Tuesday, February 3, 2009

குழாயடிக் கூச்சலுக்குச் செவி சாய்க்க முடியாது - கருணாநிதி

""மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்,'' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் சந்தித்துக் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:




படங்கள்: நன்றி: தினகரன்

முழு அடைப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி, அந்த நல்ல நோக்கத்திற்காக தி.மு.க.,வும், அதன் தோழமைக் கட்சிகளும் உண்ணாவிரதம் இருந்ததையே முழு அடைப்பு எனக் கூறி அதை நடத்தியது சட்டவிரோதம் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இயங்கும் கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்கள் நல்ல நோக்கத்திற்காக இந்த முழு அடைப்பு நடத்தினாலும், அதற்கு ஒப்புதல் தந்து, அப்படி ஒப்புதல் தந்ததின் காரணமாக மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் முன்னால் நிற்பதற்கு இந்த அரசு எப்படி இணக்கம் தெரிவிக்க முடியும்?


உங்களுக்கு வெட்கமில்லை என்ற அளவுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாரே?

மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள என்னால், குழாயடிக் கூச்சலுக்குச் செவி சாய்க்க முடியாது. பதில் அளிக்கவும் விரும்பவில்லை.


படங்கள்: நன்றி: தினகரன்

தி.மு.க., செயற்குழு ஏமாற்றம் ஏமாற்றம் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சியிலிருந்து விலகி விடுவோம் என்று செயற்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது? ஈழத் தந்தை செல்வாவின் அன்பு செல்வன் சந்திரஹாசன் எனக்கு எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்களுடைய ஏமாற்றத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


மருத்துவமனையில் மீண்டும் அனுமதி :
சென்னை :
முதல்வர் கருணாநிதி நேற்று மூன்று நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தார்.முதல்வர் கருணாநிதி முதுகு வலிக்காக, கடந்த 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சென்னையில் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அண்ணாதுரை நினைவு நாள் ஊர்வலம் மற்றும் மவுன அஞ்சலி காலையில் நடந்தது.

ஆம்புலன்ஸ் வேனில் வந்தவர், சக்கர நாற்காலி மூலம் வேனில் இருந்து அண்ணாதுரை சமாதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு மலர் அஞ்சலி செலுத்திய பின், தலைமைச்செயலகம் சென்று அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்து கட்சித் தலைமை நிலையம் சென்று தி.மு.க., செயற்குழுவில் கலந்துகொண்டார். ஆம்புலன்ஸ் வேனிலேயே சென்று, இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, அதே ஆம்புலன்சில் மீண்டும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு முதல்வர் கருணாநிதி மேலும் ஒரு வாரம் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி: நன்றி: தினமலர்

No comments: