Monday, May 4, 2009

கருணாநிதி பதவி விலகுக: ராமதாஸ்

பஸ் கட்டண குறைப்பு விவகாரம் ஒரு வரலாற்று மோசடி என்றும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் பதவி விலக வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எவ்வளவு நாடகம் ஆடினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்று தெரிந்துவிட்டது. இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் திமுகவினரும், அதன் கூட்டணி தலைவர்களும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.

500 ரூபாய் நோட்டு கட்டுக்களுடன் திமுக வேட்பாளர்களும், அவர்களது அடியாட்களும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். மணல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி மூலம் கிடைத்த அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளமாய் பாய்கிறது.

இதை தடுக்க வேண்டியதேர்தல் அதிகாரியும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். குறிப்பாக வேலூர் மற்றும் மதுரைமாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகிறார்கள்.

அரக்கோணம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது புகார் கொடுத்த பாமக மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். அரக்கோணத்தில் கல்வி கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து சாராய ஆலை தொடங்கி யுள்ள ஒரு பிரமுகர் ஊரையே விலைபேசி கொண்டிருக்கிறார்.இதை தடுக்க வேண்டிய நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

பஸ் கட்டண உயர்வு மற்றும் ரத்து என்பது தமிழக வரலாற்றில் இல்லாத மோசடியாகும். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் நேருவும், முதலமைச்சர் கருணாநிதியும் பதவி விலக வேண்டும். மாவட்ட கலெக்டர்களை டம்மியாக்கிவிட்டு தேர்தல் அதிகாரிகளுக்கும், மேலிட பார்வையாளர்களுக்கும் பொறுப்பு களையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.

தனி ஈழம்தான் தீர்வு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா துணிச்சலுடன் அறிவித்துள்ளார். இதனை உலகத் தமிழர்கள் பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் கருணாநிதி இந்தியா போர் படை அனுப்ப முடியுமா? சீனா சும்மா இருக்குமா? என்று பேசி வருகிறார்.1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழிபேசும் மக்களுக்கு தனி நாடு உருவாக்க இந்திரா காந்தி எடுத்த முயற்சி கூட சீனா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்த்தன.

ஆனால் துணிச்சலுடன் இந்திராகாந்தி தனி நாடு உருவாக்கினார். இதை வரவேற்று கருணாநிதி தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். எப்போதுமே தமிழ், தமிழர், தமிழினம் என்று வாய்கிழிய பேசுவார். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் தன் நலம், தன் கட்சி, தனது ஆட்சி என்றுதான் செயல்படுவார்.

காவிரி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளிலிருந்தும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்து விட்டார். இலங்கைப் பிரச்சனையில் அவர் நடத்திய கிளைமாக்ஸ் நாடகம்தான் உண்ணாவிரதம். இந்த பிரச்சனையில் நேருக்கு நேர் பொது மேடையில்அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

மத்தியில் அமைந்த தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய 4 ஆட்சியிலும் இடம் பெற்று பதவி சுகம் அனுபவித்த கருணாநிதி எங்களை பார்த்து பதவி சுகம் அனுபவித்ததாக சொல்கிறார். கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் பாமக மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள். ஸ்டாலின் அரசியல் கத்துக்குட்டி. அவர் பாமகவின் பயிலரங்கத்திற்கு வந்து அரசியல் பயிற்சி எடுக்கட்டும்.

ராஜ்யசபா எம்பி பதவி கொள்ளைபுரத்தில் வந்ததாக கூறுகிறார். ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்களெல்லாம் மேலவை பொறுப்பு வகித்திருக்கிறார்கள். 1984-ல் கருணாநிதியும் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான். தமிழகத்தில் 52 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தாத்தா, பேரன் சண்டையில் அரசு கேபிள் டிவி தொடங்கினார்கள். இப்போது அதை கைவிட்டு விட்டார்கள். நாங்கள் கொடுத்திருந்த திட்டத்தின்படி கேபிள் டிவியை அரசு தொடங்கியிருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலையும், ரூ.1000 கோடி வருமானமும் கிடைத்திருக்கும்.

கள் இறக்குவதைவிட அதனை பதநீராக பதப்படுத்தி அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் விற்றால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பூரண மதுவிலக்கு என்பதே பாமகவின் கொள்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: நன்றி: மாலைச்சுடர்

No comments: