Thursday, December 10, 2009

மஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்

தூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.மளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.

நவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

மஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.

செய்தி: படம்: நன்றி: தினகரன்

Tuesday, December 8, 2009

அரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்

முதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.

இந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

இதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைமலர்