Thursday, July 12, 2007

சிரிப்புதான் வருகிறது - கருணாநிதி

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

வெட்கமில்லை, வெட்கமில்லை என்று உடுமலை நாராயண கவிராயர் எழுதிய பாடல் யாருக்குப் பொருந்தும்?

கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வி.கண்ணுச்சாமியை தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் ராசாராமன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது. அந்தத் தேர்தல் முடிந்ததும், அதே வி.கண்ணுச்சாமியை, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது. மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த விஜயகுமார், மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த சண்முகராஜேஸ்வரன், மயிலாப்பூர் உதவிக் கமிஷனராக இருந்த முருகேசன் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் இந்த அதிகாரிகள் எல்லாம் ஜெயலலிதா ஆட்சியிலே மீண்டும் அந்தந்த இடங்களிலே நியமிக்கப்பட்டார்கள். இதிலே, சண்முகராஜேஸ்வரனும், முருகேசனும் என்னுடைய கைது நேரத்தின்போது எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதை தமிழகமே நன்கறியும்.

அவர்களை தேர்தல் ஆணையம் மாற்றிய போதிலும், ஜெயலலிதா மீண்டும் அந்தந்த பதவிகளிலே நியமித்துக் கொண்டார். அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டு, இப்போது அவர், சைவப் பூனையாக மாறி, மதுரை மேற்குத் தொகுதியில் தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பழைய இடங்களில் நியமித்திருப்பதை எதிர்த்து போர் நடத்தப் போகிறோம் என்கிறார்களே. அவர்களை நினைக்கும் போதும் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சிலர் போகும் போதும், Ôவெட்கமில்லை, வெட்கமில்லைÕ என்ற உடுமலையாரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

கூட்டுறவு தேர்தல்களை ரத்து செய்து, தோழமைக் கட்சிகளிடையே பிளவை உண்டாக்கி பிரித்து விடலாம் என்று நப்பாசை கொண்டிருந்தவர்களின் எண்ணத்தில், மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்களே ?

ஏற்கத்தக்க கருத்துக்களை யார் சொன்னாலும், சொல்வது யார் என்று பார்க்காமல், அந்தக் கருத்து எந்த அளவுக்கு சரியானது என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து, இந்த அரசு செயல்பட்டுள்ளது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

உள்ளாட்சித் தேர்தல்களையும் ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்தச் சொல்கிறாரே ஜெயலலிதா?

நல்லவேளை, சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலையும் ரத்து செய்து விட்டு, புதுத் தேர்தல் நடத்துமாறு சொல்லாமல் இருந்தாரே. அதைப் பெரிதுபடுத்தவும் அவரைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்களே?

எதிர்ப்புகள், கோரிக்கைகள் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டால் நீங்கள் பணிந்து விடுகிறீர்களே, அம்மாவைப் பாருங்கள், எதற்கும், எவருக்கும் அசைந்து கொடுப்பதில்லை. அவ்வளவு வைர நெஞ்சம் அவருக்கு?

உண்மைதான். அந்த வைர நெஞ்சம் யாருக்கு வரும்? பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கு திரும்பவும் வேலை கொடுக்காமல் திண்டாட விட்டது- அரசு அலுவலர்களுக்கு சம்பளம், போனஸ் எதுவும் தராமல் சிறையில் தள்ளி வாட்டி வதைத்தது- மக்கள் நலப் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியது- எஸ்மா, டெஸ்மா சட்டங்களைப் பிறப்பித்தது- பொடா சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்குப் பிடிக்காதவர்களை சிறையில் தள்ளி கொடுமை செய்தது- இவைகள் எல்லாம் ஜெயலலிதாவின் வைர நெஞ்சுக்கு எடுத்துக்காட்டுகள்தானே? அது போல் வருமா நமக்கு?

பா.ஜ.க. தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டிருப்பது பற்றி?

பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர் வாஜ்பாய் பேச்சு 22-8-1999ல் பத்திரிகையில் வெளிவந்ததை அப்படியே குறிப்பிடுகிறேன். ÔÔஅ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நாளிலிருந்தே ஜெயலலிதா தொல்லை கொடுக்கத் தொடங்கினார். பா.ஜ.க. அரசை பலவீனப்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு வாரமும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அரசைக் கவிழ்க்கப் போவதாக சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளன்று கூட அவர் அச்சுறுத்தினார். ஆனால், அவரது பிளாக் மெயில் தந்திரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை என்ற இந்தப் பேச்சை மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டால், அவர்களது இன்றைய சந்திப்பு பற்றி சிரிப்பு வரத்தானே செய்யும்.

அ.தி.மு.க.வுடன் பா.ம.க. தோழமை கொண்டிருந்த போது, ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்ற பா.ம.க. தலைவர் ராமதாசை பல மணி நேரம் காத்திருக்கச் செய்த ஜெயலலிதா, தற்போது ராமதாஸ் எங்கள் அணிக்கு வந்தால் பாசத்துடன் வரவேற் போம் என்று சொல்லியிருப்பதைப் படித்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

ராமதாசே ஜெயலலிதாவின் இந்தப் பதில் குறித்து, அது தேவையற்ற கேள்வி-பதில் என்றும், அது வருத்தத்தை அளிக்கிறது என்றும் சொல்லி விட்டார். அவருக்கு என்னைப் பற்றியும் தெரியும், அந்த அம்மையாரைப் பற்றியும் தெரியும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

Nandri: Source: Dinakaran (13-July-2007 - Chennai edition)

No comments: