Friday, April 11, 2008

தமிழகம் முழுவதும் 19ம் தேதி விளக்கேற்ற ஜெ. அழைப்பு !

திமுக ஆட்சியில் இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு ஒளியேற்றும் வகையில், வருகிற 19ம் தேதி மாலை 6.30 மணிக்கு அதிமுகவினர், இளம் பெண்கள் பாசறையினர், இளைஞர் பாசறையினர் தங்களது வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்ளில் விளக்கேற்றி வைத்து 'இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று முழக்கமிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. மறைமுக பேருந்துக் கட்டண உயர்வால் மக்கள் பரிதவிக்கின்றனர். விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இதனால் மக்கள் மனில் ஆழ்ந்த கவலை குடி கொண்டுள்ளது. ஒளி பிறக்காதா, இந்த சூழ்நிலை மாறாதா, வளமான வாழ்வு அமையாதா, நமக்கு எதிர்காலமே இல்லையா, இப்படியே சீரழிந்து மடிய வேண்டுமா என்ற கவலை மக்களைக் கவ்விக் கொண்டுள்ளது.

மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி, ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதை உருவாக்க அதிமுக இருக்கிறது என்ற உணர்வை மக்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கு அடையாளமாக, அதிமுகவினர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையினைச் சேர்ந்தவர்கள், வருகிற 19ம் தேதியன்று சித்திரா பவுர்ணமி நாளன்று, மாலை 6.30 மணிக்கு வீடுகள் தோறும், ஆலயங்கள் தோறும், வழிபாட்டுத் தலங்கள் தோறும், அலுவலகங்கள் தோறும் குடும்பத்தோடும், சக ஊழியர்களோடும், தனியாகவோ அல்லது கூட்டாகவோ, விளக்கேற்றி வைக்க வேண்டும்.

குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு அல்லது அகல் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். அப்போது, இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழக்கமிட வேண்டும். இந்த முழக்கம் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றி: Thatstamil

2 comments:

பிருந்தன் said...

//ஒளியேற்ற வாருங்கள் அம்மா//

என்று சொல்லாமல் செய்வோர் பெரியோர்!

சொல்லிச் செய்வோர் சிறியோர்!!

சொல்லியும் செய்யார் எழியோர்!!!

:-)))))))))))))))))))))))

Thamizhan said...

அன்று:
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
சாக்ரடீசு: ஏன் இப்படியும் சொல்லலாமே!
இருண்ட வீட்டிற்கு ஒளி விளக்கு!

இன்று:
பெளர்ணமியன்று விளக்கேற்றி ஒளி பரப்புங்கள்.
மக்கள்:முழுமதியைப் பார்த்துச் சிரிக்கும்
அகல் விளக்கு.