பரமக்குடியில் அத்வானி பிரசாரம்
பா.ஜ. ஆட்சியில் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்
பரமக்குடி, மே 8: 'பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரசிடம் அந்த தன்மை இல்லை' என்று பரமக்குடியில் அத்வானி பேசினார்.
பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, தமிழகத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் பிரசாரத்தில் 123வது மாவட்டமாக ராமநாதபுரம் வந்துள்ளேன். தேர்தலுக்கு முன்பே பெரும்பான்மை கூட்டணியை அமைத்தது பா.ஜ.தான்.
இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பா.ஜ. ஆட்சியில் இந்தியா அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை பெற்றது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்கி கவுரவித்தது. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றியது.
மன்மோகன் சிங் ஆட்சியில், பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுடன் சரியான அணுகுமுறை இல்லாததால் நட்புறவு கெட்டு விட்டது. பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரஸ் அரசிடம் அந்த தன்மை இல்லை. தமிழர்கள் அங்கு பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கை, நேபாள நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வெளியுறவுத் துறை செயலாளர் என்னை சந்தித்தபோது, இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஒழிப்போம்.
தமிழகத்தில் ராமநாதபுரம் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையே காரணம். பா.ஜ.ஆட்சிக்கு வந்தால் திருநாவுக்கரசர் அமைச்சர் ஆக்கப்படுவார். அவர் உங்கள் மாவட்டத்தை முன்னேற்ற பாடுபடுவார்.
இவ்வாறு அத்வானி பேசினார்.
செய்தி: நன்றி: தினகரன்
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் கட்சி தலைவர் அத்வானி. அருகில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, சமக கட்சி தலைவர் சரத்குமார், எச்.ராஜா, சந்திரலேகா.
படம்: நன்றி: தினகரன்
இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது * சென்னை கூட்டத்தில் அத்வானி பெருமிதம்
சென்னை: மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளில் மேன்மையான நாடாக இந்தியா வர வேண்டும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசினார்.பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று இரவு, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:
கடந்த 1952 முதல் 2009 வரையிலான 15 லோக்சபா தேர்தலிலும் நான் பங்கெடுத்துள்ளேன். ஒன்று வேட்பாளராகவோ அல்லது தீவிர பிரசாரம் செய்பவராக இருந்துள்ளேன். இதுபோன்ற நேரம் வரும்போது என் முன் ஒரு கேள்வி எழும். கடந்த 14 லோக்சபா தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று வருத்தம் அளிக்கும் செய்தி, மற்றொன்று மகிழ்ச்சியான செய்தி.
வாஜ்பாய் என்னுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியாதது வருத்தத்திற்குரிய செய்தி. இரண்டாவது, தென் மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய வரும்போது பா.ஜ., கட்சி வடமாநில கட்சி என்று விமர்சனம் செய்வர். இந்தத் தேர்தலில் அப்படி கூற முடியாது; காரணம், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.முந்தைய கால ஆட்சிகள், தேர்தலின் போது, "நாங்கள் இதையெல்லாம் செய்தோம்' என்று பெருமையுடன் கூறுவதற்கு சில திட்டங்கள் இருக்கும்.
ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சியில், சொல்வதற்கு என்று எதுவும் இல்லை.காங்கிரஸ் ஒரே கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவதைத் தகர்க்க வேண்டும்; அப்போது தான் நாடு வளர்ச்சி பெறும் என அப்போதே முடிவெடுத்தோம். அதனால் தான் அப்போதே பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி வைத்தோம். தொடர்ந்து மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஒரு கட்சி ஆதிக்கத்தை மாற்றி, இரு துருவமாக கொண்டு வந்துள்ளோம்.
கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளோம். சீனா, நோக்னோர் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி, தன்னை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக உலக நாடுகளுக்கு பறைசாற்றியது. அந்த நேரத்தில், "இந்தியாவும் அணு ஆயுதம் படைத்த நாடாக வேண்டும்' என்று, ஜனசங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.கடந்த 1964, 65ம் ஆண்டுகளில் நாங்கள் நினைத்ததை 1998ல் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியாவின் வல்லமையை உலகுக்கு வெளிப்படுத்தினோம்.
அப்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மன்மோகன் சிங், "அமெரிக்கா பொருளாதார தடை கொண்டு வந்துவிடும், மக்கள் பாதிக்கப்படுவர்' என்று விமர்சித்தார்.பொருளாதார தடை விதித்தாலும் எதிர்கொண்டு நம்மால் சாதிக்க முடியும் என்று மன்மோகனுக்கு பதில் தரப்பட்டது. அதன்படியே இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும், பொருளாதார நிர்வாகத்தை திறமையாக கையாண்டு வெற்றி பெற்றோம்.
இப்போது அமைந்துள்ள ஐ.மு., கூட்டணி, முற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாதத்தின் விலையை நாடு இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். நேர்மையான ஆட்சி, நாட்டின் மேம்பாடு, பாதுகாப்பு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளின் மேன்மையான நாடாக இந்தியா வரும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இவ்வாறு அத்வானி பேசினார்.
ச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:
பா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என எல்லா இடங்களிலும் கேட்கின்றனர். பா.ஜ.,வுடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி வைத்திருந்தன. சமத்துவ மக்கள் கட்சி மட்டும் ஏன் கூட்டணி வைக்கக் கூடாது? பா.ஜ., ஆட்சியின் போது, யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டே இல்லை. அதனால், பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறேன்.
இப்படி பேசுவதால் பா.ஜ.,வுடன் ஒன்றிப் போய்விட்டார்; ஜெயித்ததும் மந்திரியாவார் என்றெல்லாம் பேசுவர்.நான் பதவிக்கு ஆசைப்படவில்லை; மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
மத்தியில் நல்லாட்சி அமைய பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டும்.இவ்வாறு சரத்குமார் பேசினார்.கூட்டத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சந்திரலேகா மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: நன்றி: Dinamalar
No comments:
Post a Comment