Saturday, January 16, 2010

பணிகளை ஸ்டாலின் தொடர வேண்டும் : கருணாநிதி

நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.


நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

1 comment:

Unknown said...

திருவள்ளுவரின் உண்மைக்காலத்தை கண்டுபிடிக்க இயலாத நிலையில்,தமிழ் மொழியின் காலத்தை அறிவியல் முறையில் நிரூபித்தாலும் (பானை எழுத்துகள்) கி.மு 800கு முன்பு என்று,ஐராவதம் மகாதேவன் பல நூற்றாண்டுக்கு குறைத்து மதிப்பிடுகிறார்.தொழில் அதிபர்களோ அல்லது அரசியல் தலைவரோ அழுத்தம் கொடுக்கின்றார்களா என்றும் தெரியவில்லை.கி.மு 300 கு மேல் கொண்டு போக மறுக்கிறார்.தமிழ் பானை எழூத்துகள் கி.மு 800 மேல் கண்டுபிடித்துவிட்டதாக தொல்துறை ஆராய்ச்சி யாளர்களே சொல்கின்றனர்.