தனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக கூறியுள்ளார். ஜெயகாந்தன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
.
"உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.
அதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.குழந்தை வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு.
என் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறி கொள்வேன். அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள்.
சினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.
டிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட "மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.
திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கிறோம். மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.
இந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையை போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன். கவிஞர் மனுஷ்யபுத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை.
தஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது ஆகியவை ஆபாசமானவைதான். இன்று இன்டெர்நெட்டில் ஆபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழில் தற்போது வருடத்திற்கு சில படங்களே வெற்றி பெறுகின்றனவே என்று நிருபர்கள் கேட்டபோது, கமல் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு கமல் பதிலளித்தார்.
திரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்டபோது, நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன் என்று கமல்தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, இது குறித்து ஆதாரித்தோ அல்லது எதிர்த்தோ நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Sunday, September 6, 2009
தனிமனிதன் கோபப்பட்டால்....! - கமல்ஹாசன்
Labels:
உன்னை போல் ஒருவன்,
கமல்ஹாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment