குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரி - தமிழகத்தில் இப்போது எங்கு முக்கியக் கொலைகள் நடந்தாலும், அதில் ‘மதுரை நபர்’களின் பங்களிப்பும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு கூலிப் படைகளின் கோட்டையாக மதுரை மாறிவிட்டதோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் தமிழகத்தை அதிர வைத்த, திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படுகொலையிலும் கூட, கொலைக் கும்பலில் இடம் பெற்ற கிருஷ்ணகுமார் (வயது 28), காக்கு வீரன் (வயது 27) ஆகிய இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.
கிருஷ்ணகுமார் மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவன். காக்கு வீரனின் வசிப்பிடம் மதுரை சோலையழகுபுரம். இதில் கிருஷ்ணகுமார் மீது மதுரை நகர போலீஸ் ஸ்டேஷன்களில் எந்த வழக்கும் இல்லை. ஆனால், மதுரை புறநகரிலுள்ள அவனியாபுரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவன்மீது ஒரு வழக்கு இருக்கிறது. அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் டாக் ரவி கும்பல் வழிப்பறி செய்த வழக்கிலும் கிருஷ்ண குமாரின் பெயர் உள்ளதாம். காக்கு வீரன் மீது, கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக மதுரை ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.
மதுரை செல்லூர் பகுதியில் 2005_ம் ஆண்டு பாண்டியராஜன் என்பவரைக் கொலை செய்த வழக்கிலும் காக்கு வீரனின் பெயர் இருந்திருக்கிறது. அந்த வழக்கிலிருந்து அண்மையில்தான் அவன் விடுதலையானானாம். இந்த இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்த சூழ்நிலையில், ஜாமீனில் வெளிவந்த பின் இவர்கள் தலைமறைவாகி விட்டனர். போலீஸார் இவர்களைத் தேடி வந்த நிலையில்தான் பூண்டி கலைச்செல்வன் வழக்கில் இருவரும் சிக்கியிருக்கிறார்கள்.
காக்கு வீரன், கிருஷ்ணகுமார் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சிலரிடம் நாம் பேசிப் பார்த்தோம். “மதுரை ஆட்களுக்கு இதெல்லாம் சகஜ மப்பா’’ என கேஷ§வலாக ஆரம்பித்து நம்மிடம் பேசி னார்கள் அவர்கள்.
“இன்றைக்கு ஏதோ சுற்றுலா செல்வது போல ஹாயாக வெளியூருக்குப் போய் கொலை செய்து விட்டு வரும் ஆசாமிகள், மதுரையில் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான் சமீபகாலமாக தமிழகத்தில் சென்னை உள்பட எங்கே கொலை நடந்தாலும், அதில் மதுரை நபர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
பூண்டி கலைச்செல்வன் கொலையில் மதுரையைச் சேர்ந்த இருவர் சிக்கியிருக்கிறார்கள். வழக்கமாக கூலிப் படையாகச் செல்பவர்கள் யாரும் சிக்குவதில்லை. யாருக் காக அவர்கள் கொலை செய்கிறார்களோ, அவர்தான் பிடிபடுவார். தா.கிருட்டிணன், ஆலடி அருணா கொலை வழக்குகளிலெல்லாம் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் யாராவது கைதானார்களா? இல்லையே. கலைச்செல்வன் கொலையில் வெடிகுண்டு பயன்படுத்தியதால்தான் இந்த இருவரும் சிக்கினார்கள். இந்த இரண்டு பேரும் திருட்டு, வழிப்பறியில் வேண்டுமானால் எக்ஸ்பர்ட்டாக இருக்கலாம். ஆனால் கொலை அவர்களுக்குப் புதிது.
பொதுவாகக் கூலிப்படையில் செல்பவர்களுக்கு யாரைக் கொல்லப் போகிறோம்? கொல்லப்படும் நபரின் முக்கியத்துவம் என்ன? என்பதெல்லாம் தெரியாது. இந்தக் கொலைக்காகத் தங்களைப் பயன்படுத்துபவர்கள் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதும் தெரியாது. ‘இந்த ஆளை வெட்டி வா’ என்றால் வெட்டிவிடுவார்கள். வேலையைப் பொறுத்து பணம் கிடைக்கும். அதுவும் சொற்பப் பணம்தான் கிடைக்கும்.
கூலிப்படையில் இடம் பெறும் ஆட்கள் அதிகபட்சமாக பத்து வருடம்தான் பரபரப்பாகச் செயல்பட முடியும். அதற்கிடையே போலீஸில் சிக்கிக் கொண்டால் அதோடு சரி. இவர்கள் குடும்பம் பெரிய அளவு வசதியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பலரது குடும்பங்கள் வறுமையில்தான் இருக்கின்றன. ஆனால் இவர்களை வைத்து வேலை வாங்கும் தாதாக்கள், ரவுடிகள் செழிப்பாக இருக்கிறார்கள். பணத்தில் புரள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இருபத் தைந்து கூலிப்படைகள்தான் இருக்கும். இந்தக் கூலிப்படைகளை வைத்திருப்பவர்கள் மாற மாட்டார்கள். அவர்களுக்குக் கீழே இயங்கும் ஆட்கள்தான் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறிக்கொண்டே இருப்பார்கள். கூலிப் படைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதமும் சுவாரஸ் யமானது.
இந்த வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் மையமே ஜெயில்தான். ஜெயிலில் உள்ள ஒவ்வொரு பிளாக்குமே ஏதாவது ஒரு ரவுடியின் கண்ட்ரோலில்தான் இருக்கும். விவசாயம், வேறு தொழில் இல்லாமல் சின்னச் சின்ன குற்றங்களைச் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறவர்கள் இதில் ஏதாவது ஒரு ரவுடிக் குழுவிடம் தஞ்சமடைந்து விடுவார்கள். இப்படி புதிதாக ஜெயிலுக்கு வருபவர்களை அவர்களது சாதி, வட்டாரம் அல்லது அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் பெரிய ரவுடிகள் அரவணைத்துக் கொள்வார்கள்.
இப்படி, தாங்கள் அரவணைத்துக் கொண்ட புதிய கைதிகளின் திறமையை ஜெயிலுக்குள்ளேயே பெரிய ரவுடிகள் துல்லியமாக மதிப்பிட்டு விடுவார்கள். ‘இவனை வெளியே அனுப்பி எதற்கு பயன்படுத்தலாம்?’ என மனக் கணக்கு போடுவார்கள். அதிலும் இருபத்தைந்து வயதுக்குள், கட்டுமஸ்தாக இருக்கும் புதிய கைதிக்கு ஏக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அத்துடன், இந்தப் ‘புதுக் கைதி’ பற்றி வெளியே உள்ள தங்கள் ஆட்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். இவனது சேவை தேவையா? என்று கேட்டு வைப்பார்கள். ‘தேவை’ என வெளியே இருந்து சிக்னல் வந்தால், அந்தப் புதிய கைதிக்கே தெரியாமல் அவனை வெளியே கொண்டு வர கிடுகிடுவென வேலைகள் நடக்கும்.
முதல்கட்டமாக ரவுடியின் ஆட்கள் மனு போட்டு புதிய கைதியை ஜெயிலில் பார்க்க வருவார்கள். அவனுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார்கள். முதன் முதலில் ஜெயிலுக்குள் போனவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியும். ‘என்னைப் பெத்தவங்க கூட பார்க்க வரலை. நீங்கதாண்ணே பார்க்க வந்திருக்கீங்க’ என மாய்ந்து போவான். ‘உன்னை ஜாமீனில் வெளியே கொண்டு வர அண்ணன் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம்’ என அவர்கள் சொல்லிய பிறகுதான், இதெல்லாம் ‘அண்ணனின் வேலை’ என அந்தக் கைதிக்குத் தெரியும். ‘உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்?’ என கண்ணீர் மல்க, ஜெயிலில் அந்த ரவுடிக்குக் கால் அமுக்கி விடுவான்.
அதன்பின் புதுக் கைதியை வெளியே எடுப்பதற்கான வேலைகள் மளமளவென நடக்கும். மதுரை கோர்ட்டிற்கு வெளியே போலி ஜாமீன்தாரர்களை சப்ளை செய்யும் புரோக்கர்கள் சிலரை அணுகி, ஒரு ஜாமீனுக்கு எண்ணூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்வரை கொடுத்தால், வி.ஏ.ஓ. சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஜாமீனில் வெளியே வருவதற்கான ஆவணங்களுடன், ஆட்களையும் தந்து விடுவார்கள். அதன்மூலம் புதிய கைதிக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாமீன் கிடைத்துவிடும். ஜெயிலைவிட்டுப் புறப்படும்முன் பெரிய ரவுடியை நன்றிப் பெருக்கோடு பார்த்து, ‘வாழ்நாளில் உங்களை மறக்கமாட்டேன்’ என காலில் விழுந்து கும்பிட்டு விட்டுப் புறப்படுவான். ‘வெளியே போய் நீ இவரைப் பார்’ என்று ரவுடி அண்ணன் வேண்டுகோள் விடுப்பார். அதை சிரமேற் கொண்டு அந்த நபரை புதிய கைதி பார்ப்பான். அங்கே யாரையாவது வெட்டவோ.. குத்தவோ அசைன்மெண்ட் ரெடியாக இருக்கும். இந்த இளைஞனால் அதைத் தட்ட முடியாது. செஞ்சோற்றுக் கடனாக நினைத்து அதைச் செய்வான். ஆக, ஒரு பிக்பாக்கெட் வழக்குக்காக ஜெயிலுக்குப் போனவன் கொலை செய்யும் கூலிப்படையாளாக மாறிவிடுவான்.
மதுரை ஜெயில், இன்றைக்கு கூலிப்படைக்கான ஆட்களைத் தயாராக்கும் கூடமாக மாறிவருகிறது என்று கூடச் சொல்லலாம். காரணம், மதுரையைச் சுற்றி ஆறு ஏழு மாவட்டங்களின் முக்கியக் குற்றவாளிகள் மதுரை ஜெயிலில்தான் அடைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், வெளிமாவட்ட ஜெயில்களில் பிரச்னைக்குரிய நபராகக் கருதப்படும், ‘கமான்ட் பிரிஸனர்’ என அழைக்கப்படும், முக்கியக் குற்றவாளிகளையும் மதுரை ஜெயிலில் தான் அடைக்கிறார்கள். சின்ன குற்றங்களைச் செய்து ஜெயிலுக்குச் செல்பவர்கள் இதுபோன்ற பெரிய கிரிமினல்களின் ‘ஒளி வட்டத்துக்குள்’ சிக்கி கூலிப் படைகளில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.
இன்றைக்கு வெளி மாவட்டங்களில் இருக்கும் கூலிப் படையினர் மதுரை ஆட்களைத் தேர்வு செய்ய பல கார ணங்கள் இருக்கின்றன. அரிவாளோ, வெடிகுண்டோ வேலைக்குத் தேவையான சாமான்களை (ஆயுதங்களை) மதுரைக்காரர்களுக்கு சப்ளை செய்யத் தேவையில்லை. அவர்களே அதை வைத்திருப்பார்கள். அதோடு, செய்யும் வேலையைத் துல்லியமாகச் செய்வதோடு, குறைந்த கட்டணத்திலும் முடித்து விடுவார்கள். அதுமட்டுமல்ல, ஒரு விஷயம் முடிந்து போன பின்னர் அதுபற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.
கூலிக்குத் தாக்குதல் நடத்துவதை, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிலர் குடிசைத் தொழில் போலவே செய்து வருகிறார்கள். கொலை செய்வது மட்டும்தான் இவர்களது வேலை என்று நினைத்துவிடக்கூடாது. மிரட்டல், லேசான ஊமைக்காயங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் இவர்கள் செய்வார்கள். கூலிப்படையில் எந்த அசைன்மெண்டும் இல்லாத போது, திருப்பூர் பனியன் கம்பெனிகள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அவ்வப்போது விசிட் செய்து வசூலித்துவிட்டு வரும் ஆட்கள் நிறையப் பேர் மதுரையில் இருக்கிறார்கள்.
இன்றைக்குத் தமிழகத்தின் பிரதான ஏழு ஜெயில் களில் உள்ள முக்கிய குற்றவாளிகளிடம் மொபைல் போன் இருக்கிறது. அவர்கள் ஜெயிலில் இருந்தபடியே வெளியே நடத்தவேண்டிய வேலைகளைத் துல்லியமாக ஆபரேட் செய்கிறார்கள். பிரபல கைதிகளை ஜெயில் நிர்வாகம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாது. காரணம், அவர் களைச் சீண்டினால் ஜெயிலின் அமைதியைக் கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தான்.
பூண்டி கலைச்செல்வன் கொலையைப் பார்த்தால் அதற்கான திட்டம் தீட்டப்பட்ட இடம் திருச்சி ஜெயில். கொலையாளிகளைத் தேர்வு செய்த இடம் மதுரை. சம்பவம் நடந்ததோ கொரடாச்சேரியில். ஜெயிலில் மொபைல் புழக்கம் இருக்கும் வரை கொலைக்காக அங்கு திட்டமிடுவதைத் தடுக்க முடியாது. இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால், மணல்மேடு சங்கர் தொடர்பான ஒரு விஷயத்தையே சொல்லலாம்.
மணல்மேடு சங்கரை என்கவுன்ட்டர் செய்ய போலீஸ் திட்டமிட்டிருந்தபோது, பெரிய இடத்து சிபாரிசுகள் மூலம் அவன் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருந்து கழற்றி விடப்பட்டான். ஆனால் அவனது பெயர் மீண்டும் அந்த லிஸ்ட்டிற்குள் வந்துவிட்டது. ‘இப்படி வரச்செய்தது பூண்டி கலைச்செல்வன்தான்’ என்று ஜெயிலில் இருந்த மணல்மேடு சங்கரிடம் சிலர் மொபைலில் போட்டுக் கொடுத்தார்கள். இதைக் கேட்ட சங்கர் ஆடிப்போனான். அப்போதே பூண்டி கலைச்செல்வனுக்கு வேட்டு வைக்க மதுரையில் இருந்து ஒரு டீமை அனுப்பினான். என்ன காரணத்தினாலோ அந்த டீம் தங்கள் அசைன்மெண்டை நிறைவேற்ற முடியவில்லை. ‘கலைச்செல்வன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் அவரை வெட்டாமல் வந் தோம்’ என அந்த டீம் சாக்குப்போக்குச் சொல்லியது. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும்.
மணல்மேடு சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிறகு, அவனது ஆதரவாளர்களுக்கு பூண்டி கலைச்செல்வன் மீது கோபம் இருந்தது. ஆனால் அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவிழந்துவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல், சங்கருக்கு வேண்டிய பலர் பல்வேறு வழக்குகளில் சிக்கி கடலூர், திருச்சி உள்ளிட்ட ஜெயில்களில் அடைக்கப் பட்டு சிதறிப்போனார்கள்.
இந்தச் சூழ்நிலையில் பூண்டி கலைச்செல்வனைத் தீர்க்க அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் திட்டமிட்டார். அவரி டம் பணமிருந்தது. ஆட்கள் இல்லை. அப்போது அவர் மணல்மேடு சங்கரின் ஆதரவாளர்களை அணுகியிருக் கிறார். பண உதவி செய்யவும் தயாராகியிருக்கிறார். இந்த நிலையில், மதுரை ஜெயிலில் மணல்மேடு சங்கர் இருந்த போது அவனுடன் நட்பு பாராட்டிய கிருஷ்ணகுமாரும் காக்கு வீரனும் இந்தக் கூலிப்படைக்கு செலக்ட் ஆகியிருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு இதற்காகவே அவர்கள் வெளியே வந்தார்கள். இப்படி கூலிப்படை ஆளாகத் தொழிலில் இறங்கியவர்களின் கதி, புலிவாலைப் பிடித்தவன் கதிதான்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள் அந்த கிரிமினல்கள்.
முன்பு தாதாவாக இருந்த ஒருவரிடம் பேசினோம்..
“மதுரையில் கொலைகள் செய்பவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் ஏதோ மோட்டிவ், முன் விரோதம் காரணமாகத்தான் செய்வார்கள். இருபத் தைந்து சதவிகிதம் பேர் பணத்துக்காகக் கொலை செய்பவர்கள். இதில், ‘நான் திருந்திவிட்டேன்’ என்று நல்லவன் போல மதுரைப் பகுதியில் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவர், கூலிக்காக கொலைகள் செய்பவர். உடன் பிறந்த தம்பியையே சொத்துக்காகக் கொன்றவர்.
கூட்டமாக ஐம்பது பேர் இருந்தாலும் யாரைப் போட வேண்டுமோ, அந்த ஆளை கரெக்டாகப் போட்டுத் தள்ளும் சாமர்த்தியம் மதுரை ஆட்களுக்கு உண்டு. அதனால்தான் மதுரை ஆட்களை வெளியூர் கூலிப்படையினர் விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் செய்யும் வேலையை மதுரையைச் சேர்ந்த ஓர் ஆள் சுத்தமாகச் செய்துவிட்டு வந்துவிடுவான். அதுவும் தைரியமாகச் செய்வதில் மதுரைக்காரர்கள் சூரர்கள். இப்படி திறமை ஒரு பக்கம் இருக்க, இவர்களது ரேட்டும் குறைவு. முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி ரவுடிகள்தான் குறைந்த ரேட்டுக்குக் கூலியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது தமிழ்நாட்டிலேயே மதுரை ரவுடிகளுக்குத்தான் ரேட் குறைவு.
வெளியூர்களில் ஒரு ரவுடி நினைத்தால் ரேஷன் கடையில்கூட மிரட்டி காசு வாங்கிவிட முடியும். ஆனால் மதுரையில் ரேஷன் கடைகளில் இருக்கிறவனே ‘நான் முன்னாள் ரவுடி’ என மாமூல் கேட்கப் போகிற ரவுடி யையே மிரட்டுவான். அதனால் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காக, இப்படி குறைந்த ரேட்டுக்கு கூலிப்படைக்குப் போகிறார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்குத் தங்கள் மீதுள்ள வழக்கை நடத்துவதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதனால் இப்படி அடியாளாகப் போவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கூலிப்படையில் இடம் பெறவும், கட்டப் பஞ்சாயத்து செய்வதற்காகவுமே மதுரையில் சிலர் அரிவாளைத் தூக்கும்நிலை ஏற்பட்டிருக்கிறது.. சட்டவிரோத செயல்களைச் செய்வதற்கு இந்த அடையாளங்கள் தேவைப்படுகின்றன. மதுரையில் முனிச்சாலை, வைகை வடகரை, ஆரப்பாளையம், சிந்தாமணி, கரிமேடு, புதூர், கரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் லட்சக்கணக்கில் கஞ்சா வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு பக்கபலமாக கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். இது குறித்து போலீஸ§க்கும் தெரியாமல் இல்லை.
மதுரையில் இப்போது கொலையின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ‘இங்கே தொட்டால் அங்கே வலிக்கும்’ என்பது அவர்களின் புது பாலிஸியாக இருக்கிறது. அதாவது, அரசியல் பிரமுகர்களை விட்டுவிட்டு அவர்களின் மகன்களைக் கொல்வதை ஒருவித ஸ்டைலாக இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். மதுரை நகர தி.மு.க. செயலாளராக இருக்கும் வேலுச்சாமியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்னர், கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மாரிசாமியின் மகன் கொலையானார். சில தினங்களுக்கு முன்பு மதுரை தி.மு.க. பகுதிச் செயலாளர் முருகனின் மகன் கொலை செய்யப்பட்டார். அப்பாவை விட்டுவிட்டு மகனைக் கொலை செய்வது என்பது கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்க்க வேண்டிய விஷயம்.
சென்னை கிரிமினல் பணத்துக்காகக் கொலை செய்வான். நெல்லைக்காரன் சாதிக்காகக் கொலை செய்வான். மதுரைக்காரன் நட்புக்காகக் கொலை செய்வான். இந்த சூத்திரம் கூலிப்படையினர் எல்லோருக்கும் தெரியும். அதனால் மதுரைக்காரனை அணுகி, அவனுக்கு பத்து நாள் தண்ணியும், பரோட்டோவும் வாங்கிக்கொடுத்து செலவுக்குக் கொஞ்சமாகக் காசு கொடுத்து நட்பாக்கிக் கொள்வார்கள். பின்னர், ‘எனக்காக இதைச் செய் நண்பா’ என்பார்கள். இவனும் பாசத்தோடு அரிவாளைத் தூக்கிப் போய் கொலையைச் செய்து விடுகிறான். மதுரைக்காரங்க பாசக்கார பயலுக’’ என முடித்துக்கொண்டார் அந்த எக்ஸ் தாதா.
போலீஸ் வட்டாரத்தில் இதுபற்றிப் பேசினோம்.. “மதுரையில் ரவுடிகள் பெருக அரசியலும் சாதியும்தான் காரணம். இவர்கள் ரவுடித்தனம் செய்யத் தொடங்கிய வுடனேயே ஏதாவது ஓர் அரசியல் கட்சி அல்லது சாதி அமைப்புகளுக்குள் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்கிறார்கள்.
பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் ஆதரவாளராகவே இவர்கள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். இதில் யாரைப் பிடிப்பது? யாரை என்கவுன்ட்டர் செய்வது? இருந்தாலும் கடந்த பதினொரு மாதங்களில் மதுரையில் இருபத்தாறு பேரைக் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். ஐநூற்று ஐம்பத்தொரு ரவுடிகளை லிஸ்ட் எடுத்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்கள் அவர்கள்.
வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசிப் பார்த்தோம். “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மதுரையில் கொலைகள் அதிகரித்துள்ளன. மதுரையில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதற்கான அடையாளம்தான் இது. அதுமட்டுமில்லாமல், இதுவரை இரண்டு கொலைகளுக்கான துப்பு துலங்கவில்லை. காவல்துறை துணிச்சலான நடவடிக்கையில் இறங்கினால் தான் சட்டம் _ ஒழுங்கைப் பாதுகாக்க முடியும்.
சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, மதுரைக் காரர்கள் என்றாலே காலரைத் தூக்கி விட்டு, நாக்கை மடித்துக்காட்டி, வீச்சரிவாளைக் காட்டுவதைப் போல காண்பிக்கிறார்கள். இதைப் பார்க்கும் வெளி மாவட் டக்காரர்களுக்கு மதுரை என்றால் இப்படித்தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மதுரைக்காரன் பென்சில் சீவுவதற்கே அரிவாளைப் பயன்படுத்துவான் போலிருக்கு என்ற தவறான எண்ணத்தையும் இந்த சினிமாக்களும், சீரியல்களும் ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, மதுரையின் இமேஜ் கெடாமல் பார்த்துக் கொள்வதில் மீடியாக் களுக்கும் பங்கிருக்கிறது’’ என வருத்தத்துடன் சொல்லி முடித்தனர் அவர்கள்.
மதுரை, கூலிப்படையாட்களின் கூடாரமாக மாறி விடாதபடி தடுக்கும் பொறுப்பு காவல்துறையின் கைகளில்தான் உள்ளது. மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் இது தான்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Wednesday, November 28, 2007
மதுரைக்காரர்களே - இது நெசமா ?
Friday, November 16, 2007
தமிழ் சினிமா பரிந்துரை- உங்கள் வாரிசுக்கு
சமீபத்தில் சில வாரங்களுக்கு முன் சர்வேசன் தனது பதிவில், தமிழில் 75 ஆண்டுகளில் சிறந்த படங்களாக குமுதம் பட்டியலை வெளியிட்டு தனது மற்றும் பிறரது விருப்ப பட்டியலையும் (பின்னூட்டங்களில்) வெளியிட்டிருந்தார். நான் இந்த பதிவில் கேட்பது வேறு.
தமிழ் வலைப்பதிவுலகில் புழங்கி வரும் பெரும்பாலானவர்கள் 20 வயது முதல் 60 வரையிலான பெருமக்கள். உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த எந்த தமிழ் சினிமா படங்களை பார்க்கும் படி சிபாரிசு பண்ணுவீர்கள் அல்லது அதன் டிவிடியை வாங்கி இப்போதே சேமித்து வைப்பீர் ? (அதுவும் மோசர் பாயர் மற்றும் இன்ன பிற கம்பெனிகளின் குறைந்த விலை டிவிடி/சிடிக்கள் கிடைக்கும் போது)
இந்தப் படங்களை நீங்கள் சிபாரிசு செய்யும் (அல்லது சேமிக்கும்) காரணம் என்னவென்றும் பதிவிடலாம். எந்தப் படத்தை வருங்கால சந்ததியினர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் (அவர்கள் விருப்பப்படி); உங்கள் பட்டியலில் உள்ள படங்களை ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்கச் செய்து உங்கள் காரணத்தை அவர்களிடம் சொல்லும் விதமாக இருக்கவேண்டும் உங்கள் லிஸ்ட்.
காரணங்கள் - சிறப்பான கதை, இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, நடிப்பு, சண்டைக் காட்சிகள் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது உங்களை ஈர்த்ததுடன் உங்கள் மகன்/மகளை பார்க்கச் சொல்லும் படி இருக்கவேண்டும். அவர்கள் படங்களைக் காண்பார்களோ இல்லையோ - நமது ஆசையாக சில படங்களை அவர்கள் பார்க்கவைக்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் படங்களாக இருக்கவேண்டும்.
இந்த ஆட்டத்திற்கு நான் அழைக்கும் பதிவர்கள் (படம் தமிழ் திரைப்படமாக இருக்க வேண்டும் - பிற மொழிப் படங்களை வேறு லிஸ்டில் சேர்க்கலாம்)
- ஆசிப் மீரான்
- ரத்னேஷ்
- கோவி.கண்ணன்
- லக்கி லுக்
- இட்லி வடை
- பெயரிலி கனா.ரவன்னா
- செல்வராஜ்
- நா.கண்ணன்
- சுப்பையா சார்
- தேசிகன்
- டுபுக்கு
- ஐகாரஸ் பிரகாஷ்
- டி.பி.ஆர்.ஜோசப் சார்
- வற்றாயிருப்பு சுந்தர்
- மோகந்தாஸ்
- நாராயண் (உருப்படாதது நாராயண்)
- மூக்கு சுந்தர்
- ராமச்சந்திரன் உஷா
- துளசி டீச்சர்
- கனடா வெங்கட்
- தருமி சார்.
- அபுல் கலாம் ஆசாத்
எனது லிஸ்ட் வரும் பதிவுகளில் வரலாம் :-)
உங்கள் வரிசை எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் கொண்டிருக்கலாம். ஆனால் அதை இயக்குனர் அல்லது நடிகர்/நடிகை வகைப் படுத்தினால் நலம். மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கலாம்.
உதாரணம்:
புராணப் படங்கள்
ரஜினிகாந்த் படங்கள்
பீம்சிங் படங்கள்
ஸ்ரீதர் படங்கள்
சிவாஜிகணேசன் படங்கள்
எம்.ஜி.ஆர் படங்கள்
சாவித்திரி படங்கள்
பத்மினி படங்கள்
கமல்ஹாசன் படங்கள்
பாலசந்தர் படங்கள்
சத்யராஜ் படங்கள்
பாலுமகேந்திரா படங்கள்
கே.எஸ்.ரவிக்குமார் படங்கள்
விசு படங்கள்
இளையராஜா (இசைக்காக)
நாகேஷ் படங்கள்
கவுண்டமணி செந்தில் படங்கள்
ராமராஜன் படங்கள்
வடிவேலு படங்கள்
விவேக் படங்கள்
etc etc
பதிவு இடுவோருக்கு நன்றி. நீங்களும் பிற பதிவர்களை இந்த ஆட்டத்திற்கு அழைக்கலாம்.
நான் கூப்பிடவிரும்பும் இன்னும் பல பதிவர்கள் பட்டியலில் அப்புறம்.
Friday, November 2, 2007
நடிகர் திலகம் மனைவி - கமலா - மறைவு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் துணைவி கமலா அம்மாள். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் சென்னையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
செய்தி: தினமலர்
சிவாஜி குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.