Monday, October 13, 2008

கட்சி தொடங்கினால்..! : ரஜினிகாந்த் எச்சரிக்கை



"என் பெயரில் கட்சி தொடங்குவது, கொடி அறிமுகப்படுத்துவது, என் படத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை மன்றத்தில் இருந்து நீக்குவேன். அதன்பின்னும், அதை தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.


தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். ஆனால், இதை ரஜினி ஏற்கவில்லை.

இந்நிலையில், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், “தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். ரஜினி படத்துடன் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தனர். பின்னர், கோவை தெற்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் அபு ஆகியோர் கூறுகையில், ‘‘ரஜினி அரசியலுக்கு வருவார் எனக் காத்திருந்து நொந்து போய் விட்டோம். அதனால், நாங்களாகவே, புதிய கட்சியைத் தொடங்கி விட்டோம்’’ என்றனர்.

இந்நிலையில், கட்சி தொடங்கியவர்களை மன்றத்தில் இருந்து ரஜினி நீக்கினார். இதை மன்றத்தின் கோவை மாவட்ட செயலாளர் சிங்கை உலகநாதன் நேற்று அறிவித்தார். தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தி கட்சி தொடங்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்து ரஜினி அறிக்கையும் வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

சமீப காலமாக ரசிகர் மன்றத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு நிலவி வருகிறது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தினால் நானும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது.

தற்போது நான் ‘எந்திரன்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது ரசிகர்கள் அவரவருக்கு விருப்பமுள்ள அரசியல் கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் தலைமை மன்றத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்பும், அதே செயலைத் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் செய்திகளையும், அறிக்கைகளையும் பத்திரிகைகள் தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Ôஅரசியலுக்கு நான் வந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாதுÕ என்பதை இறுதியாகவும், உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நிலையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை வரவேற்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 14-10-2008 (சென்னை பதிப்பு)

அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் - ஜெயலலிதா

முதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.

காவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.

சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அண்ணனுக்கு நன்றி!'

மேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.

அழகிரி அராஜகம்:

அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: Thatstamil