Monday, January 11, 2010

சரித்திரக் கீர்த்தி மிக்க சட்டசபை - கருணாநிதி

"சரித்திரக் கீர்த்திமிக்க இந்த சட்டசபையில் இருந்து வெளியேறப் போகிறோம். அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, இந்த சட்டசபையில் நடக்கும் கடைசி கூட்டம் என்பதால், துணை முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தியதும், முதல்வர் கருணாநிதி, இந்த சட்டசபையின் வரலாறு பற்றி பேசியதாவது:நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து, இந்த அவையில் இருந்து வெளியேறப் போகிறோம். நம்மை யாரும் வெளியேற்றாமலேயே நமது விருப்பப்படி வெளியேறப் போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து, அழைத்துக் கொண்டு வெளியேறப் போகிறோம்.

இங்கு நடக்கும் இறுதிக் கூட்டத் தொடர் இது என்பதால், இந்த சபையின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.டில்லியில் உள்ள செங்கோட்டை, ஷாஜகானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகாலய பேரரசின் மிகப்பெரிய சின்னம்.


அதைப்போல, சென்னையில் உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம். 1640ல் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23ம் தேதி, இந்தக் கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு இப்பெயரிடப்பட்டது. கடந்த 1678ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத் தொன்மையான, "புனித மேரி ஆலயம்' கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் தான், 1753ல் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்தது. 1687 முதல் 1692 வரை, கவர்னராக "யேல்' இருந்த போது தான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டைக் கொடிமரத்தில், கம்பெனி கொடிக்குப் பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.கடந்த 1919ல், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன், தற்போதைய சட்டசபைக் கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. எனவே, இதற்கும் ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடலாம் போல் தெரிகிறது.


ஓமந்தூராருக்குப் பின், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையில் முதல்வராக வீற்றிருந்திருக்கின்றனர். 1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராக பொறுப்பேற்ற நான், 1971, 1989, 1996, 2006ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்துள் ளேன்.அதன்பின், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழக சட்டசபையில், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெண்களும் இடம்பெற வழி செய்யும் தீர்மானம், 1921ல் நிறைவேறியது. ஆதிதிராவிடர்களை, "பஞ்சமர், பறையர்' என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 1922ல் நிறைவேறியது.


ஆலயங்கள் நுழைவுச் சட்டம் நிறைவேறியதும் இந்த சபையில் தான்.இந்த சபையில், தமிழக மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது, ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்று இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளோம்.ஒரு கருத்தைச் சொன்னால், அதனால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்தக் கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, அக்கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து, நான் அறிந்தவரையில் எனது வாழ்வில் கடைபிடித்து வருகிறேன்.

அதை இந்தச் சட்டசபையிலும் கடைபிடித்து வருகிறேன். இந்த சபையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அவை எனனென்ன என்று பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை.அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் குடி செல்லும் புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களை பற்றிய நினைவுடன் நமது பணியை அங்கு துவங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

செய்தி: நன்றி: தினமலர்

More Links

TN Assembly

Chronology - Fort.St.George

State Legislature - Origin and Evolution

No comments: