பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகியது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.
ஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பா.ம.க. அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.
2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.
வாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2-வது குற்றவாளியாக எனது மகனும், 3-வது, 4-வது, 5-வது குற்றவாளிகளாக எனது பேரன், மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
6-வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7-வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7-வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி. தன்ராஜ்யும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.
ஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அ.தி.மு.க. கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.
சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.
2001-ம் ஆண்டுக்கு முன்னர் அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாக ஆகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக இக்கட்சியின் பொதுச் செயலாளரே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்து காட்டிவிடும்.
இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. பாராளுமனற தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.
ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்க முடியாது.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996-ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம்.
அப்போது எங்களது கொள்கையோடு தி.மு.க.வின் கொள்கை ஒத்து போனதால் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு தி.மு.க. தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.
இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3-வது அணியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
அதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: நன்றி: மாலைமலர்
AIADMK in shambles: Ramadoss (from Malaisudar)
Launching a tirade against AIADMK general secretary J Jayalalithaa, PMK founder S Ramadoss, who walked out of the AIADMK-led alliance on Sunday, today said that the former Chief Minister lacked leadership qualities and the party led by her was in a shambles.
Tuesday, October 6, 2009
ஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
Thursday, March 26, 2009
தி.மு.க. காயப்படுத்தியதால் வெளியேறினோம்: பொதுக்குழுவில் ராமதாஸ் ஆவேச பேச்சு
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
படம்: நன்றி: Maalaimalar
தொண்டர்கள் தீர்ப்பே தலைமையின் தீர்ப்பு. ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்துக்களை கேட்டோம். பா.ம.க.வில் ஒவ்வொரு தொண்டனும் மனதளவில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் காயப்பட்டுள்ளனர்.
அதன் வெளிப்பாடுதான் இந்த முடிவு. வேறு எந்த கட்சி தொண்டர்களைப் பார்த்தாலும் எங்கள் கட்சி தொண்டர்கள் வணக்கம் சொல்வார்கள். அந்த நிலை இன்று தி.மு.க., மற்றும் பா.ம.க. தொண்டர்களிடம் இல்லை.
2004-ல் தோழமை உணர்வுடன் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். அப்போது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னேன். ஆனால் கலைஞர், 34 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்.
அப்படியென்றால் பா.ம.க. போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்று சொன்னார். அதையும் தாங்கிக் கொண்டு 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
பாராளுமன்றத்தில் எங்கள் மந்திரிகள் உறுப்பினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டனர். 2006 சட்டசபை தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றோம். 13 இடங்களில் தோற்கடிக்கப்பட்டோம்.
அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை நடந்து கொண்ட செயல்பாடு பா.ம.க. தொண்டர்களை மிகவும் காயப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை தி.மு.க. எந்த நிலையிலும் காப்பாற்றவில்லை. ஆனாலும் நிபந்தனையற்ற முறையில் ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்தோம்.
குரு பேசினார் என்பதற்காக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்றினார்கள். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இங்கு நாங்கள் கூட்டணியில் இல்லை.
நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரே ஒரு தடவை டி.ஆர்.பாலு என்னை சந்தித்தார். நாம் நெருக்கமாக இருப்போம் என்றார். அதன் பிறகும் எங்களை உதாசீனப்படுத்தினார்கள்.
கடந்த 20 நாட்களாக சென்னையில் தங்கி இருந்தபோதும், தி.மு.க.வில் இருந்து ஒரு மாவட்ட செயலாளரோ அல்லது ஒரு சின்ன அமைச்சரோ கூட என்னை சந்தித்து பேசவில்லை.
சந்திக்காதது மட்டுமல்ல தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்று நம்புகிறேன் என பத்திரிகைகளில் ஒரு வார்த்தை கூட கலைஞர் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு செய்யலாம் என்று யோசித்தேன். பொதுக்குழுவை கூட்டி நல்ல முடிவை எடுக்கலாம் என்று கருதி இன்று உங்களால் விடிவு காணப்பட்டுள்ளது.
இது லட்சக்கணக்கான தொண்டர்கள் எடுத்த முடிவு. 1998-ல் இருந்து இன்று வரை பா.ம.க. எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்று வந்துள்ளது. மத்தியில் தொடர்ந்து பா.ம.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது.
அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியும் வெற்றி கூட்டணியாக இருக்கும். 40 தொகுதியிலும் இந்த கூட்டணி வெல்லும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செய்தி: நன்றி: Maalaimalar
பாமக சேர்ந்ததால் அதிமுக கூட்டணி வெல்லும் - சோ
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட போவதாக பாமக பொது்க்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட இருக்கிறது.
இது குறித்து தயாநிதி மாறன் கூறுகையில்,
இந்த முடிவு எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004 தேர்தலை போல் இம்முறையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை பல சுமைகளை தூக்கிவந்தோம். தற்போது சுமை வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.
அதிமுக வெல்லும்-சோ:
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ கூறுகையில், அதிமுக தென் தமிழகத்தில் மிக பலமானதாகத் திகழ்கிறது. பாமகவுக்கு வட தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறது. தற்போது பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
காங். இருந்தாலே வெற்றி தான்-மொய்லி:
மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் எந்த திராவிடக் கட்சியோடு கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கூட்டணியே வென்று வந்திருக்கிறது. பாமக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திமுக-காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றார்.
செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்
Friday, June 13, 2008
திமுக கூட்டணி: பாமக நீக்கம் ?
திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து திமுகவின் செயல் திட்ட குழு இன்னும் நான்கைந்து நாட்களில் கூடி முடிவெடுக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவித்திருக்கிறார். அதுவரை அமைதிகாக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் வன்முறையை தூண்டும் பேச்சு குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
.
தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்டநிலையில், பாமக கூட்டணியில் நீடிக்குமா என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சேதுவின் மகன் பாலமுருகனுக்கும், நர்மதாவுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி இந்த திருமணத்தை நடத்திவைத்தார்.
திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கிய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாமகவின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியுடன் கூட்டணி வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
இறுதியாக மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:
ஆற்காடு வீராசாமி ஒரு சிடியை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய தலையை வெட்டினால் என்ன, வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன? அல்லது ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன? மத்திய அமைச்சர் ராஜாவின் தலையை வெட்டினால் என்ன? எல்லாத்தலைகளையும் வெட்டும் போது வழிகின்ற ரத்தம்தான் என் தலையை வெட்டினாலும் வழியும். இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்வதற்கு தயாராக இருக்கின்றார். ஒரு கட்சியினுடைய பெரிய பிரமுகர். அவர் கூட ஏதோ சங்கத்தின் தலைவர் என்று சொன்னார்.காடுவெட்டி குரு என்று சொல்கிறார்கள்.
காடுவெட்டி குரு. அவர் காடுவெட்டினாலும் சரி, மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களையே வெட்டினாலும் சரி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் தளபதி என்று சொல்வார்கள். அந்த தளபதியே போருக்கு தயாராகிவிட்டார். வெட்டுவார்கள், குத்துவார்கள் என்ற இந்த அச்சுறுத்தல் இன்று, நேற்றல்ல என்னுடைய ஆரம்பகால அரசியலிலேயே நான் கேட்டு, கேட்டு புளித்துப்போன சொற்கள்.
திருவாரூரில் இருந்து கிளம்பும் போதே வாய்க்கரிசியை வாங்கிக் கொண்டு புறப்பட்டவன்தான் நான் என்று சொல்வது வழக்கம். இன்று கூட ராமதாஸ் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக புகார் கூறி யிருக்கிறார். அதற்கு என்ன சாட்சி?
பெண்கள் வேண்டுமானால் வீட்டில் ஒட்டுகேட்கலாம். ஒட்டுகேட்பதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன.
மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லோரும் ஓட்டு வேண்டுமானால் கேட்கலாம். ஒட்டுகேட்க முடியாது. இந்த பேச்சு ஆபத்தான பேச்சாகும். சதி திட்டம் தீட்டி இப்படி பேசியிருக்கலாம். யார், யார் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சிடியை போட்டு போலீஸ் உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவுநாள் உறவு என்று வீராசாமி கேட்டார். கேட்டவர் கட்சியின் பொருளாளர். அதை கேட்டவர் கட்சியின் தலைவர். இன்னொருவர் தலைமை கழகத்தின் முதன்மை செயலாளர். இவர்களெல்லாம் நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு அளிக்கின்ற உறுதிமொழி இன்னும் நான்கைந்து நாட்களில் கடலூர் மாநாடு முடிந்த பிறகு கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழுவை கூட்டி இவர்களோடு (பாமக) உறவு நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை ஐந்து ஆறு நாட்களில் அளிப்பேன்.
ஏனென்றால் இவ்வளவு வன்முறைகளை, இவ்வளவு கடுமையான சொற்களை தாங்கி கொண்டுதான் ஒரு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றால், அதைவிட அவமானம் ஒன்றும் இருக்க முடியாது. அந்த அவமானத்தை எப்படி துடைப்பது. என்பதற்கு உயர்நிலை செயல் திட்ட குழுவிலே முடிவெடுப்போம்.
உங்களுடைய கொந்தளித்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக இதனை தெரிவிக்கிறேன். அமைதியாக இதை அணுக வேண்டும். இதை பற்றி யாரும் அவரவர் வாய்க்கு வந்தவாறுயெல்லாம் பேசக்கூடாது. உண்மைநிலை தெரிகின்ற வரையில் இதை பற்றி விமர்சிக்கக்கூடாது.
நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற வரையில், எந்த நடவடிக்கையாக, எந்த முடிவாக இருந்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
செய்தி: நன்றி: மாலைச்சுடர்