள் கருணை இல்லை, அதிலே பக்தி ரசம் இல்லை, அது தமிழாக இருக்கிற காரணத்தால் வடமொழியாக இல்லாத காரணத்தால், அதிலே இருக்க வேண்டிய அருள் இல்லை என்ற ஒரு அப வாதம் நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு, அதற்கேற்ப சங்கீத நாடக சபா என்றே இதனை அழைத்து வந்தோம்.
தமிழ்நாடு என்று அண்ணா பெயர் வைத்துபோது சட்டப்பேரவையில் எழுந்த வாழ்த்து முழக்கம்
தி.மு.கழக ஆட்சி தொடங்கிய பிறகு அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே நீண்டகாலமாக நம்முடைய கோரிக்கையாக இருந்த "தமிழ் நாடு’’ என்கிற பெயரை அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலேயே எடுத்துச் சொல்லி, அதற்காக காங்கிரஸ் கட்சியின் தியாகி, சங்கரலிங்க நாடார் அறுபது நாட்களுக்கு மேல் உண்ணா விரதம் இருந்து, இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று கேட்ட அந்தக் கோரிக்கையை - அண்ணா அவர்கள் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றியது மாத்திரமல்ல, நான் உங்களுக்குச் சொல்கிறேன், காங்கிரசார், கம்யூனிஸ்ட்டுகள் என்று எல்லா கட்சிகளும் - கட்சி வித்தியாசம் இல்லாமல், சட்டப் பேரவையிலே தமிழர்கள் என்கிற ஒரே நிலையிலே அமர்ந்திருந்த போது, அண்ணா அவர்கள் எழுந்து நின்று, நான் "தமிழ்நாடு’’ என்று பெயர் வைத்திருக்கிறேன், நான் செய்த சாதனைகளில் எதை மாற்றினாலும், இந்தச் சாதனையை யாராலும் மாற்ற முடியாது, அவர்களை காலம் தண்டிக்கும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விட மாட்டார்கள் என்று அன்றைக்குச் சொல்லி, அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் என்பதை மறந்து, அந்த அவையிலேயே சொன்னார்கள், நான் மூன்று முறை "தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ என்று சொல்வேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் "வாழ்க, வாழ்க’’ என்று சொல்ல வேண்டுமென்று கூறி விட்டு, அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலேயே "தமிழ்நாடு’’ என்று மூன்று முறை ஒலிக்க, எல்லா உறுப்பினர்களும், கட்சி சார்பற்ற முறையில் "வாழ்க வாழ்க’’ என்று ஒலித்த அந்த ஒலி முழக்கம் இன்றைக்கும் என்னுடைய காதுகளிலே கேட்டுக் கொண்டிருக்கிறது. என்றும் மறக்க முடியாத முரசமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படி பெயர் சூட்டப்பட்ட இந்த மாநிலம் இங்கே தமிழை தகுந்த முறையில் உயர்ந்த முறையில், அதை நாம் செங்கோலோச்சுகின்ற முறையிலே நடத்திட வேண்டாமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஏறத்தாழ நூறாண்டு காலமாயிற்று. தமிழுக்கு "செம்மொழி’’ என்ற தகுதி உண்டே, அந்தத் தகுதி எங்கே போயிற்று என்று முதன் முதலில் கேட்டவர் பரிதிமாற்கலைஞர். பரிதிமாற்கலைஞர் என்றால் அவர் வேறு ஏதோ ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர் என்று யாரும் கருதக் கூடாது, அவருடைய இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. சாஸ்திரியாக இருந்தாலும், அய்யர், அய்யங்காராக இருந்தாலும் அந்தக் காலத்தில் தமிழின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கு ஈடில்லை, இணையில்லை என்ற அந்த நிலைமையிலேதான் சூரிய நாராயண சாஸ்திரி தன்னுடைய பெயரை பரிதிமாற்கலைஞர் என்று தமிழ்படுத்திக் கொண்டார். பரிதி என்பது சூரியனைக் குறிக்கும், மால் என்பது நாராயணனைக் குறிக்கும், நாராயணன் என்றால் மகாவிஷ்ணு, சாஸ்திரி என்பது கலைஞனைக் குறிக்கும். நான் கூட இப்போது ஒரு சாஸ்திரி தான். (சிரிப்பு, கைதட்டல்) அந்த பரிதிமாற்கலைஞர் தான் நூறாண்டுகளுக்கு முன்பு போர்க் கொடி உயர்த்தினார். நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும், உலகத்திலே ஹிப்ரு போன்ற ஐந்தாறு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து இருக்கிறது, ஆனால் நம்முடைய தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து இல்லையே என்று வருத்தப்பட்டார். அந்த வருத்தம் பல ஆண்டு காலமாகத் தேக்கத்திலே இருந்து இப்போதுதான் அண்மையில் நம்முடைய ஆட்சி தோழமை கட்சி நண்பர்களுடைய ஒத்துழைப்போடு உதயமான பிறகு, நான் டெல்லிப் பட்டணம் சென்று அங்கே அம்மையார் சோனியா காந்தி அவர்களை சந்தித்து, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, அதற்குப் பிறகு அந்தத் துறையின் அமைச்சர் அர்ச்ஜூன் சிங் அவர்களைச் சந்தித்து, செம்மொழி என்கிற அந்தஸ்து தமிழுக்குத் தரப்பட வேண்டும், அதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னவுடன், எனக்கு சோனியா காந்தி அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு தரப்பட்டு விட்டது என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, அவர்கள் அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தார்கள், இந்த அந்தஸ்து வந்ததற்கு யாராவது பெருமை பேசிக் கொள்ள வேண்டுமேயானால், அந்தப் பெருமை உன் ஒருவனுக்குத் தான் உரிமை உடையது என்று எனக்கு எழுதினார்கள். (பலத்த கைதட்டல்)
அந்தக் கடிதம்; நான் புதையலாக வைத்து போற்ற வேண்டிய ஒன்றாகும். அத்தகைய நிலைமையிலே செம்மொழி தகுதி நம்முடைய தமிழுக்குக் கிடைத்திருக்கும்போது, அந்தத் தமிழால் நம்முடைய மன்றத்தை இசைவாணர்களை, கலைவாணர்களை, - இவர்களையெல்லாம் பாராட்ட, புகழ அவர்களுக்கெல்லாம் மேலும் மேலும் ஊக்கத்தை வழங்க - அவர்களில் பலர் இயக்குநர்களாக நம்முடைய ராம நாராயணனைப் போல இருக்கிறார்கள், பலர் கவிஞர்களாக இருக்கிறார்கள், இந்த மன்றத்தில் செயலாளராக இருக்கின்ற இளையபாரதியைப் போல, இப்படி இருக்கின்றவர்களையெல்லாம் சிறப்பிக்க, அவர்களையெல்லாம் உயர்த்த, இந்த சங்கத்திற்கு, சபாவிற்கு, மன்றம் என்று பெயரிடுவதா, அல்லது வேறு பெயர் வைப்பதா என்று எண்ணிய போது தான் நான் இந்த மன்றத்திலே உள்ள நண்பர்களையெல்லாம் அழைத்துப் பேசினேன், அவர்களிடம் கேட்டுக் கொண்டேன், இயல், இசை நாடகம் என்ற இந்த மூன்றும் நம்முடைய தமிழுக்கே பெருமையளிக்கக் கூடியது, ஆகவே இந்த மூன்றையும் சேர்த்து இயல் இசை நாடக மன்றம் என்று இதற்கு பெயர் வைக்கலாமென்று கேட்டேன், அப்படியே எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள், அன்று முதல் இன்று வரையில் இது இயல், இசை, நாடக மன்றமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட இந்த மன்றத்தில் நடைபெறுகின்ற இந்த விழாவில் பலர் இன்றைக்கு பாராட்டப்பட்டிருக்கிறார்கள். சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவராக நம்முடைய இயக்குநர் பார்த்திபன் அவர்களை நன்றி சொல்லச் சொன்னால், அவர் தமிழ்நாட்டையே நான் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன் என்று நமக்குத் தெரியாமலே எடுத்துக் கொண்டு போய் விட்டார். பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள், தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டுபோக (பலத்த சிரிப்பு, கைதட்டல்) பார்த்திபன் உட்பட தமிழர்கள் அவ்வளவு பேரும் ஏமாளிகள் அல்ல (பலத்த கைதட்டல்) என்பதை நான் இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
1967-ம் ஆண்டு எனக்கு கலைமாமணி விருது வழங்கி வாழ்த்தினார் அண்ணா
அவர் நன்றி கூறியது எனக்கு - கலைஞர்களுக்கு விருது வழங்கினேன் என்று நன்றி கூறினார். ஆனால் நான் அந்த நன்றியை எனக்குக் கூறியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதே மன்றத்தில் 1967ஆம் ஆண்டு இந்த கலைமாமணி விருதை இந்த மேடையில் எனக்கு அணிவித்து, வாழ்த்துச் சொன்னவர் என்னை ஆளாக்கிய என் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களாவார்கள். (கைதட்டல்) அப்போது கூட அந்தப் பதக்கத்தை நேரடியாக என்னுடைய கழுத்திலே போடாமல், போடுவது போல பாவித்து, இரண்டு முறை எனக்கு ஏமாற்றத்தைத் தந்து, மூன்றாவது முறை தான் அதைப் போட்டார்கள். அப்படி ஒரு வேடிக்கையாக அந்தப் பதக்கம் எனக்கு அன்று அளிக்கப்பட்டது.
இன்றைக்கு ஒவ்வொரு விழாவிலும் நூற்றுக்கணக் கானவர்களுக்கு, ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பதக்கம் அணிவிக்கப்படுகிறது. நான் முதலில் நம்முடைய மன்றத்திற்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டது பற்றிச் சொன்னேன். இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய, போற்ற வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஒரு கட்டம் தமிழர்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. தமிழைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, தமிழுக்கு நாங்கள் தான் காப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு அந்தப் பெருமையிலே நாம் ஏமாந்து விடக் கூடாது, ஏமாற்றி விடக் கூடாது. இன்று நான் ஒரு பத்திரிகையைப் படித்தேன். "மாலை முரசு’’ பத்திரிகை. நான் பேசுவது ஒன்றும் அரசியல் அல்ல. தமிழ் மொழியைப் பற்றி ஒரு வாதம். தனித்தமிழ் பேசுவதா, வேண்டாமா என்பதைப் பற்றி ஒரு வாதத்தை அந்த மாலைப் பத்திரிகை இன்று எழுப்பியிருக்கிறது. அதிலே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். "ஆரம்பமாகப் போகிற கலைஞர் டி.வி.க்கு சில அறிவுரைகள்’’ - "தமிழிலேயே நடத்துங்கள்’’ - அதாவது எனக்கு அறிவுரை (பலத்த சிரிப்பு, கைதட்டல்) கலைஞர் தொலைக்காட்சியை தமிழிலேயே நடத்துங்கள் என்பது தமிழை வளர்ப்பதற்கு, தமிழர்களை வளர்ப்பதற்குப் பயன்படவேண்டுமென்று சொல்கிறார்கள்.
நான் அதை நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் யார் சொல்வது, நான் யார் கேட்பது என்கின்ற அகம்பாவம் என்னுடைய உள்ளத்திலே எந்த மூலையிலும் அரும்பாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதேநேரத்தில் அவர்கள் ஆங்கிலம் கலந்து சில சொற்கள் கையாளப்பட்டதை - குறிப்பாக சன் டி.வி.க்கு தமிழ் உணர்வே கிடையாது அவர்களுக்கென்று - நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் கலகம் ஊட்டி விடுகின்ற அளவிற்கு அதிலே ஒரு கட்டுரை வந்திருக்கிறது. சன் டி.வி. என்பதே ஆங்கில கலப்பு என்றும், சன் டி.வி.யில் தமிழுக்கே இடம் இல்லை என்றும் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தமிழை வளர்ப்பதற்காக உற்சாகத்தோடு செய்யப்படுகின்ற - அந்த ஊக்க உணர்வோடு செய்யப்படு கின்ற காரியமா என்றால் இல்லை. ஏதோ ஒரு பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகின்ற காரியமாகத் தான் அது இருக்கின்றது.
நான் அந்தப் பத்திரிகையைப் படித்துப் பார்த்தேன். சன் டி.வி.யால் தமிழ் உணர்வு அழிந்தது என்பது தலைப்பு. எல்லோருக்கும் சன் டி.வி.யிலே தொடர்பு உண்டு. நமக்கு இன்றைக்கு தொடர்பு இல்லாத காரணத்தால், அது தமிழை அழித்து விட்டதா என்ற கேள்விக்கு அவ்வளவு அவசரப்பட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது.
கலைஞர் தொலைக்காட்சியிலாவது தமிழ் வாழுமா என்று சந்தேகப்படுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கின்ற ஒரே பதில் - கலைஞர் வாழுகிறாரோ இல்லையோ, தமிழ் வாழும். (பலத்த கைதட்டல்) ) இது தான் அவர்களுக்கு என்னுடைய பதில்.
ஒருவருக்கொருவர் பகையைக் கக்கி தமிழைக் காப்பாற்ற முடியாது
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’’ என்பது தான் (கைதட்டல்) நான் தமிழைப் பற்றிக் கூறிய ஒரு சூளுரை. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பது. எனவே தான் தமிழ் வாழுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை, வாழும். (கைதட்டல்) மற்றவர்களையும் வாழ வைக்கும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சன் டி.வி.யால் தமிழ் மொழி அழிந்தது என்பதற்கு நான் ஏதோ சன் டி.வி.க்கு புதிதாக வக்காலத்து வாங்குகிறேன் என்று நாளைக்குப் பத்திரிகைகளில் எப்படி செய்தி வரும் என்று எனக்குத் தெரியும். (சிரிப்பு) ஆனால் தமிழின் பெயரால் ஒருவரைக் குற்றம் சொல்லி, ஒருவரை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி தமிழ் உணர்வே இல்லை என்று சொல்வது நல்லதல்ல. எல்லோரும் சேர்ந்து தான் தமிழைக் காப்பாற்ற வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும். அறிவுரை கூற வேண்டும்.
ஆனால் அதே "மாலைமுரசு’’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் "ஸ்ரீபெரும்புதூரில் இன்று ராஜிவ் நினைவிடத்தில் பிரதிபா பட்டீல் அஞ்சலி’’ என்று பெரிய கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், இதிலே ஸ்ரீபெரும்புதூர் என்பது தமிழா? (பலத்த கைதட்டல்) திருப்பெரும்புதூர் என்று அதை தமிழர்கள் எல்லாம் அழைக்கிறார்கள். நாமெல்லாம் திருப் பெரும்புதூர் என்று தான் அழைக்கிறோம். அதை ஸ்ரீபெரும்புதூர் என்று வேண்டுமென்றே, அவ்வளவு பெரிய "ஸ்ரீ’’ யை போட்டிருக்கிறார்கள். பதிலுக்குப் பதில் தாக்குவதற்காக இதைச் சொல்லவில்லை. மாலைமுரசைக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் திருப்பெரும்புதூர் என்று போடுங்கள். உங்களுடைய தமிழ் உபதேசத்தைக் கேட்டு சன் டி.வி. திருந்திக் கொள்ளும், நானும் கூட திருந்திக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் தயவுசெய்து ஸ்ரீபெரும்புதூர் என்பதை திருப்பெரும்புதூர் என்று திருத்திக் கொள்ளுங்கள் என்று நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது ஒரு வாதப் பிரதிவாதத்திற்காக எழுப்பப்பட்டதல்ல. எல்லோரும் சேர்ந்து தமிழைக் காப்பாற்ற ஒருவருக்கொருவர் பகையைக் கக்கி தமிழைக் காப்பாற்ற முடியாது. எனவே உள்ளுணர்வோடு, யோசித்து அந்த உணர்வைப் பயன்படுத்தி, அந்த வகையில் தமிழ் வாழ வேண்டும், தமிழ் பரப்பப்பட வேண்டுமென்ற அந்த எண்ணத்தோடு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்றைக்கு விருது பெற்ற, பரிசு பெற்ற அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்து வாழ்க வாழ்க தமிழ் வாழ்க என்று கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
Nandri: Source: Murasoli
Wednesday, September 5, 2007
நான் கூட இப்போது ஒரு சாஸ்திரி தான் - கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment