Tuesday, July 8, 2008

ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு பேசலாமா ? : கருணாநிதி

பெட்ரோல் இல்லை - இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்துள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை ஒரு பிடி பிடித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஜூன் 6-ந் தேதியில் இருந்து தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி, கால்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் தங்கக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரங்கில் மின்னொளியில் நேற்று இரவு நடந்தது. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் திருவல்லிக்கேணியை சேர்ந்த `சீ பிரீஸ்' அணியும், திருவான்மியூரை சேர்ந்த `ஸ்கிரீன் வேர்ல்ட்' அணியும் மோதின. இதில், 108 ரன்களை முதலில் ஆடி குவித்த `சீபிரீஸ்' அணி, அடுத்து ஆடிய `சீவேர்ல்ட்' அணியை 54 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில், தென்சென்னையில் இருந்து 1,285 அணிகள் கலந்து கொண்டன. 15,420 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டார்கள். 5 மைதானங்களில் மின்னொளியில் போட்டி நடந்தன.

கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தங்கக் கோப்பையை முதல்வர் வழங்கினார். அந்த அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. இதுதவிர, கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்ற அணியினருக்கும் கருணாநிதி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இறுதிப் போட்டியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். முதல் பந்தை அவர் அடிக்க, அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பந்து வீசி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த போட்டியை முதல்வர் கருணாநிதி முழுமையாக அமர்ந்து பார்த்து ரசித்தார்.

முன்னதாக ஸ்ரீகாந்த் பேசுகையில், முதல்வர் கருணாநிதி ஒரு கிரிக்கெட் பைத்தியம். நான் ஆடிய போட்டிகளை நேரடியாக வந்து பார்த்திருக்கிறார். உலகக் கோப்பையை வென்று திரும்பியபோது எனக்கு அந்த காலத்திலேயே நிலம் கொடுத்தார்.

20 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று திரும்பிய தினேஷ் கார்த்திக்குக்கும் அவர் பெரிய பரிசு கொடுத்துள்ளார். அவருக்கு விளையாட்டை மதிக்கும் தன்மையும், அதன் மீதான ஆர்வமும் அதிகம். நான் இதனை மனதார சொல்கிறேன்.

இந்த போட்டிகளை நடத்துவதற்கான அமைச்சர் ஸ்டாலினின் ஐடியா சிறப்பான ஒன்று. நானும் இதுபோல் ரோட்டில் விளையாடி வந்தவன்தான். இந்த போட்டியில் ஆடியவர் இந்தியாவுக்கு ஆடி புகழ்பெற வேண்டும் என்றார்.

நிறைவாக முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கிப் பேசினார். அவர் கூறுகையில், தென்சென்னை திமுக மாவட்டம் சார்பில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த போட்டியினை மு.க.ஸ்டாலின் வளர்த்த இளைஞரணி தம்பிமார்கள் நடத்தி என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

இங்கு பேசிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் என்னை புகழ்ந்து கூறும்போது, `கிரிக்கெட் பைத்தியம்' என்றார். அது வருந்தத்தக்க வார்த்தை அல்ல. பித்தன் அல்லது பைத்தியம் ஆகியவை ஒன்றினையே குறிக்கின்றன. மிக அதிக பற்று கொண்டதை குறிப்பிடும் வார்த்தைதான் அது.

(அப்போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருணாநிதியிடம் ஏதோ கூறினார்). ஸ்ரீகாந்த் என்னிடம் இப்போது, `நான் நல்ல எண்ணத்தில்தான் அப்படி கூறினேன்'' என்றார். பரமசிவனை உண்மையான பக்தர்கள் நல்ல எண்ணத்தில்தான் `பித்தா, பிறைசூடி' என்று வாழ்த்துவது அவருக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.

கிரிக்கெட் போல் மற்ற சில விளையாட்டுகளும் இந்தியாவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களில் நானும் ஒருவன். நம் விளையாட்டுக் குழு வெளிநாட்டில் போய் வெற்றி பெற்று திரும்பினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். அவர்கள் தோல்வி அடையும்போது, அவர்கள் மேலும் பயிற்சி செய்ய வேண்டும், மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் மட்டும் அல்ல, விளையாட்டு வீரர்களும், விளையாட்டு நிபுணர்கள் எல்லாம் அறிவுரைகளை வாரி வழங்கி உள்ளனர்.

இளைஞர்கள் இந்த வயதில் இத்தகைய பயிற்சியில் ஈடுபடுவது, சில ஊருக்கு போய் பரிசு பெற்றோம் என்பதற்காக அல்ல. உடல் வலிவுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் நாட்டை வாழ வைக்க வேண்டிய சமுதாயம் என்கிற முறையிலே ஆரோக்கிய வாழ்வை மேற்கொள்ள விளையாட்டு மிக முக்கியமானதாகும். வைக்க வேண்டியது உங்கள் கடமை.

வெற்றி பெற்றவராயினும் சரி, தோல்வியடைந்தவராயினும் சரி, ஒன்றுபட்டு ஒற்றுமை உணர்வோடு, உடல் வலிமை பெருக்கி விளையாட்டில் வெற்றிகரமாக முன்னேற வேண்டும். உலகில் தலை சிறந்த விளையாட்டாக கிரிக்கெட் கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட விளையாட்டில் நாம் இன்னும் திறமையை காட்ட வேண்டும். நாட்டுக்கு புகழை கொடுக்க வேண்டும். இதுபோன்ற திறமை வேறு எங்கும் இல்லை என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், என்னை நிருபர் போல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவர், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்று என்னை கேட்டார். நான் எப்போதும் ஜாக்கிரதையாக பதில் சொல்பவன். நான் தமிழ்நாட்டு வீரர் யாரையாவது பிடிக்கும் என்று சொன்னால், நான் குறிப்பிடாத தமிழ்நாட்டு, இந்திய வீரர்களுக்கு வருத்தம் ஏற்படும். அதனால் நான் எனக்கு பிடித்த வீரர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் கிளைவ் லாயிட் என்று உள்நாட்டினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சொன்னேன்.

அவரும், எனக்கும் லாயிட்டைத்தான் பிடிக்கும் என்று சொல்லி நான் கையாண்ட முறையையே கையாண்டார்.

கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபிறகு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நாடு திரும்பியபோது, அரசு சார்பில் அவரை கவுரவித்த பெருமை எனக்கு உண்டு. அவர் ஆடிய விதத்தில் தொடர்ந்து ஆடி இருந்தால் உலகின் முதல் நிலை வீரராக ஆகியிருப்பார். நான் உலக அளவில் ஏன் தொடர்ந்து போகவில்லை என்று கேட்டால்-கடைசியில் அவர் நம் வட்டத்துக்கே வந்துவிட்டார்.

உலகப்புகழ் பெற்ற அவர், வட்ட அளவில் ஆடப்படும் இதுபோன்ற கிரிக்கெட் ஆட்டங்களில் ஆர்வத்தை காட்டும்போது, எந்த அளவுக்கு இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உள்ளது என்பது புரிகிறது. இந்த விளையாட்டின் மீது அவர் காட்டும் உற்சாகத்தை வரவேற்கிறேன்.

பெட்ரோல் இல்லை- இவர்கள் விளையாடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஊட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளவர்கள் இப்படி சொல்கிறார்கள். அதை கொட்டை எழுத்தில் போடும் பத்திரிகைக்காரர்களும் உள்ளார்கள் என்றார் கருணாநிதி.

செய்தி: நன்றி: Thatstamil

1 comment:

puduvaisiva said...

Sambar pothel vadi

"நமீதாவை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை."

me too

:-))))))))))))))))))

puduvai siva