Monday, September 13, 2010

கழக அரசை வீழ்த்த வெறிக் கூச்சலிடும் வீணர்காள் ! கேளீர் !நன்றி: தினகரன்

Wednesday, August 4, 2010

தினமலர் வாரமலர் அந்துமணி ஃபோட்டோ

தினமலர் வாரமலர் அந்துமணி ஃபோட்டோபடத்தில் வலது ஓரத்தில் நீலக் கலர் துணி தலையில் கட்டியிருப்பவர் தான் தினமலர் வாரமலர் அந்துமணி - என்கிற - ரமேஷ் என்கிற கி.ராமசுப்பு.

படம் நன்றி: தினமலர்


அந்துமணி பா.கே.ப.,


உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர்...
— இப்படி, பல விதங்களில் ஆண்களுடன் இந்நாளைய பெண்கள் பழக நேரிடுகிறது. "ஆகா! இவர் நமக்கு லட்சியக் கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை!
ஆண்களை வகைப்படுத்தி, "உஷார்!' என்று எச்சரிக்கிறது ஒரு ஆங்கில பத்திரிகை. இன்னின்னாரை நம்பி ஏமாறாதீர்கள் என்று அது தந்துள்ள பட்டியலை, உ.ஆ., ஒருவர் உதவியுடன் படித்து, தெரிந்து கொண்டேன். பட்டியல் இதோ:

* திருமண சோம்பேறி!

இந்த நபர் காலையில் எழுந்து பல் விளக்க எவ்வளவு சோம்பல் படுவாரோ, அதே அளவுக்குக் கல்யாண விஷயத்திலும் சோம்பேறித்தனமாக இருப்பார். "படிப்பு முடியட்டும்... வேலை முடியட்டும்... பிரமோஷன் கிடைக்கட்டும்... தங்கச்சிக்கு திருமணம் ஆகட்டும்...' என்று, திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார். இவரை நம்பினால், உங்கள் திருமணத்தையும், மணிவிழாவையும் ஒன்றாக நடத்த வேண்டியிருக்கும்!

* சிக்கன சிங்காரம்!

ஒரு முறை உங்களை வெளியே அழைத்துச் சென்று திரும்பி வந்தவுடனே, என்னென்ன செலவாயிற்று என்று கணக்கு எழுதுகிறவர் இவர். இவரிடம் ஒரு மைல் தள்ளி நில்லுங்கள்; இதே போல, நோட்டு, நோட்டாக பறக்க விடுகிறவரிடமும் எச்சரிக்கை தேவை. ஒரு நாள் உங்களையே பறக்க விட்டு விடுவார் இவர்.

* புத்தக புழு!

ஏராளமாகப் படிப்பவர், அறிவு ஜீவி; ஆனால், பெண் மனம் இவருக்குப் புரியாது; புரிந்தாலும் கவலைப்படமாட்டார்.

* "தேக' பக்தர்!

"காபி சாப்பிடப் போகிறாயா? அதற்கு முன் இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும்படி டாக்டர் சொன்னார் இல்லையா? டைரியில் கூட குறித்து வைத்திருக்கிறேன்!' என்று பதறுவார். எப்போதும் பயம், படபடப்பு. உங்களுக்கு தலைவலி வந்தால், அவருக்கு நெஞ்சுவலி வந்து விடும். இவரை திருத்துவது நன்று; துறப்பது அதனினும் நன்று!

* சாப்பாட்டு ராமன்!

"ஓட்டல் சாப்பாட்டினால் நாக்கே செத்து விட்டது!' என்று சொல்லி அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் எதையாவது ருசி பார்த்தபடி இருக்கிறாரா? ஜாக்கிரதை! கல்யாணத்துக்குப் பிறகும் இவர் சமையலறையை விட்டுக் கிளம்ப மாட்டார்!

* பொழுது போக்காளர்!
இவருக்குத் தேவை ஒரு சினேகிதி தான்; மனைவி அல்ல!

* மிஸ்டர் நாகரீகன்!

"அது பண்பாடில்லை; இது, "பேஷன்' இல்லை. அப்படி சிரிக்காதே! இப்படிப் பேசாதே...' என்று அடிக்கடி உபதேசம் செய்து, உங்களை திருத்திக் கொண்டே இருப்பார். இவருடன் வாழ்வது கொடிது; கொடிது!

— இப்படி எர்ச்சரிக்கை செய்து இருக்கிறது அந்தப் பத்திரிகை. இன்னும் திருமணமாகாத வாசகியருக்கு இந்த எச்சரிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சரி... பெண்களுக்கு எச்சரிக்கை விட்டு எழுதியிருப்பது போல, எந்த வகையான பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வகையான பெண்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என, ஆண்களுக்கு அறிவுரை ஏதும் அதே புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதா என புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
ம்... ஹூம்... ஒன்றும் இல்லை!

Tuesday, July 13, 2010

தேர்தலுக்கு தயாராகுங்கள்.. : ஜெயலலிதா

தேர்தலுக்கு தயாராகுங்கள்.. தொண்டர்கள விரும்பும் கூட்டணி அமையும்: ஜெயலலிதா

தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள விரும்பும் வகையில் கூட்டணி அமையும் என்றும், கட்சியினர் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கோவையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

வ.உ.சி. மைதானத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலருகே விழுந்த காய்:

கண்டனக் கூட்டம் ஆரம்பித்து அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை நோக்கி, நெல்லிக்காய் அளவுக்கு ஒரு காய் பறந்து வந்து ஜெயலலிதாவின் காலருகே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேசிய ஜெயலலிதா,

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து யார் பேசினாலும் தாக்கப்படுகிறார்கள். செம்மொழி என்ற பெயரில் நடந்த தன்னல மாநாட்டை விமர்சித்தால் தாக்கப்படுகிறார்கள். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. போலீஸாருக்கேப் பாதுகாப்பு இல்லை. ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில்லை. போதிய பாதுகாப்பு மக்களுக்கு்க கிடைப்பதில்லை.

போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன:

இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கொலை மற்றும் கொள்ளைகள் தினந்தோறும் நடக்கின்றன. வாக்குச்சாவடிகளை ரவுடிகள் ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாடுகளில் எடுத்துக்கொண்டார்கள். போலி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது ஒரு ஆபத்தான நிலைமை.

விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை!:

ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு இன்று தரம் தாழ்ந்து விட்டது. தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியாவே தலைகுனியும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் அனைவரும் அழிந்துவிடுவோம்.

விவசாயப் பொருட்களின் உற்பத்தி கடுமையாக குறைந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை ஆன்-லைன் வர்த்தகம் மூலம் முடக்கப்பட்டுள்ளது. பதுக்கல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர். ரவுடிகள், சமூக விரோதிகள், பதுக்கல்காரர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல்:

தமிழக அரசின் 1 ரூபாய் அரிசித் திட்டத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. அந்த திட்டத்தில் வரும் நல்ல அரிசிகளை திமுகவினர் வெளி மாநிலத்துக்கு கடத்துகிறார்கள். அதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதில் திமுகவுக்கும் பங்கு உண்டு.

கோவையில் மாநாடு-திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல்:

கோவையில் நடந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் ரூ. 2,000 கோடி வசூல் செய்துள்ளனர். மாநாட்டில் உணவு வழங்குவதில் ரூ. 2 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்:

இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். தமிழக மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். அதுதான் உங்களது வாக்குரிமை.

யாரும் இம்முறை வாக்குரிமையை இழக்கத் தயாராக இல்லை. 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரியான வாக்காளர்களுக்கு சரியான கட்சிகளுக்கு வாக்களிக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முன் அணிவகுத்து நிற்கும் கட்சிகள், அரசியல் தலைவர்கள் குறித்து தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

கணக்கு போட்டு பார்க்க இதுதான் சரியான தருணம்:

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இதுகுறித்து தெரிந்து கொள்ள இதுதான் தக்க தருணம். அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்குப் போட்டுப் பார்க்க இதுதான் சரியான தருணம்.

தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ்நாட்டை காப்பதற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, இந்த திமுக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். இந்த சக்தி மக்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.

அதிமுக- தேமுதிக கூட்டணி தயார்?:

யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், கழக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது. தொண்டர்களாக நீங்கள் எதிர்பார்த்த கூட்டணி அமையும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணியை ஆரம்பியுங்கள். ஜனநாயக முறையில் திமுகவுக்கு வேட்டு வைக்கும் பணியை நீங்கள் ஆற்ற வேண்டும்.

மீ்ண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைவது உங்களது கையில்தான் உள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக கூட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு முழக்கங்களை முழங்க அதை கூடியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திருப்பிக் கூறினர்.

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா கூறியிருப்பதன் மூலம் அதிமுக- தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டதையே சூசகமாக அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.

எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கிய தினம்:

நிகழ்ச்சியின் இறுதியில் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கினார்.

மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கிய தினம் இன்று என்பதால் இந்த செங்கோலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, June 17, 2010

நஞ்சை எண்ணாதே - நம்பிக் கெடாதே - கருணாநிதி கடிதம்

நன்றி: தினகரன்Click on the link for full image

Tuesday, May 18, 2010

சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ ? - கருணாநிதி

சோதிடம், பூஜை எல்லாம் ஜெயலலிதாவுக்குத்தான் கைவந்த கலை. இளம்பிராயம் முதல் இவை எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. சிறுதாவூர் புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம், என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நம்முடைய எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றையதி னம் அவரது கட்சிக்காரர்கள் இல்லத்தில் சில திருமணங்களை நடத்தி வைத்துவிட்டு பேசும்போது-மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தைவிட - என்னை வசைபாடுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது மணவிழாவானாலும், ஆர்ப்பாட்டமானாலும், எந்த விழாவானாலும் அவரது பேச்சுக்கு மய்யமாக நான் மட்டும் தான் இருக்கிறேன் போலும்! எத்தனையோ பேர் எனக்கு சாபம் கொடுத்து முடித்துவிட்டார்கள். ஏன் இந்த அம்மையாரே பலமுறை எனக்கு கொடுத்த சாபம் எதுவும் பலிக்கவில்லை.

நான் சின்னஞ்சிறுவனாக திருவாரூரில் எனது உறவினர் கிருஷ்ணன் (முரசொலி சொர்ணத்தின் தந்தையார்) இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த போது-அண்ணன் கிருஷ்ணன் என்னை அணுகி, தம்பி சோதிடம் இல்லை, சாத்திரம் இல்லை என்றெல்லாம் நீ இந்த சிறுவயதிலேயே பிரசாரம் செய்கிறாயே, எனக்கு தெரிந்த சோதிடர் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு சொல்கிறார் என்றும், அடுத்தநாள் அவர் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அந்த நேரத்தில் நீயும் இருந்து அவர் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்று மாலையில் ஒரு அம்மையார் என்னை சந்தித்தார். அவர் என்னிடம், "ஏம்பா, நீ தான் இந்த வீட்டுக்காரரின் பிள்ளையா?'' என்று கேட்டார். அவர் யார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது கேள்விக்கு பதிலாக ஆமாம் என்று கூறினேன். எத்தனை பேர் உடன் பிறந்தவர்கள் என்று அந்த அம்மையார் கேட்க, நானும் தோராயமாக "மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள்'' என்று சொன்னேன்.

இதுபோலவே வேறு சில கேள்விகளையும் என்னைக்கேட்டு, என்னிடம் பதிலை தெரிந்து கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாள் காலையில், சோதிடரும், முதல் நாள் என்னை சந்தித்த அந்த அம்மையாரும் கிருஷ்ணன் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கிருஷ்ண அண்ணன், அவரது துணைவியார், நான் மற்றும் சுற்றிலும் அமர்ந்தோம். சோதிடர் அவருக்கே உரிய சிலவற்றை செய்துவிட்டு - கிருஷ்ண அண்ணனிடம் என்னைக்காட்டி, இவர் தானே உங்கள் மைந்தர் என்றார். கிருஷ்ண அண்ணனிடம் நான் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் அவர் எதிலும் பேசாமல் ஒத்துக்கொள்வதைப்போல அமர்ந்திருந்தார். அடுத்து சோதிடர் உங்களுக்கு எத்தனை ஆண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்க-சோதிடருக்கு எதிரே இருந்த சோதிடரின் மனைவி தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு-மூன்று விரல்களை நீட்ட-அதைப்பார்த்து கொண்டே - உங்களுக்கு மூன்று பிள்ளைகள் தானே? என்றார். கிருஷ்ண அண்ணன் அதற்கும் எதுவும் பேசவில்லை. அடுத்து எத்தனை பெண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்டு தனது மனைவியை பார்க்க அந்த அம்மையார் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இரண்டு விரல்களை நீட்டிக் காட்டிட, சோதிடர்; உடனே இரண்டு பெண் குழந்தைகள் தானே என்றார். கிருஷ்ண அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. அவருக்கு கோபம் வந்தால் வாயில் வார்த்தைகள் இப்படித்தான் வரும் என்றில்லை. சரமாரியாக சோதிடரை திட்டத்தொடங்கி விட்டார்.

சோதிடரின் மனைவி நேற்று இந்த பிள்ளையாண்டான் தான் இந்த விவரங்களையெல்லாம் சொன்னதாக என்னைக்காட்டிவிட-சோதிடர் என்பக்கம் திரும்பி "இந்த சிறுவயதிலேயே இப்படியெல்லாம் செய்கிறாயா? நீ உருப்படவே மாட்டாய்'' என்று பெரிய சாபத்தை கொடுத்துவிட்டு போய் விட்டார். அந்த சாபம் பலித்ததா என்பதற்கு இந்த உலகமே சாட்சி!

அந்த சோதிடர் விட்ட சாபமே பலிக்கவில்லை என்கிற போது-ஜெயலலிதா விடுகின்ற சாபமா பலிக்கப்போகிறது? நான் எழுதிய "சிலப்பதிகார காப்பியம்'' என்ற நாடகத்திலேயே இந்த சோதிடம் பற்றி ஒரு அத்தியாயமே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட நான் ஏதோ சோதிடரின் வார்த்தையை கேட்டு என் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்போவதாக அறிவித்தேனாம். யாரோ சோதிடர் அந்த வீட்டிலே நான் தங்கியிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதால்தான் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேனாம்.

அம்மையார் ஜெயலலிதா மணவிழா மேடையிலே முழங்கியிருக்கிறார். எந்தச்சோதிடன் சொன்னான் என்று ஜெயலலிதா நிரூபிக்கத்தயாரா? இன்னும் சொல்கிறேன், என்னுடைய பிறந்த நாளுக்கு பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத்தான்; என் மறைவுக்குப்பிறகு அந்த வீட்டை மருத்துவ மனையாக பயன்படுத்த ஒப்படைக்க இருக்கிறேன். இதுஎதுவும் தெரியாமல் ஜெயலலிதா எந்த சோதிடன் சொன்னதையோ கேட்டுக்கொண்டு மணவிழாவிலே சென்று புலம்பியிருக்கிறார்.

அது மாத்திரமல்ல, தலைமைச்செயலக கட்டிட திறப்பு விழாவினைக்கூட சோதிடன் சொன்னதை கேட்டுக் கொண்டு தான் சீக்கிரமாக திறந்து வைத்து விட்டேனாம்! எந்தச்சோதிடன்? சொல்லத் தயாரா?

மார்ச் மாதத்திற்கு மேல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே உட்கார்ந்திருந்தால் நீங்கள் திரும்ப ஆட்சிக்கு வரவே முடியாது என்று சோதிடன் சொன்னதை கேட்டுவிட்டுத்தான் தலைமை செயலகத்தை மாற்றியிருக்கிறேனாம். மார்ச் திங்கள் முடிந்து ஏப்ரல் திங்கள் முடிந்து மே திங்கள் நடைபெறுகிறது. புதிய தலைமைச்செயலகத்தின் பணிகள் முற்றுப்பெற இன்னும் மூன்று நான்கு மாதங்களாக போகிறது. அதுவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தான் உட்கார்ந்திருக்க போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் புளுகு என்னவாகப் போகிறது?

ஏன், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச்செயலகம் ஒன்றை கோட்டூர்புரத்தில் கட்டுவதாக சொல்லி சோதிடர்களையெல்லாம் அழைத்து வந்து பூஜை புனருத்தாரணங்கள் எல்லாம் செய்து அடிக்கல் நாட்டியதாக ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டதே, என்னவாயிற்று? அந்தச்சோதிடம் பலித்ததா?

அது மாத்திரமல்ல, கடற்கரை சாலையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்-அமைச்சராக இருந்த போது வைக்கப்பட்ட கண்ணகி சிலையை அன்றாடம் பார்த்துக்கொண்டே தலைமைச்செயலகம் சென்றால், ஆட்சி நீடிக்காது என்று யாரோ சோதிடன் சொன்ன சொல்லை கேட்டுக்கொண்டு இரவோடு இரவாக லாரியை விட்டு இடிக்கச்சொல்லி, அந்தச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் ஒரு மூலையில் போட்டு வைத்தார்களே, அந்தச் சோதிடன் சொன்னது பலித்து அவருடைய ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்து அன்றாடம் நான் பார்த்துக்கொண்டு தானே தலைமைச்செயலகம் செல்கிறேன், என்னுடைய ஆட்சிக்குத் தான் இடைஞ்சல் வந்து விட்டதா?

ஏன், இன்றைக்கு (நேற்று) வந்துள்ள ஏடுகளில் ஜெயலலிதா ராகு-கேது-பூஜா செய்ய காளகஸ்தி போவதாகவும், அதற்காக 300 காவலர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் செய்தி வந்திருக்கின்றது. இந்த சோதிடம், யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் அவருக்கே கைவந்த கலையே தவிர, இளம் பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையிலே ஏறிக்கொண்டு சோதிடர் பேச்சை கேட்டுக்கொண்டுதான் வீட்டை தானம் செய்கிறேன். தலைமைச்செயலகத்தை மாற்றினேன் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறார் என்றால், சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்று தானே கேட்க தோன்றுகின்றது! சிறுதாவூர் பற்றி புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம்; என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.


செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, May 17, 2010

ஜோதிடர் பேச்சைக் கேட்டுத்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருகிறார் கருணாநிதி - ஜெ.

இனியும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஆட்சிக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர் கூறியதால்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருவதாக கூறி அங்கிருந்து வெளியேறப் போகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில் சிறுதாவூர் நிலப் பிரச்சினை, தன் மீதான வழக்குகள், முதல்வர் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதன் பின்னணி, புதிய சட்டசபைக் கட்டடத்திற்கு அவசரம் அவசரமாக மாறியதற்கான பின்னணி உள்ளிட்டவை குறித்து பரபரப்பாக பேசினார்.

ஜெ.வின் பேச்சிலிருந்து சில பகுதிகள்..

வாழ்க்கை என்பதே ஒரு சவால். வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், சாதகம் - பாதகம் ஆகியவை, கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை, துணிச்சலுடன் எதிர்கொள்ள, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு, துவண்டு விடக் கூடாது. அவற்றை துணிவுடன் எதிர்த்தால், வெற்றி நிச்சயம்.

சவால்களை எதிர்கொள்ளும் மனோபாவம் தான், வெற்றிக்கு வழி வகுக்கும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், பாரதிக்கு இருந்ததால் தான், அவர் மகாகவியானார். பகுத்தறிவுக் கொள்கைகளை, மக்களிடம் துணிந்து பரப்பியவர், தந்தை பெரியார்.

வாழ்க்கை என்ற பயணத்தில், எல்லாமே நமக்கு சாதகமாக நடந்துவிட்டால், பிரச்சினை இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வாழ்க்கை, யாருக்கும் அமைவதில்லை. சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தச் சவால்களையே நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தான், வாழ்க்கையில் வெற்றி அடையும் ரகசியம்.

சவாலை எதிர்த்து போராடும் துணிவே, நம்மை வாழ வைக்கிறது. இன்று வாழ்க்கையை தொடங்கியிருக்கும், 5 திருமண ஜோடிகளுக்கு மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்.

திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.

இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதேபோல, திடீரென்று அரைகுறையாக ஒரு புதிய தலைமை செயலகம் சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டிடத்தை அவசர கதியில் யாராவது கட்ட நினைப்பார்களா?. சென்னைக்கு திருஷ்டிப் பரிகாரமாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டிடம். கேரளா மாநிலத்தில் அவ்வளவு கலை ரசனையோடு பண்பாட்டிற்கு ஏற்றவாறு அழகான ஒரு கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார்கள். அங்கே தான் சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் செயல்படுகிறது. கர்நாடகாவைப் பாருங்கள், விதான சவுதா, காலாகாலத்திற்கு கம்பீரமாக தோற்றமளித்து மெஜஸ்ட்டிக்காக நிற்கிறது.

ஆனால் கருணாநிதியிடம் ஒரு ஜோதிடர், பழைய சட்டமன்றத்தில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கினால் ஆட்சி பறி போய் விடும். மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கே வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால்தான் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தை கட்டி முடித்ததாக அறிவித்து திறப்பு விழா நடத்தி அங்கே போய் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு மாற்றங்களிலும் கருணாநிதியிடம் பொதுநலம் தெரியவில்லை. மாறாக சுயநலம்தான் மேலோங்கி நிற்கிறது.

என் மீது புனைந்த சொத்துக் குவிப்பு வழக்கை நான் தாமதப்படுத்தி 13 ஆண்டுகளாக என்னால் தான் தாமதப்படுத்தப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறதாம். 1997-ம் ஆண்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்த போது இந்த வழக்கை என் மீது போட்டார். அதன் பிறகு 1997-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை அவர் தானே முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது ஏன் இந்த வழக்கை முடிக்கவில்லை?

2001-ம் ஆண்டு நான் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக வந்தேன். நான் நினைத்திருந்தால் என் மீது புனைந்த வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற்றிருக்க முடியாதா?. ரத்து செய்திருக்க முடியாதா?. ஒரு நொடிப் பொழுதில் செய்திருக்க முடியும்.

1997 முதல் 2001 வரை 4 ஆண்டு காலம் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் தான் அந்த வழக்கை முடிக்காமல் தாமதப்படுத்தினார். பின் 2001-ல் நான் முதல்-அமைச்சர் ஆனேன். 2003-ம் ஆண்டு அந்த வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது.

அப்போது திடீரென்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டு, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்தார்கள். அதனால் அந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஒரு வருடம் தாமதப்படுத்தப்பட்டது. இது என்னால் நடந்த ஒரு தாமதமா?.

அதன் பின்னர் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இரண்டு வழக்குகளை ஒன்றாக இணைத்தார்கள் அந்தத் தனி நீதிமன்றத்தில். அதை எதிர்த்து மீண்டும் 2005-ம் ஆண்டு அதே அன்பழகன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு போடப்பட்டது.

2005-ம் ஆண்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதால் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையாணை வழங்கியது. அந்தத் தடையாணை எத்தனை ஆண்டு காலம் இருந்தது?. இந்த ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலம் அந்தத் தடையாணை நீடித்தது. ஆக, அந்த வழக்கை முடிக்க விடாமல் நீட்டிக்க வைத்தது கருணாநிதி தானே தவிர நானல்ல.

அதைப் போலத் தான் சிறுதாவூர் பிரச்சினை. ஆரம்பத்திலேயே நான் இதைப் பற்றிப் பேசிய போது நான் இதை தெளிவுபடுத்தினேன். நான் எந்த நிலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை. சிறுதாவூரில் எனக்குச் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. வாடகைக்கு எடுத்த வீட்டில் நான் அங்கே தங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அதை ஏற்காமல் என்னைப் பற்றி அவதூறு பரப்பவேண்டும் என்பதற்காகவே ஒரு விசாரணைக் கமிஷன் போட்டார்கள். சரி, அந்த விசாரணைக் கமிஷன் போட்ட பிறகு அந்த விசாரணைக் கமிஷன் தன்னுடைய அறிக்கையை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சமர்ப்பித்துவிட்டது. அதை சட்டமன்றத்தில் வைக்கவில்லை.

சிறுதாவூர் கமிஷன் அறிக்கை வெளி வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நான் ஒரு அறிக்கை விட்டேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழில் கூட மொழி பெயர்க்கவில்லை. ஆங்கில அறிக்கையை திடீரென்று சட்டமன்றத்தில் வைத்துவிட்டார்கள். அதில் நான் நிரபராதி என்று கூறப்பட்டிருக்கிறது.

நான் நிரபராதி என்று தெரிந்து கொண்டே, தெரிந்து வைத்துக் கொண்டே என் மீது களங்கம் சுமத்தி இருக்கிறார்.

பணபலம், படைபலம், அதிகார பலம் ஆகியவற்றை, துணிவுடன் எதிர்கொள்ளும் திறமை, கழகக் கண்மணிகளாகிய உங்களுக்கு, நிச்சயம் உண்டு. அதனால் தான், "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'', என்று பாடிய எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வரியில், "அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னைச் சேரும்'' என்று பாடினார்.

