Thursday, January 21, 2010

கருணாநிதிக்கு மோசடி செய்ய தெரியவில்லை: ஜெயலலிதா

நான் சபாநாயகருக்கு வணக்கம் செலுத்துவது போலவும், பதிலுக்கு சபாநாயகர் வணக்கம் வைப்பது போலவும் திமுகவின் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள படம் பழையது. இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


படம்: நன்றி: தட்ஸ்தமிழ்

சபாநாயகருக்கு நான் வணக்கம் கூறியபோது பதிலுக்கு அவர் வணக்கம் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார்.

மேலும், திமுகவின் முரசொலி நாளிதழில் சபாநாயகர் ஜெயலலிதாவைப் பார்த்து வணக்கம் சொல்வதைப் போன்ற ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஜெயலலிதா அளித்துள்ள விளக்க அறிக்கை:

நான் வணக்கம் தெரிவித்தால், முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக் கூட சபாநாயகர் மறுக்கிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

அது கருஞ்சிவப்பு-நான் அணிந்திருந்தது கரு நீலம்..

வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ்சிவப்பு. ஆனால், கடந்த 11ம் தேதி அன்று நான் சட்டசபையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.

நான் அன்று சட்டசபையில் பேசிய காட்சிகள் அனைத்து, டிவிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாக தெரியும்.

கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன், நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நான் சபைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என் குற்றச்சாட்டு.

இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது சபாநாயகர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். (இதை ஜெயலலிதா இப்போது தான் சொல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

சபாநாயகரைக் கடிந்தார் முதல்வர்..

கடந்த 8ம் தேதி அன்று நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது கூட சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்த போது அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக சபாநாயகரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார்.

இதனால் தான் கடந்த 11ம் தேதி நான் வணக்கம் தெரிவித்தபோது சபாநாயகர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம், இதற்கு முன் நான் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். கடந்த 8ம் தேதி அன்று நான் கலந்து கொண்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம்.

இது மிகப்பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார். இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை.

பத்திரிகைகளுக்கு வண்ணப்படத்தை கொடுத்து மாட்டிக் கொண்டு விட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

No comments: