Tuesday, February 10, 2009

பாலாவின் திறமைக்கு தலை வணங்குகிறேன்-ரஜினி

தமிழ் ரசிகப் பெருமக்கள் அனைவரும் ஆவலுடன் பார்க்க விரும்பிய படங்களுள் சமீபத்தில் முதலிடம் பெற்றது பாலாவின் "நான் கடவுள்".

விமர்சனங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ரசிகர்கள் பார்க்க வேண்டிய உன்னதப் படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் படம் இது.

உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் குறித்து சில வேறுபட்ட பார்வைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தப் படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அளவிட முடியாதது.

நான் கடவுள் படத்தைப் பார்க்கும் ஆர்வம் திரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல... திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்துக்கும் இருந்ததாம்.

அதனால் படம் ரிலீஸான உடனே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம் தனது பிஆர்ஓ நிகில் முருகனிடம்.

அதன்படி சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட, நான் கடவுள் படம் பார்த்தார் ரஜினி. இந்தப் படம், கதைக் களம், கதை நிகழுமிடங்கள் ரஜினிக்குப் புதிதல்ல. இமய மலையில் பல விதமான சாதுக்களைப் பார்த்த ரஜினியால், இந்த அகோரி சாதுக்கள் மற்றும் அவர்களின் உலகத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததாம். (அதைக் கைப்பட ஒரு கடிதமாகவே எழுதியுமிருக்கிறார் ரஜினி!)

படம் முடிந்ததும், பாலா மற்றும் ஆர்யாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினி, இருவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


படம்: நன்றி: தட்ஸ்தமிழ்

"வெரி குட்... பிரமாதம் பாலா. ரொம்ப எமோஷனலாயிட்டேன் படம் பார்த்து. குட்... உங்களால மட்டும்தான் இப்படியொரு படம் பண்ண முடியும் பாலா. எக்ஸலன்ட் ஒர்க். இந்தப் படத்தை நீங்க ப்ரஸண்ட் பண்ண விதம் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். கிளாஸ் பிக்சர்..." என்று பாராட்டினாராம்.

படத்தின் நாயகன் ஆர்யாவையும் மிகவும் பாராட்டியுள்ளார் ரஜினி. இந்த சின்ன வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து வித்தியாசமான படம் பண்ணதுக்கு வாழ்த்துக்கள், என்று ரஜினி கூறியதும் நெகிழ்ந்து போய்விட்டாராம் ஆர்யா.

ரஜினியின் கடிதம்:

பாலாவைப் பாராட்டி ரஜினி கைப்பட எழுதியுள்ள கடிதம்:

"திரையுலகில் நான் கடவுள் போன்ற படம் இதுவரை வந்ததில்லை. பொதுவாக அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அன்றாட அரசியல் வாழ்க்கை பற்றித்தான் தெரியும்.

ஆனால் இந்த உலகில், இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாத எத்தனையோ வாழ்க்கைகள் இருக்கு. இதில் Underworld Mafia-க்களிடம் சிக்கித் தவிக்கும் பிச்சைக்காரர்கள் மற்றும் ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டு வாழ்க்கைகளையும் யதார்த்தமாக திரையில் கொண்டு வந்திருக்கும் பாலா அவர்களின் அசாத்திய முயற்சிக்கும், திறமைக்கும் நான் நெஞ்சுருகி, தலைவணங்கிப் பாராட்டுகிறேன்.

இமய மலையில் பல அகோரிகளை நேரில் சந்தித்தவன் என்ற முறையில் ஆர்யா அவர்களின் யதார்த்தமான அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்ன மெய்சிலிர்க்க வைத்தது

படத்தில் நடித்த அனைத்து ஊனமுற்றவர்களின் நடிப்பும் என்னை கண்கலங்க வைத்தது. இந்த மாதிரி ஒரு திரைக்காவியம் தமிழில் வந்தது என் தலையை நிமிர வைத்திருக்கிறது. இனிமேல் ஒரு படம் இதுபோல் வரப்போவதுமில்லை.

இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் ரஜினிகாந்த்"

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் ரஜினிகாந்த்.

சமீப காலத்தில் ரஜினி இந்த அளவு நெகிழ்ந்து பாராட்டிய படம் அநேகமாக நான் கடவுளாகத்தான் இருக்கும்!

பாராட்டுக்களும் விருதுகளும் தொடரட்டும் பாலா!

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

2 comments:

Muruganandan M.K. said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்