Monday, February 16, 2009

சூப்பர் ஸ்டாரை மோடியாக்க நினைக்கிறேன் - சோ



"அலையன்ஸ்' பதிப்பகம் சார்பில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெண்கல்வி தொடர்பான நூல், "கல்வியே கற்பகத்தரு' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில், இந்த நூலினை "துக்ளக்' ஆசிரியர் சோ.ராமசாமி வெளியிட, நல்லி குப்புசாமி, பி.எஸ்.ராகவன், அவ்வை நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

"அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை வேறுபாடு இருக்கலாம்; மாண்புகளை விட்டு விடக்கூடாது. அரசியல் தீண்டாமை என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்" என்று நரேந்திர மோடி பேசினார்.


விழாவில், நரேந்திர மோடி பேசியதாவது:


நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, பெண்கல்வியில் குஜராத் மிகவும் பின்தங்கி இருந்தது. இதை மாற்றுவதற்காக பெண் குழந்தைகள் படிக்க திட்டங்களைச் செயல்படுத்தினேன்; மக்களிடம் நேரடியாகப் பேசினேன்.இதன் காரணமாக, இன்று 100 சதவீத பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். மாணவர்கள் கல்வி பயிலும் போது 42 சதவீதமாக இருந்த இடைநிற்றல், தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.விழாக்களில் எனக்குக் கிடைத்த பரிசுகளை எல்லாம் அரசு கருவூலத்தில் சேர்த்து, அதை ஏலம் விட்டு, அதில் கிடைத்த 20 கோடி ரூபாயை பெண் கல்விக்காகச் செலவிட்டேன். கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில், எனக்குக் கல்வி கற்பித்த 33 ஆசிரியர்களை குடியரசு தினத்தன்று அழைத்து மரியாதை செய்தேன்.


நம்மிடம் வளர்ச்சிக்குத் தேவையான தகுதி, வளம் இருக்கிறது. குஜராத் மட்டும் வளர்ந்ததாக நினைக்கவில்லை; நாடே வளர்ந்ததாக நினைக்கிறேன். நான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே கொண்டுள்ளேன்; அதுவே வளர்ச்சிக்குக் காரணம்.நாங்கள் நடத்திய பொருளாதார மாநாடுகளால் 50 நாடுகளில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. 25 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது.அடிப்படைத் தேவையான இந்த ஒரு சேவையைச் செய்தாலே குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக ஒருவர் இருக்க முடியும். நான் செய்யப்போவதை சொல்ல மாட்டேன்; செய்தவற்றைத் தான் சொல்வேன். எங்களது மாநிலத்தில் நகரத்தில் கிடைக்கும் தகவல் தொழில்நுட்ப வசதியை கிராமங்களில் உள்ளவர்கள் கூட பெற முடிகிறது.


இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் நேரடியாக குறைகளை அரசிடம் கொண்டு சேர்க்க முடியும். கடந்த 2007-08ம் ஆண்டு மட்டும் குஜராத்தில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பகம் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது; அதே ஆண்டு நாடு முழுவதும் 96 ஆயிரம் பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. சுகாதாரத் துறையில் வளர்ந்த நாடுகளுக்குச் சமமாக குஜராத் முன்னேறியுள்ளது. தாமதமாக நீதி கிடைப்பதை தவிர்க்கும் வகையில், நீதிபதிகளின் விடுமுறை நாளை குறைத்தேன்; கோர்ட் இயங்கும் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்தேன்; மாலை நேர கோர்ட்டுகளைச் செயல்படுத்தினேன்.இதன் காரணமாக ஒரு கோடி வழக்குகள் தேங்கியிருந்த நிலை மாறி, தற்போது 20 லட்சம் வழக்குகள் மட்டுமே தேங்கியுள்ளன. அடுத்த ஆண்டு இதை ஜீரோவாக மாற்றுவேன்.


மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் என்மேல், நிர்வாகத்தின் மேல் ஒரு சிறு குற்றச்சாட்டைக் கூட எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எனது அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று சொன்னதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.ஆனால், கேரள கம்யூனிஸ்ட் அரசால் ஒரு திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது என்று கேள்விப்பட்டு எனது அதிகாரிகளை அனுப்பி, அந்தத் திட்டத்தை எனது மாநிலத்தில் செயல்படுத்தினேன்.அரசியல் தீண்டாமை என்பது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அரசியல் கட்சிகளின் தத்துவங்கள் வேறாக இருக்கலாம்; மாண்புகளை விட்டுவிடக்கூடாது.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


சோ பேச்சுக்கு எதிர்ப்பு கூட்டத்தில் பரபரப்பு:

சென்னை :நரேந்திரமோடி கலந்து கொண்ட விழாவில், "துக்ளக்' ஆசிரியர் சோ பேசியதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் நடந்த, "கல்வியே கற்பகத்தரு' என்ற நூல் வெளியீட்டு விழாவில், "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமி பேசியதாவது:

மோடியை நான் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதாக கூறினார்கள். அது தேவையில்லை. நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க நினைக்கிறேன். இலங்கைத் தமிழர்கள் மீது பா.ஜ.,விற்கு கூட திடீரென பிரேமை வந்துள்ளது. புலிகள் வாழ்ந்தாலும் பரவாயில்லை; இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்.(இதைத் தொடர்ந்து சோ ஆங்கிலத்தில் பேசினார். அவரை தமிழில் பேசுமாறு பார்வையாளர்கள் குரல் கொடுத்தனர். தொடர்ந்து சோ ஆங்கிலத்தில் பேசினார்)


நம் நாட்டுக்கு ஒரு நீதி; மற்ற நாட்டுக்கு ஒரு நீதி என்று பார்க்கக் கூடாது. காஷ்மீர் பிரச்னையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுப்பதை நாம் ஏற்கிறோமா? அதே பாணியில் தான் இலங்கை பிரச்னையையும் பார்க்க வேண்டும். இலங்கையில் புலிகளை முற்றிலுமாக ஒழித்தால் தான் அங்கு அமைதி ஏற்படும். அதை விடுத்து போர் நிறுத்தம் வேண்டும் என குரல் கொடுப்பது தவறானது. இந்த விஷயத்தில் ஜெயலலிதா மட்டும் தான் உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். (மீண்டும் எதிர்ப்பு குரல் எழுந்தது.) என்னை யாரும் மிரட்ட முடியாது. இந்த கருத்தை இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு என்னை அழைத்தாலும் அங்கும் சென்று கூறுவேன். பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்கமுடியாது. அங்கு பயங்கரவாதத்தை ஆதரித்தால் அது தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு சோ பேசினார்.

செய்தி: படம்: நன்றி: தினமலர்

No comments: