Tuesday, August 26, 2008

தமிழ்நாடு குடிகார நாடு ? - ராமதாஸ்

மது விற்பனையை அரசு தொடர்ந்து அதிகரித்தால் தமிழ் நாட்டிற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மதுவிலக்குப் பிரச்சனையில் கொள்கையற்ற அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று பாமக சார்பில் "தமிழ்நாடு அரசுக்கான மாற்று மது ஒழிப்பு கொள்கை' குறித்த வழிமுறைகளை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை கொண்டு வருதற்கான வழிமுறைகள் இந்த கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதனை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

தமிழக அரசுக்கு மாற்று தொழில் கொள்கை, வேளாண்மைக் கொள்கை, இளைஞர் நலன் குறித்த கொள்கை, சென்னை போக்குவரத்து பிரச்ச னைக்கான மாற்றுத்திட்டம் என பல்வேறு ஆக்கப்பூர்வமான யோசனைகளை தெரிவித்துள்ளோம்.

அந்த வகையில் மது ஒழிப்புக்கான மாற்று கொள்கை திட்டத்தை உருவாக்கி அதனை இன்று பத்திரிகையாளர்கள் மூலமாக மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
மதுவை ஒழிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

அரசியல் சட்டத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் அரசுத்தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
எனவே முதலமைச்சர் கருணாநிதி இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக மது விற்பனையை குறைத்து முழுமையான மதுவிலக்கை தமிழகத் தில் கொண்டுவர வேண்டும்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் காரணங்களை சொல்லக்கூடாது. ஆண்டுதோறும் மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை அரசு வெளியிடும். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட இந்த குறிப்புகளில் மது விலக்கு தொடர்பான சில அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் இது குறித்த கொள்கை விளக்க குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே இந்த அரசு மதுவிலக்கை பொறுத்தவரை கொள்கையற்ற ஒரு அரசாக திகழ்ந்து வருவது தெளி வாகிறது. மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்புடையதாகாது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க சில நடைமுறை வழிமுறைகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். அவற்றை அரசாங்கம் அமல்படுத்தலாம். அதேபோல வருவாய் இழப்பை ஈடுகட்டவும் மாற்று வழிகளை கூறியுள்ளோம்.

மணல் கொள்ளை மூலம் ஆண்டுக்கு சராசரியாக அரசாங்கத் திற்கு வர வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தனியாருக்கு போகிறது. இதனை கட்டுப் படுத்தலாம். மேலும் விற்பனை வரியை முறையாக வசூலித்தால் அதன் மூலமாகவும் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அத்துடன் கிரானைட் குவாரி மூலமாகவும் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும். இத்தகைய வழிகள் மூலமாக அரசாங்கம் தன்னுடைய வருவாயை பெருக்கிக்கொள்ள நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தொடர்ந்து மது விற்பனையை அரசு அதிகப்படுத்தி வந்தால் தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதிலாக இதற்கு குடிகார நாடு என்று பெயர் ஏற்படும் அவலநிலை உருவாகும் என்றார் டாக்டர் ராமதாஸ்.


அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, அவற்றுக்கு பதிலளிக்க டாக்டர் ராமதாஸ் மறுத்து விட்டார். ஏற்கனவே கூறியதைப்போல தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த பாமகவின் நிலை பற்றி அறிவிக்கப்படும் என்றும், இன்னும் ஓரிரு நாளில் அரசியல் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது, பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் சைதை சிவா, ராமமுத்துக்குமார், பசுமைத் தாயகம் அருள், மு.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

நெடுமாறன் - தசரதன் - கருணாநிதி - கவிதை

புதிய தசரதனின் பதவித் துறப்பு - பழ. நெடுமாறன்.


கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும்.

தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ
பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்
கன்ன மூலத்தினிற் கழற வந்தென
மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்

""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன்.

கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அரியணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான்
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின்
பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ

""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சரியோ'' என்கிறான்.

ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அரியணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன்.

கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார்.

""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். 1993-ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

2001-ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006-ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008-ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும்.


ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்?

""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது - அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா?

முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புரியாத புதிர்தான்.

சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது.

தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புரியக் கூடியது.

அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக?

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெரிய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்?

இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அரியணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அரியணையைத் துறக்க முற்படுகிறான்.

ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெரியும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

கட்டுரை: நன்றி: தினமணி

இதற்கு மறுமொழியாக கருணாநிதி எழுதிய ஆழ்வார் கவிதை

விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!!
அண்ணாவின் அணி வகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!
குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென;
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பதுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையில் விஷம் ஒரு மொந்தை!

Monday, August 25, 2008

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் - தங்கபாலு

தேமுதிகவுடன் கூட்டணிக்குத் தயார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் வரவேற்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் குடும்பத்தினர் வீதியில் வறுமையில் வாடுவதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வீடு, நிதி உதவி மற்றும் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் காங்கிரஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்பட் டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா, சேலம் புதிய உருக்காலை திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, ஈரோட்டில் நடை பெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் இருதலைவர் களும் கலந்து கொள்கிறார்கள். இது பற்றிய முழு விவரம் நாளை அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் ஒரு பிரமாண்டமான கப்பல். அது கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றக்கூடிய கப்பல். அந்த பாதுகாப்பான கப்பலில் பயணம் செய்த இடதுசாரிகள் திடீரென கடலில் குதித்து விட்டார்கள்.

இப்போது அவர்கள்தான் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் காங்கிரஸ் கட்சி மூழ்குவதுபோல தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் மதச்சார்பற்ற சக்திகள் கைகோர்த்து நிற்கின்றன. எனவே மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடைபெறும்.

காங்கிரஸ் கூட்டணியில் தான் பாமக உள்ளது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் அதைத்தான் கூறி வருகிறார். பாமக இந்த கூட்டணியில் இருந்தால் பலம் அதிகரிக்கும் என்று முதல்வரே கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்நாட்டில் எல்லா மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் தலைமையை ஏற்கும் எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்று கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

மேற்கு வங்கம், கேரளா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எங்களை எதிர்ப்பது போல இடது சாரிகள் பாவனை செய்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மனம்மாறி விடுவார்கள். 3வது அணி என்பது ஒரு கற்பனையே. அதுசாத்தியமாகாது. அது இடதுசாரி களுக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் கே.வீ.தங்கபாலு.

செய்தி: நன்றி: Maalaisudar

Sunday, August 24, 2008

பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி வலுவடையும்: கருணாநிதி

ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.

ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.

இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது. இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.

செய்தி: நன்றி: Thatstamil

திமுக அணிக்கு பாமக திரும்பி வரும்: ப.சிதம்பரம்


திமுக அணியிலிருந்து பாமக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே பாமக திமுக அணிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. வரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை, ப.சிதம்பரம் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் பாமக பங்கேற்றுள்ளது.

தமிழகத்தில் இடையிலே சில வேறுபாடுகள் தோன்றியதன் காரணமாக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே மீண்டும் பாமக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தெரிவிக்கலாம்.

காங்கிரஸ் ஆட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர். நாடு எப்போதெல்லாம் சங்கடத்தில் மூழ்குகிறதோ அப்போதெல்லாம் நாட்டைக் காப்பாற்றும் மாலுமியாகத்தான் காங்கிரஸ் இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என்றார் சிதம்பரம்.


செய்தி: நன்றி: Thatstamil

Thursday, August 21, 2008

ஆற்காடு வீராசாமி பேச்சு அநாகரீகம்: வரதராஜன்

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அரசியல் அநாகரீகமானது, அழகற்ற பேச்சு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,திமுக அமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசியிருப்பது அபத்தமானது. அரசியல் நாகரீகமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற பேச்சினுடைய புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்றது. அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி தேச பக்தி கொண்ட கட்சியாக திமுகவுக்கு தெரிந்திருக்கிறது.

கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுப்பேன், கவிழ்ப்பேன் என்ற நிலையில் திமுக அமைச்சர் பேசுவது அழகல்ல என்றார் வரதராஜன்.


ஆற்காடு வீராசாமி பேச்சு

சென்னை: அணு சக்தி ஒப்பத்தை எதிர்த்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த கட்சிகள் வரும் லோக்சபா தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வர வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதுகுறித்து 25ம்தேதி அவர்கள் தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி பூடகமாக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விமர்சித்து கவிதை எழுதியிருந்தார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை மனதில் கொண்டு எழுதப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில், அனல் மின்சாரத்தை நம்பினால் நமது நாடு முன்னேற முடியாது. அதனால்தான் அணு சக்தி ஒப்பந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு கம்யூனிஸ்டுகளும், மதவாத சக்திகளும் குறை சொன்னார்கள்.

அணு சக்தி இருந்தால்தான் மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்த முடியும். 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 1998ம் ஆண்டு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

கட்டடம் கட்டி முடித்தும், இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டும் மின் உற்பத்தி தொடங்கவில்லை. காரணம் யுரேனியம் இல்லாததுான். 2009ம் ஆண்டு பிப்ரவரியில் 1000 மெகாவாட்டும், டிசம்பர் மாதம் 1000 மெகாகவாட்டும் மின்உற்பத்தி செய்வதாக கூறியருக்கிறார்கள்.

கம்யூ. பத்தாம் பசலிகள்:

ரஷ்யாவில் இருந்து வந்தால் மின் உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவிலிருந்து வந்தால் செய்யக் கூடாதா. கம்யூனிஸ்டுகள் போகாத ஊருக்கு வழி காட்டுபவர்கள். இது பத்தாம் பசலித்தனம். இப்படி இருந்தால் இந்தியா முன்னேற முடியாது. இந்தியா முன்னேற உங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் இயக்கம் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அணு மின்சக்தி வந்தால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்.

அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள். அவர்கள் தற்போது வாங்கிய சீட்களை விடவும் குறைந்த சீட்களையே பெறுவார்கள் என்றார் ஆற்காடு வீராசாமி.


கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் வரும் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதியின் நிழலான ஆற்காடு வீராசாமி காட்டமாக கூறியிருப்பது திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வரப் போவதை உணர்த்துவதாக உள்ளதாக கருதப்படுகிறது.

செய்தி: நன்றி: Thatstamil

Tuesday, August 19, 2008

ஆன்மீகம் அவசியம்: கனிமொழி

மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடம் சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. பீடத்தின் தலைவரான சக்தி அம்மா தலைமை வகித்தார்.

மதம் வேறு - ஆன்மீகம் வேறு

திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எனக்கு மத நம்பிக்கைக் கிடையாது. மதத்துக்கும் ஆன்மீகத்துக்கும் வேறுபாடு உள்ளது என்று என் தந்தை கருணாநிதி சொன்ன புனித வழியில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

மதம் வாழ்க்கையை நெறிப்படுத்தும். சில நேரம் மதம் 'மத'மாக மாறி விடுகிறது.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி பல இடங்களில் பேசி வருகிறார். ஆனால் சேது திட்டம் இப்போது மதமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான பலன்கள் மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டு வருகிறது.

மறுக்கப்பட்ட பலன்களை பெற்றுத் தர போராடினால் நாத்திகன் என்கின்றனர். கசப்பு மருந்தில் இனிப்பு தடவி ஆன்மீகம் என்கின்றனர். நாங்கள் வேறு வகையில் இனிப்பு என்ற மேல் பூச்சுத் தடவுகிறோம்.

மாணவர்கள் நலனுக்காக இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித் தொகை போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் அனைத்து உதவிகளையும் அரசே செய்து விட முடியாது.

சக்தி அம்மா போன்றவர்கள் இதுபோன்ற உதவிகள் செய்வதன் மூலம் இந்த சமுதாயம் முற்றிலும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

கல்வி உதவி பெறும் மாணவர்கள் நன்றாக படித்து உயர்நிலைக்கு வர வேண்டும். அவர்களும் மற்றவர்களுக்கு இதேபோல உதவிகளை செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

மனிதனால் மட்டுமே இந்த பூமியை சூறையாட முடியும். விலங்குகளை அழிக்க முடியும். ஆனால் மனிதர்கள் மூலம் ஏற்படும் தடைகளை ஆன்மீகத்தால் தகர்த்தெறிய முடியும். மனிதன் மனிதனாக இருக்க ஆன்மீகம் அவசியம் என்றார் கனிமொழி.


செய்தி: நன்றி: Thatstamil

Thursday, August 14, 2008

தினமலரே வெளியிட்டுள்ள அந்துமணி ஃபோட்டோ
யாருன்னு கண்டுபிடியுங்க பாப்பம் ? படத்தைப் பற்றிய தினமலர் குறிப்பிலேயே க்ளூ உள்ளது.

(ரிப்பனை வெட்டுபவர் - கலெக்டர் ஜவகர்)

படம்: நன்றி: தினமலர்

----------------------------------------------------------------
பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Sunday, August 10, 2008

சென்னை திரும்பினார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 4 மாத ஓய்வுக்கு பின் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இதெல்லாம் செய்தியா என கேட்கக்கூடாது :-) இனிமேல் அறிக்கைகளும் விவாதங்களும் தமிழக அரசியல் களமும் இன்னும் சூடு பெறலாம். Watch out this space..!
கடந்த ஏப்ரல் 7ம் தேதி கோடநாடு சென்றார். அங்கு சுமார் 4 மாதம் ஓய்வுக்குப் பின் நேற்றிரவு கோவையில் இருந்து பாரமவுண்ட் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு 9.05 மணிக்கு வந்து சேர்ந்தார்.

காரில் வெளியே வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன், முத்துச்சாமி, தம்பிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சேகர்பாபு, கலைராஜன், மைத்ரேயன், சுலோச்சனா சம்பத் உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜெயலிதாவுடன் சசிகலா, பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் வந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 11 ஆகஸ்டு 2008

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவில் புதிதாக இடப்பட்டுள்ள 'சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

Thursday, August 7, 2008

அழகிரி 'அஞ்சாநெஞ்சன்' - கருணாநிதி மகிழ்ச்சி

மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.

குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.

இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.

தமிழ்த்தாயின் நன்றி!

நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.

டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.

ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.

தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிஎம்எஸ் ஒரு தமிழன்...

இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.

இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.

இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.

மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றார்.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்