Monday, November 17, 2008

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் - சத்தியநாராயணா திடீர் நீக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக் கட்சியையும் தொடங்கி ரஜினிக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதையடுத்து ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார் ரஜினி.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார். அரசியல் குறித்த கேள்விக்கு மட்டும், ஆண்டவன் உத்தரவிட்டால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்றார்.

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ரஜினி கூறாமல், ஆண்டவன் உத்தரவு கிடைத்தால் வருவேன் என்று ரஜினி கூறியிருப்பதை சாதகமான அம்சமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். கடவுள் பக்தரான ரஜினி, கடவுளின் அனுமதியுடன், அவரது உத்தரவுடன் வர விரும்புவதையே இது வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.

அனேகமாக எந்திரன் படத்தை முடித்து விட்டு அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

ரஜினியும் தற்போது அரசியல் பிரவேசம் குறித்த சிந்தனைக்குப் போய் விட்டதாகவே தெரிகிறது. சமீபத்தில் அத்வானியின் நூல் வெளியீட்டு விழாவின்போது அத்வானியை விட ரஜினிக்கே பலத்த கரகோஷமும், ஆதரவுக் குரலும் காணப்பட்டது.

இதைப் பார்த்து துக்ளக் ஆசிரியர் சோவும் கூட, இவ்வளவு பெரிய ஆதரவை வைத்துக் கொண்டு எதற்காக ஆண்டவன் உத்தரவை ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என ரஜினியை வைத்துக் கொண்டே கூறினார். இதெல்லாம் ரஜினி மனதில் புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக ரசிகர் மன்றங்களை ஒழுங்கமைக்கும் பணியில் ரஜினி இறங்கியுள்ளார். அதற்கு முதல் படியாக, யாரும் எதிர்பாராத வகையில் சத்தியநாராயணாவை ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால நண்பர்களில் சத்தியநாராயணாவும் ஒருவர். கடந்த 25 ஆண்டு காலமாக ரசிகர் மன்றங்களை நிர்வகித்து நடத்தி வருகிறார்.

ஆனால் மன்றத்திற்குள் கோஷ்டியை உருவாக்கி வைத்து வருவதாக சத்தியநாராயணன் மீது புகார் எழுந்தது. மேலும் மன்றங்கள் தொடர்பான, ரசிகர்களின் உணர்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களை தனக்கு அவர் தெரிவிக்கவில்லை என்ற அதிருப்தியும் ரஜினிக்கு எழுந்ததால், அவரை நீக்கும் முடிவுக்கு ரஜினி வந்ததாக தெரிகிறது.

அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் தனது குடும்ப நண்பரான சுதாகர் என்பவரை ரசிகர் மன்றத் தலைவராக்கியுள்ளார் ரஜினி. இனிமேல் மன்றங்கள் தொடர்பான அனைத்தையும் சுதாகர்தான் கவனிப்பார்.

சத்தியாநாராயணாவின் நீக்கம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, புதிய மாற்றத்திற்கான அடிக்கல்லாகவே இதை அவர்கள் பார்க்கின்றனர்.

விரைவில் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றப் பிரதிநிதிகளை ரஜினி சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ரஜினியிடமும், மன்ற நிர்வாகத்திலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் புதிய பிரவேசத்திற்கு வழிவகுக்குமா என்ற ஆர்வத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர்.

செய்தி: நன்றி: Thatstamil

2 comments:

rapp said...

//சரத்குமார் என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது //

இதுக் கூட பரவாயில்லை.

//கார்த்திக் என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது //

இதுதான், ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

குப்பன்.யாஹூ said...

சாம்பார் வடை, நீங்க எப்போ நக்கீரன், ஜூனியர் விகடன் நிருபர் ஆனீர்கள்.

ரஜினியும், சத்யநாரயணா வும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். சத்ய நாராயண அம்மா உடல் நிலை மோசமாக இருந்தது, அவருக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக தற்காலிக ஓய்வு கொடுக்க பட்டுள்ளது.

அது போக ரசிகர்களுக்கு யார் மன்ற தலைவர் என்பது பெரிய விசயமே இல்லை, ரசிகர்கள் விரும்புவது ரஜினியை தானே தவிர சத்யநாரயனவை அல்ல.


குப்பன்_யாஹூ