Thursday, October 15, 2009

எம்பிக்கள் பயணத்தின் பின்னணி

திமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..
.
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.

சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: