அஞ்சுகம் அம்மாளின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தென்படுகிறதே ? கவனித்தீர்களா ? இதெல்லாம் குருபெயர்ச்சியின் லீலையா ? எதற்கும் இந்தப் படத்தைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். (படத்தைக் கிளிக்கி பெரிதாக பார்க்கவும்)
செய்தி: படங்கள்: நன்றி: தினகரன் 2-டிசம்பர்- 2008
முதல்வர் கருணாநிதியை கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டால் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி., மு.க.அழகிரி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, முதல்வரின் மகள் செல்வி ஆகியோர் 2 கார்களில் வந்தனர். முதல்வருடன் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தயாளு அம்மாள், மருமகன் செல்வம், அவரது மகள் டாக்டர் எழில், மருமகன் டாக்டர் ஜோதிமணி, ஸ்டாலின் மனைவி சாந்தா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், அழகிரி மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேசன், இன்னொரு மகள் அஞ்சுகம், மருமகன் விவேக், முதல்வரின் மகன் மு.க.தமிழரசு, அவரது மகன் அருள்நிதி, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
சந்திப்பு முடிந்து அனைவரும் 5.30 மணிக்கு வெளியில் வந்தனர். அப்போது முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். பத்திரிகையாளர்கள் அதிகமாக இருந்ததால், ‘அறிவாலயத்தில் முதல்வர் நிருபர்களை சந்திப்பார்’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் பின்னர் அவர்கள் சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தியம்மாள் வீட்டுக்கு சென்றனர்.
மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
சந்தோஷமாக இருக்கிறது.
இந்த சந்திப்பு எதனால் நடந்தது?
இதயத்தால் நடந்தது.
தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?
அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.
உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?
எனக்கு கோபம் வரும் போதும், வருத்தம் வரும் போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின் போதும் இருந்தது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?
இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.
குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?
எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.
பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?
கண்கள் பனித்தது. இதயம் இனித்தது.
அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?
மனமிருந்தது எனவே மாற்றம் ஏற்பட்டது.
மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?
கேளாதீர்கள். கிளறாதீர்கள்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்து கொள்ளலாமா?
அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக தொலைகாட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?
கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.
இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?
எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகு தான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.
தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?
பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.
நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?
மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.
இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?
இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.
சமரசத்தின் பின்னணி என்ன?
அழகிரி, ஸ்டாலின்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
Monday, December 1, 2008
குடும்பம் ஒரு கழகம்
Labels:
கருணாநிதி,
கலாநிதி மாறன்,
தயாநிதி மாறன்,
மு.க.அழகிரி,
மு.க.ஸ்டாலின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment