Sunday, February 17, 2008

கருணாநிதி கலக்கம்

அரசியலில் தனது மூத்த மகனை ஆதரிப்பதா? அல்லது மு.க.ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதா? என்பது குறித்து முதலமைச்சர் கருணாநிதி கலங்குவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 20ந் தேதி மந்திரிசபையில் மாறுதல் செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று ஸ்டாலின் நிர்பந்தம் செய்ததால், மந்திரி சபை மாறுதலை கைவிட்டு விட்டு இலாகா அளவில் மாறுதல் செய்ய முதல்வர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஜப்பான் சென்று வந்தார். அப்போது சென்னை பெருநகர மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் வங்கியின் நிதியுதவி குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜப்பான் பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஒகேனக்கல் குடிநீர் திட்டமும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டமும் மு.க.ஸ்டாலின் முயற்சியின் காரணமாக வெற்றி பெற்றது போன்ற வாசகங்களை அந்த போஸ்டர்கள் கொண்டிருந்தன.

தான் முதலமைச்சராக இருக்கும் போதே, தன்னுடைய திட்டங்களுக்கு மகன் உரிமை கொண்டாடுவதை முதல்வராய் ஏற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன் ஸ்டாலினின் மகன் உதயநிதி புதுக்கோட்டை சென்ற போது அவரை வரவேற்று வைக்கப் பட்டிருந்த போஸ்டர்கள் மட்டுமின்றி மணமக்கள் அவர் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் கட்சி மேலிடத்தை அதிர்ச்சியடையச் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல மற்ற வாரிசுகளும் செய்யஆரம்பித்தால் கட்சியில் பெரும் பூகம்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தேதான் ஆடம்பர விளம்பரங் களுக்கு முதல்வர் கருணாநிதி தடை விதித்து அண்மையில் அறிக்கை விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் முதல்வரின் மூத்த மகனான அழகிரி கட்சிக்கு உழைக்கும் நபர்களுக்குத்தான் உதவி செய்கிறார். அதனால் கட்சி பலம் பெறுகிறது என்ற எண்ணம் கட்சித் தலைமைக்கு அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகிறது.

ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சரோ தனது துதிபாடிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது கட்சித் தலைமையை சிந்திக்க வைத்திருப்ப தாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களை தன் கைப்பிடியில் வைத்திருக்கும் அழகிரி அண்மையில் சென்னைக்கு மூன்று நாள் முகாமிட்டு நடத்திய ஆலோ சனைக்கு பிறகு கேபிள் டிவி பிரச்சனையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற மூத்த மகன் அழகிரிக்கு ஆதரவு கொடுப்பதா? அல்லது இளைய மகன் ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதா என்று முதல்வர் குழம்புவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே வருகிற 20ந் தேதி தமது அமைச்சரவையில் மாறுதலை செய்ய முதல்வர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. புகார்களுக்கு ஆளான அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சர் தனக்கு வேண்டிய சிலருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே வம்பே வேண்டாம் என்று கருதிய கட்சித் தலைமை மந்திரி சபை மாறுதலை கைவிட்டதாக கூறப் படுகிறது.

அமைச்சர்களின் இலாக் காக்களின் மாற்றம் மட்டுமே செய்வது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

News: Maalaisudar

No comments: