Sunday, November 23, 2008

மாசறு பொன்னே; முரசொலி மாறா ! - கருணாநிதி கவிதை

மறைந்த, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 5-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.வின் முன்னணித் தலைவருமான முரசொலி மாறனின் 5-வது நினைவு தினம் இன்று. இதையொட்டி முதல்வர் கருணாநிதி, அவருக்கு கவிதை மூலம் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் எழுதியிருப்பதாவது:


அண்ணா கண்ணுக்கு ஆச்சரிய குறியாக
மாசறு பொன்னே; வலம்புரி முத்தே!
அருமைக் கண்மணியே, அன்பு மாறனே!
ஓடி விட்டன ஐந்து ஆண்டுகள் உன்னைப் பிரிந்து!
உன்னை நினைவூட்டி என் நெஞ்சில் அலைபாயும் நிகழ்வுகளை
முரசொலி அலுவலக முகப்பில் நாங்கள் வைத்துள்ள சிலை;
அடுக்கடுக்காகக் காட்சியாக்கும்போது;
நீ தத்தித் தவழ்ந்த பருவம் தாளமிடுவது போல் தளிர் நடை போட்ட பருவம்;
என் தோளில் அமர்ந்து கோளிலி கோயிலுக்குப் போன பருவம்;
குவளைப் பள்ளியில் உன்னைக் குந்த வைத்தது முதல்
குடந்தைக் கல்லூரியில் சேர்த்து அக்காள் பெரியநாயகம் அரவணைப்பில் வளர்ந்து;
சேலம் கல்லூரியில் சிறப்புறு மாணவன் எனும் செவியினிக்கும் சேதியாலே சிந்தை குளிர்ந்து;
அண்ணா கண்களுக்கு ஆச்சரியக் குறியாகவும்
உன் அன்பு மாமனாம் என் கண்களுக்கு அழகும் அறிவும் கலந்த
மறக்க முடியாத மா மருந்தாகவும் விளங்கி;
எந்த மருந்துக்கும் இரக்கம் காட்டி இறங்கித் தொலையாத
இறுதி முடிவுக்கு இயற்கை ஆளாக்கிவிட்டது உன்னை!
எதை நினைத்து என்னைத் தேற்றிக் கொள்வது?
யாரை நினைத்து என் மனத்தை மாற்றிக் கொள்வது?
நீயும் சேர்ந்து வளர்த்த உயிர் போன்ற கழகம் இருக்கிறது!
அந்தக் கழகத்திற்கென ஒலித்து என்றைக்கும் கம்பீரம் குலையாத;
கையெழுத்து ஏடாகத் தொடங்கி;
திராவிடரின் தலையெழுத்தை உயர்த்திப் பிடிக்க
ஒலித்திடும் முரசொலி இருக்கிறது;
ஆனால் நீயில்லையே என் கண்ணே!
மாறன் என் தம்பியல்லவோ!
என்று மார்தட்டிச் சொன்ன மாமேதை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு உன் மறைவு;
என் போன்றார்க்கு எரிமலையின் நெருப்பலை போல் அல்லவோ;
வாய்த்து வாட்டி வதைத்து விட்டது!
அகரம் கற்று கொடுத்த கலைஞரென
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?
நீ எழுதிய புத்தகமா அது?
தமிழனுக்குச் சோகம் வரும்போதெல்லாம்
வேகமாக எழுகின்ற வினாவல்லவோ அது!
மாநில சுயாட்சியென்று மாமேதையாம் நீ எழுதிய
இந்த இயக்கத்தின் லட்சியப் புதையலாம் பெரும் நூலில்;
அறியாமை இருளில் மூடிக் கிடந்த
தமிழர்களின் விழி திறந்த பெரியார்
அரசியல் எழுச்சி எனும்
விளக்கேற்றி வைத்த அண்ணா
அன்பின் உருவங்களாம் எங்கள்
குடும்பச் சுடர்கள் முத்துவேலர், அஞ்சுகத்தாய்
ஆகியோரின் நீங்காத நினைவுக்கு!
என்று எழுதிவிட்டு;
எனக்கு அகரம் கற்றுக் கொடுத்து ஆளாக்கியவரும்
என் ஆசானுமாகிய கலைஞர் என்றும் கூறி,
நன்றி தெரிவித்திருக்கிறாயே; மாசற்ற உன்மனத்தில்
எழுந்த நன்றியுணர்வு அல்லவா அது?
அதனால்தான் என்றைக்கும்
உன் நிழற் படத்தையோ,
உருவச் சிலையையோ,
பார்க்கும் போதெல்லாம்
எனக்கு;
மாசறு பொன்னே
வலம்புரி முத்தே
காசறு விரையே
கரும்பே தேனே...
எனும் சிலப்பதிகார வரிகள்தான் என்
சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன
வாழ்க நீ இந்த
வையம் உள்ளவரை!


செய்தி: நன்றி: Thatstamil

No comments: