Sunday, November 23, 2008

மாசறு பொன்னே; முரசொலி மாறா ! - கருணாநிதி கவிதை

மறைந்த, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 5-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.வின் முன்னணித் தலைவருமான முரசொலி மாறனின் 5-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி முதல்வர் கருணாநிதி, அவருக்கு கவிதை மூலம் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் எழுதியிருப்பதாவது:


அண்ணா கண்ணுக்கு ஆச்சரிய குறியாக
மாசறு பொன்னே; வலம்புரி முத்தே!
அருமைக் கண்மணியே, அன்பு மாறனே!
ஓடி விட்டன ஐந்து ஆண்டுகள் உன்னைப் பிரிந்து!
உன்னை நினைவூட்டி என் நெஞ்சில் அலைபாயும் நிகழ்வுகளை
முரசொலி அலுவலக முகப்பில் நாங்கள் வைத்துள்ள சிலை;
அடுக்கடுக்காகக் காட்சியாக்கும்போது;
நீ தத்தித் தவழ்ந்த பருவம் தாளமிடுவது போல் தளிர் நடை போட்ட பருவம்;
என் தோளில் அமர்ந்து கோளிலி கோயிலுக்குப் போன பருவம்;
குவளைப் பள்ளியில் உன்னைக் குந்த வைத்தது முதல்
குடந்தைக் கல்லூரியில் சேர்த்து அக்காள் பெரியநாயகம் அரவணைப்பில் வளர்ந்து;
சேலம் கல்லூரியில் சிறப்புறு மாணவன் எனும் செவியினிக்கும் சேதியாலே சிந்தை குளிர்ந்து;
அண்ணா கண்களுக்கு ஆச்சரியக் குறியாகவும்
உன் அன்பு மாமனாம் என் கண்களுக்கு அழகும் அறிவும் கலந்த
மறக்க முடியாத மா மருந்தாகவும் விளங்கி;
எந்த மருந்துக்கும் இரக்கம் காட்டி இறங்கித் தொலையாத
இறுதி முடிவுக்கு இயற்கை ஆளாக்கிவிட்டது உன்னை!
எதை நினைத்து என்னைத் தேற்றிக் கொள்வது?
யாரை நினைத்து என் மனத்தை மாற்றிக் கொள்வது?
நீயும் சேர்ந்து வளர்த்த உயிர் போன்ற கழகம் இருக்கிறது!
அந்தக் கழகத்திற்கென ஒலித்து என்றைக்கும் கம்பீரம் குலையாத;
கையெழுத்து ஏடாகத் தொடங்கி;
திராவிடரின் தலையெழுத்தை உயர்த்திப் பிடிக்க
ஒலித்திடும் முரசொலி இருக்கிறது;
ஆனால் நீயில்லையே என் கண்ணே!
மாறன் என் தம்பியல்லவோ!
என்று மார்தட்டிச் சொன்ன மாமேதை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு உன் மறைவு;
என் போன்றார்க்கு எரிமலையின் நெருப்பலை போல் அல்லவோ;
வாய்த்து வாட்டி வதைத்து விட்டது!
அகரம் கற்று கொடுத்த கலைஞரென
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?
நீ எழுதிய புத்தகமா அது?
தமிழனுக்குச் சோகம் வரும்போதெல்லாம்
வேகமாக எழுகின்ற வினாவல்லவோ அது!
மாநில சுயாட்சியென்று மாமேதையாம் நீ எழுதிய
இந்த இயக்கத்தின் லட்சியப் புதையலாம் பெரும் நூலில்;
அறியாமை இருளில் மூடிக் கிடந்த
தமிழர்களின் விழி திறந்த பெரியார்
அரசியல் எழுச்சி எனும்
விளக்கேற்றி வைத்த அண்ணா
அன்பின் உருவங்களாம் எங்கள்
குடும்பச் சுடர்கள் முத்துவேலர், அஞ்சுகத்தாய்
ஆகியோரின் நீங்காத நினைவுக்கு!
என்று எழுதிவிட்டு;
எனக்கு அகரம் கற்றுக் கொடுத்து ஆளாக்கியவரும்
என் ஆசானுமாகிய கலைஞர் என்றும் கூறி,
நன்றி தெரிவித்திருக்கிறாயே; மாசற்ற உன்மனத்தில்
எழுந்த நன்றியுணர்வு அல்லவா அது?
அதனால்தான் என்றைக்கும்
உன் நிழற் படத்தையோ,
உருவச் சிலையையோ,
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு;
மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விரையே
கரும்பே தேனே...
எனும் சிலப்பதிகார வரிகள்தான் என்
சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன
வாழ்க நீ இந்த
வையம் உள்ளவரை!


செய்தி: நன்றி: Thatstamil

Wednesday, November 19, 2008

நடிகர் எம் என் நம்பியார்

அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

அஞ்சலி

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தி: நன்றி: Thatstamil

Monday, November 17, 2008

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் - சத்தியநாராயணா திடீர் நீக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக் கட்சியையும் தொடங்கி ரஜினிக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதையடுத்து ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார் ரஜினி.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார். அரசியல் குறித்த கேள்விக்கு மட்டும், ஆண்டவன் உத்தரவிட்டால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்றார்.

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி கூறாமல், ஆண்டவன் உத்தரவு கிடைத்தால் வருவேன் என்று ரஜினி கூறியிருப்பதை சாதகமான அம்சமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கடவுள் பக்தரான ரஜினி, கடவுளின் அனுமதியுடன், அவரது உத்தரவுடன் வர விரும்புவதையே இது வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.

அனேகமாக எந்திரன் படத்தை முடித்து விட்டு அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

ரஜினியும் தற்போது அரசியல் பிரவேசம் குறித்த சிந்தனைக்குப் போய் விட்டதாகவே தெரிகிறது. சமீபத்தில் அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவின்போது அத்வானியை விட ரஜினிக்கே பலத்த கரகோஷமும், ஆதரவுக் குரலும் காணப்பட்டது.

இதைப் பார்த்து துக்ளக் ஆசிரியர் சோவும் கூட, இவ்வளவு பெரிய ஆதரவை வைத்துக் கொண்டு எதற்காக ஆண்டவன் உத்தரவை ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என ரஜினியை வைத்துக் கொண்டே கூறினார். இதெல்லாம் ரஜினி மனதில் புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக ரசிகர் மன்றங்களை ஒழுங்கமைக்கும் பணியில் ரஜினி இறங்கியுள்ளார். அதற்கு முதல் படியாக, யாரும் எதிர்பாராத வகையில் சத்தியநாராயணாவை ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் சத்தியநாராயணாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டு காலமாக ரசிகர் மன்றங்களை நிர்வகித்து நடத்தி வருகிறார்.

ஆனால் மன்றத்திற்குள் கோஷ்டியை உருவாக்கி வைத்து வருவதாக சத்தியநாராயணன் மீது புகார் எழுந்தது. மேலும் மன்றங்கள் தொடர்பான, ரசிகர்களின் உணர்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களை தனக்கு அவர் தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியும் ரஜினிக்கு எழுந்ததால், அவரை நீக்கும் முடிவுக்கு ரஜினி வந்ததாக தெரிகிறது.

அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் தனது குடும்ப நண்பரான சுதாகர் என்பவரை ரசிகர் மன்றத் தலைவராக்கியுள்ளார் ரஜினி. இனிமேல் மன்றங்கள் தொடர்பான அனைத்தையும் சுதாகர்தான் கவனிப்பார்.

சத்தியாநாராயணாவின் நீக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, புதிய மாற்றத்திற்கான அடிக்கல்லாகவே இதை அவர்கள் பார்க்கின்றனர்.

விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றப் பிரதிநிதிகளை ரஜினி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ரஜினியிடமும், மன்ற நிர்வாகத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் புதிய பிரவேசத்திற்கு வழிவகுக்குமா என்ற ஆர்வத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, November 11, 2008

அத்வானி விழா: ரஜினிக்கு ஸ்பெஷல் அழைப்பு !!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி இன்று சென்னை வருகிறார்.

அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

சென்னை நாரத கான சபாவில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவுக்காக அவர் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது மாநில பிஜேபி.

ரஜினி வருவாரா?

இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகையைத்தான். அவரது குரு தயானந்த சரஸ்வதிதான் புத்தகத்தை வெளியிடுகிறார் என்பதால் ரஜினியின் வருகையை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த விழாவுக்காக ஜெயலலிதா – ரஜினி இருவரையும் ஒரே மேடையில் ஏற்றத் திட்டமிட்டிருந்தது பிஜேபி தலைமை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரஜினி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராகவாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை பிஜேபியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ரஜினிக்கு நேரில் கொடுத்துள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான சோவும் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்வானியுடன் மேடையேறி அரசியல் பேசுவாரா... அல்லது எச்சரிக்கையுடன் வெறும் பார்வையாளராக நின்றுவிடுவாரா ரஜினி? பார்க்கலாம்!

செய்தி: நன்றி: Thatstamil

Friday, November 7, 2008

பிராமணப் பத்திரிக்கைகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

ஈழப் போராட்டம் குறித்த செய்திகளை திசை திருப்பி தகவல் வெளியிடும் பிராமணர்கள் நடத்தி வரும் பத்திரிக்கைகளை தமிழர்களும், திராவிடர்களும் புறக்கணிக்க வேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

''எரியும் ஈழமும், பிராமண நாளிதழ்களும்'' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி பேசுகையில்,

பிராமணர்களால் நடத்தப்படும் சில ஆங்கில நாளிதழ்களும், சில தமிழ் நாளிதழ்களும் ஈழப் பிரச்சினை குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மக்களை திசை திருப்பும் வகையில் தவறான, திசை திருப்பக் கூடிய செய்திகளை அவை பிரசுரித்து வருகின்றன.

2.30 லட்சம் ஈழத் தமிழர்கள் படும் துயரங்களையும், வலுக்கட்டாயமாக காட்டுக்குள் துரத்தப்பட்டுள்ள அவலத்தையும் இந்தப் பத்திரிக்கைகள் மறந்து விட்டன.

இவர்களால் அமெரிக்க அதிபராக ஓபாமா தேர்வு செய்யப்பட்டதை பக்கம் பக்கமாக செய்தி போட்டு நிரப்ப முடிகிறது. ஆனால் தமிழ் ஈழத்திற்காக விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போர் குறித்த செய்தியை ஏன் இவர்கள் போடுவதில்லை?.

பிராமணக் குடும்பங்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பத்திரிக்கைகளின் இரட்டை நிலையைத்தான் இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு தங்களையும், தங்களது தாயகத்தையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியும். இந்த செய்தித் தாள்களின் உதவி அவர்களுக்குத் தேவையி்ல்லை.

தமிழர்களும், திராவிடர்களும், இந்த பிராமணப் பத்திரிக்கைகளைப் படிக்காமல் புறக்கணிக்க முன்வர வேண்டும் என்றார்.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, November 4, 2008

ரஜினியின் பூர்வீகம் தமிழகமா..?

ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பின்போது... "உங்களுடைய பெற்றோரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்டுக்குப்பம்; அங்கு உங்கள் பெற்றோருக்கு நினைவுச்சின்னம் எழுப்புவீர்களா?' என்று ஒரு கேள்வி வாசிக்கப்பட்டது



அதைக் கேட்டவுடன்... சற்று வியப்புடன் புன்முறுவல் பூத்த ரஜினிகாந்த், மீண்டும் அந்தக் கேள்வியை வாசிக்கச் சொன்னார். அதோடு "இந்தக் கேள்வியைக் கேட்டவர் இங்கு வந்திருக்கிறாரா?' எனக் கேட்க, அந்த கேள்வியைக் கேட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திகேயன் எழுந்து நின்று ரஜினிக்கு மரியாதை தெரிவித்தார்.

இதையடுத்து அவரை சற்று உற்றுப் பார்த்த ரஜினிகாந்த் புன்னகைத் தவாறே... ""இந்தக் கேள்வியை நீங்களாகத்தான் கேட்டீர்களா? இல்லை... யார் சொல்லியாவது கேட்டீர்களா? என்றார். அதற்கு அந்த ரசிகர் "நானாகத்தான் கேட்டேன்'' என்றார்

"சரி... நீங்கள் சொல்வது பற்றி யோசிக்கிறேன்' என பதிலளித்தார் ரஜினிகாந்த். மகாராஷ்டிரத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாகப் பொதுக்கூட்டங் களிலும் திரைப்படங்களிலும் "என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களே' என விளித்தும், அவரைக் கன்னடர் எனப் பலர் விமர் சித்து வருவதும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் ரஜினியின் பெற்றோர், "தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்' என்ற அடிப்படையில் எழுந்த கேள்வி, ரஜினியை வெகுவாக ரசிக்க வைத்திருக்கலாம்.

செய்தி: படம்: நன்றி: தினமணி
4-நவம்பர்-2008: பக்கம் 12 - சென்னை பதிப்பு

*** *** *** *** ***

கடமையைச் செய்; பலனை "எதிர் பார்'!

தன்னுடைய பல படங்களில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கீதாஉபதேசத்தை வச னங்களாக உச்சரித்தவர் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தபோது மேடையில் அமைக்கப்பட்டிருந்த "கடமையைச் செய்; பலனை எதிர் பார்' என்ற வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ரசிகர்கள் உள்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது

ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான படத்தின் பின்னணியில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த அந்த டிஜிட்டல் பேனர் வாசகங்களைப் பற்றிப் பேசும்போது..

""நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். அதற்கான பலனையும் எதிர்பாருங்கள். நான் கூட ஆரம்பத்தில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே' என்ற கருத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நாம் சிரமப்பட்டு உழைக்கிறோம். ஏன் பலனை எதிர்பார்க்கக்கூடாது. எனவே நீங்கள் உழைத்ததற்கான பலனை எதிர்பாருங்கள். "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்பதுதான் நமது தத்துவம் என்றார் ரஜினிகாந்த்
இந்தக் கருத்து குறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது..

""இது எங்களுடைய தலைவர் அரசியலில் விரைவில் ஈடுபடுவார் என்பதைத்தான் காட்டுகிறது. ரஜினி தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்துவருகிறார். அதற்கான பலனும் அவருக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த வாசகங்களை ரஜினி தனக்காகச் சொல்லவில்லை. இத்தனை காலம் அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் நற்பணி, நலத்திட்டம் என தீவிரமாக உழைத்துவருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு..

"உரிய பலன்' விரைவில் கிடைக்கும். அதை எதிர்பாருங்கள் என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காகத்தான் இந்த வாசகங்கள்'' என்றார்.

Monday, November 3, 2008

ஈழத் தமிழர்களுக்கு உயிரும் தருவோம் - கருணாநிதி

வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம், தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.

உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்

கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;

வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்

இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு

இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு

அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு

சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-

அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்

அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்

வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!

இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி: Thatstamil