நீங்கள் எல்லாம், திறமைசாலிகள் மட்டும் அல்ல, மக்கள் மீது பாசமும், நேசமும், அன்பும், மனித நேயமும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள், என்பதை நான் அறிவேன்.

திறமையும், உங்களது சேவை மனப்பான்மையும், நிச்சயம் வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களது திறமையை, நிரூபிப்பதற்கான நேரம், வந்துவிட்டது.

வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, அ.தி.மு.க. ஆட்சி, தமிழகத்தில் அமைய, இப்பொழுதே தயாராகுங்கள். நாளைய தமிழகம், நம் கையில் என்றார் ஜெயலலிதா.

அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவால் அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் மயமாக காணப்பட்டது.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, March 1, 2010

பாசமழையில் நனைந்த மு.க.ஸ்டாலின்

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58-வது பிறந்த நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடினார். முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதியின் காலில் விழுந்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.


அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் நிர்வாகி களும் முக்கிய பிரமுகர்களும் சர்வ கட்சி தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.திமுக பொருளாளரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 58-வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி ஸ்டாலின் அதி காலையிலேயே எழுந்து புத்தாண்டு அணிந்த 6 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து திமுக தலைவரும் முதலமைச்சரும் தனது தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அதன் பின்னர் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து குடும்பத் துடன் கேக் வெட்டி பிறந்தநாளை மிக எளிமையான முறையில் கொண்டாடினார். இதனை தொடர்ந்து காலை 6.45 மணி முதல் அவரது வீட்டிற்கு தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர் களும் பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும், சர்வகட்சி தலைவர் களும், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுள் மத்திய மாநில அமைச்சர்கள், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசு துறை செயலாளர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரையுலகினர் ஆகி யோர் அடங்குவர்.வந்திருந்த தொண்டர்களும், பிரமுகர்களும் வரிசையில் நின்று பூங்கொத்து, மாலை, சால்வை ஆகியவற்றை ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

காலை 9.45 மணிக்கு அவரது சகோதரரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேரில் வந்து ஸ்டாலினை கட்டித் தழுவி வாழ்த்தினார். இதேபோல கனிமொழி எம்பி, மு.க.தமிழரசு ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக் கூற வந்த தொண்டர்களுக்கும், பொது மக்க ளுக்கும் பிரியாணி மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டி.யசோதா, ஞானசேகரன் எம்எல்ஏ, ஜே.எம்.ஆருண் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வை.சிவபுண்ணியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிஜேபியின் குமாரவேலு மற்றும் தொழிலதிபரும், கல்வியாள ருமான எம்ஏஎம் ராமசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்த சர்வகட்சி தலை வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பாக 58 வகையான சீர்வரிசை பொருட்களுடன் துணை முதல் வருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத குருமார்களும் நேரில் வந்து துணை முதல்வருக்கு ஆசி கூறினர்.திமுகவின் இளைஞரணி, மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் சீருடையில் வந்து வாழ்த்தினர். அவர்கள் 58 வகையான பழ வகைகளை ஸ்டாலி னுக்கு வழங்கினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மயில் நடனம், பேண்டு வாத்தியம், முரசு, நாதஸ்வரம் உள்ளிட்ட கலைக் குழுவினரும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் வேடமணிந்தும் வந்து தொண்டர்கள் துணை முதல்வரை வாழ்த்தினார்கள். பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்க பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட தால் ஸ்டாலின் இல்லம் உள்ள ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்

சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் கூட்டம் காணப்பட்டது. போலீசார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர்.வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஸ்டாலின் வீட்டு எதிரே 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தனது பிறந்த நாள் விழாவுக்கு யாரும் ஆடம்பரமாக விளம்பரம் செய்யக் கூடாது, ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார். அதற்கிணங்க எந்த பகுதியிலும் ஆடம்பர பேனர் களை காணமுடியவில்லை. அவரது இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்சி கொடிகளை மட்டுமே கட்டியிருந்தனர்.

பகல் 1 மணி வரையிலும் தனது இல்லத்தில் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும் ஸ்டாலின் அதன் பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பள்ளிக்குச் சென்று அதன் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கிறார். பின்னர் மீண்டும் தனது இல்லத்திற்கு வந்து மாலை வரை தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்வார்.

படம்: செய்தி: நன்றி: மாலைச்சுடர்