Wednesday, October 21, 2009

அதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்

அதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.

இதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.

ஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: