Thursday, February 19, 2009

காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்புதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழைய நண்பர் என்ற முறையில் இந்த யோசனையை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 61-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாநில செயலாளர் தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் 61 ஜோடிகளுக்கு இன்று திருவான்மியூரில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அவர்களுடன் சேர்த்து கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி- வசந்தி மற்றும் விழுப்புரம் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் மகன் வினோத் - ஆனந்தவல்லி ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றன.

இவற்றை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:- திருமணம் என்பதும் ஒரு கூட்டணி தான். இந்த திருமணக் கூட்டணி வெற்றிகரமாக அமைய மணமக்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த திருமண சீசன் நேரத்தில் தேர்தல் சீசனும் வந்து அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில் வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள் மலிந்து விட்டன. ஆனால் இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் எந்த தண்டனையும் பெறாமல் சுதந்திரமாக உலா வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு திமுகவுக்கு தருகின்ற ஆதரவு தான். இந்த ஆட்சியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தல் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் உண்மை யான வெற்றிகள் அல்ல.

பண பலம், படை பலம், ரவுடிகள் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பயன்படுத்தி தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் தருகின்ற ஆதரவு தான் காரணம். இப்போது திமுகவுக்கு அசட்டு தைரியமும், நம்பிக்கையும் உள்ளது. இதேபோல வன்முறை, அராஜகம், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கருதுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. இந்த கூட்டணியுடனே நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசும், திமுகவும் நம்புகின்றன.

ஆனால் மக்களை இந்த கட்சிகள் அடியோடு மறந்துவிட்டன. உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழக மக்கள் திமுக மீது கடும் கோபத்திலும், வெறுப்பிலும், கொதிப்பிலும் உள்ளனர். மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களும் இமாலய ஊழல்கள் செய்வதை மக்கள் அறிவார்கள். குறிப்பாக 1 லட்சம் கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறந்துவிடவில்லை.

இந்த நேரத்தில் மக்கள் மனதில் எழுகின்ற கேள்வி இதுதான். இத்தகைய ஊழல் மலிந்த திமுக மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அந்த கேள்வி. அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு உள்ள கோபம் காங்கிரசின் பக்கமும் திரும்பும்.

கடந்த காலத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இப்போது நடக்கும் தவறுகளையும் மறந்து மீண்டும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி கருதிவிடக்கூடாது. அவ்வாறு கருதினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை உருவாகி விடும். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அந்தப் பழைய நட்புறவைப் பாராட்டி நண்பர் என்ற முறையில் ஒரு ஆலோசனை கூறுகிறோம்.

திமுக இப்போது புதை மணலில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதனை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது. திமுக கதை முடிந்து விட்டது. புதை குழியில் மூழ்கும் திமுகவை கைகொடுத்து காங்கிரஸ் காப்பாற்ற நினைத்தால் அந்தக்கட்சியும் புதைகுழியில் சிக்கி அழியும் ஆபத்து உள்ளது.


எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிரசுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன்.


இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்வேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் அதற்கு ஆதரவு தருகின்ற கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி அல்ல, எந்த கட்சி திமுகவுடன் இணைந்து வந்தாலும் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள்.

இத்தகைய நிலையை சந்திக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி விரும்பினால் திமுகவுக்கு அளிக்கும் ஆதரவை அந்த கட்சி வாபஸ் பெற வேண்டும். அத்துடன் மக்களிடம் நம்பிக்கையை பெறுவதற்கு இமாலய தவறுகள் செய்யும் திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவும் வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்களிடம் பரிகாரம் காண வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். அந்த தீர்ப்புக்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிகளுக்குத்தான் லாபம். எந்த கட்சிகள் சேர வில்லையோ, அந்த கட்சிகளுக்குத் தான் நஷ்டம் என்றார் ஜெயலலிதா.

செய்தி: படம்: நன்றி: மாலைச்சுடர்

No comments: