Showing posts with label தி.மு.க. Show all posts
Showing posts with label தி.மு.க. Show all posts

Wednesday, August 5, 2009

தி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்

தி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா? சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்


படம் நன்றி: தினகரன்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.



சென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?

தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.

  • மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,
  • சுயமரியாதைத் திருமணச் சட்டம்,
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.

  • வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,
  • பழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,
  • மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
  • பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,
  • உருது அகாடமி,
  • சென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,
  • தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,
  • தை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு;
  • தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.

  • காமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.
  • முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.
  • அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.
  • கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.
  • அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,
  • உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,
  • 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
  • ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;

    ஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

  • 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,
  • நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.
  • தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.
  • தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.
  • பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,
  • 1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.

  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,
  • 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.
  • ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
  • ரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.
  • வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.
  • 598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  • கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
  • ரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
  • அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

  • தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;

  • ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

  • அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;

  • சென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,
  • ரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,
  • ரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.
  • வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;
  • ரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
  • ரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
  • சென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.
  • குடிசை மாற்று வாரியம்,
  • குடிநீர் வடிகால் வாரியம்,
  • கண்ணொளி வழங்கும் திட்டம்,
  • பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,
  • ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம்.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,
  • இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,
  • எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;

  • புன்செய் நிலவரி அறவே நீக்கம்,
  • உழவர் சந்தைகள் திட்டம்.
  • ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,
  • விவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;

  • 6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • ஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.
  • தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
  • கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.
  • திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

    செய்தி: நன்றி: தினகரன்

  • Sunday, April 5, 2009

    தி.மு.க. வேட்பாளர்கள் பயோ-டேட்டா



    லோகசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளளனர். அவர்களின் பயோ டேட்டா வருமாறு:

    மதுரை
    பெயர்: மு.க.அழகிரி (58)
    தொழில்: அரசியல்
    படிப்பு: பி.ஏ.,
    ஜாதி: இசை வேளாளர்
    கட்சி பொறுப்பு: தென் மண்டல அமைப்புச் செயலர்.
    குடும்பம்: மனைவி காந்தி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மகன் தயாநிதி அழகிரி.


    நாமக்கல்
    பெயர்: எஸ்.காந்திசெல்வன்
    ஊர்: போதுப்பட்டி, நாமக்கல்
    ஜாதி: கொங்கு வேளாள கவுண்டர்
    தொழில்: லாரி தொழில், முழு நேர அரசியல்
    அரசியல் அனுபவம்: 1984ல் நாமக்கல், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டு, தன் அரசியல் பயணத்தை துவக்கினார். 1986 - 91 நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்1987ல் நகர வங்கி (அர்பன் பேங்க்) இயக்குனர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்துள்ளார். ஸ்டாலின் ஆதரவாளர்.


    கிருஷ்ணகிரி
    பெயர்: இ.ஜி.சுகவனம்
    சொந்த ஊர்: எமக்கல்நத்தம்
    வயது: 53
    படிப்பு: டி.பார்ம்.,
    ஜாதி: 24 மனை தெலுங்கு செட்டியார்
    தொழில்: மெடிக்கல் ஸ்டோர், விவசாயம் மற்றும் முழு நேர அரசியல்.
    அரசியல் அனுபவம்: 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் நஞ்சேகவுடுவை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.


    தர்மபுரி
    பெயர்: தாமரைச் செல்வன்
    வயது: 45
    சொந்த ஊர்: இலக்கியம்பட்டி
    கல்வி: பி.எஸ்சி., பி.எல்.,
    ஜாதி: வன்னியர்
    தொழில்: சென்னை ஐகோர்ட் வக்கீல். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணனிடம் ஜுனியராக பணியாற்றியவர்.
    அரசியல்: தர்மபுரி ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர்.


    திருவண்ணாமலை
    பெயர்: வேணுகோபால்
    வயது: 73
    படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.,
    தொழில்: விவசாயம்
    அரசியல் அனுபவம்:1967ல் திருவண்ணாமலை காங்கிரஸ் ஒன்றிய சேர்மன். 71ல் தி.மு.க.,வில் சேர்ந்து தட்ராம்பட்டி சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., ஆனார். திருப்பத்தூர், வந்தவாசி லோக்சபா தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி. கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட அவைத் தலைவர்.


    அரக்கோணம்
    பெயர்: எஸ். ஜெகத்ரட்சகன்
    வயது : 59
    சொந்த ஊர் : வழுதாவூர். தற் போது சென்னை அடையா ரில் வசித்து வருகிறார்.
    கல்வி : எம்.ஏ., பி.லிட்., பிஎச்.டி.,
    ஜாதி : வன்னியர்
    தொழில் : பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் பல பொறியியல் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக் கழகம் நடத்தி வருகிறார்.
    அரசியல் அனுபவம் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆர்.எம். வீரப்பனுக்கு நெருக் கமானவர். 1999 - 2004ல் அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு வீரவன்னியர் பேரவை துவக்கினார். ஜனநாயக முற்போக்கு கழகம் கட்சியை துவக்கி நடத்தினார். கடந்த வாரம் தி.மு.க.,வில் இணைந்தார்.


    நாகை
    பெயர் : ஏ.கே.எஸ்.விஜயன் (48)
    படிப்பு: பி.ஏ.,
    சாதி: ஆதிதிராவிடர்
    தொழில்: விவசாயம்
    கட்சி பதவி: ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க., உறுப்பினர், சித்தமல்லி ஒன்றிய துணைச் செயலர், கோட்டூர் ஒன்றிய செயலர். 2004ல் இருந்து நாகை மாவட்ட தி.மு.க., செயலர். 1999ல் தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எம்.பி., யானார். 2004ல் கம்யூ., கூட்டணியில் மீண்டும் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக மீண்டும் தி.மு.க.,வில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
    முகவரி: சித்தமல்லி, மன்னார்குடி தாலுகா


    பொள்ளாச்சி
    பெயர் : கு.சண்முகசுந்தரம்
    சொந்த ஊர் : பெருமாள்புதூர்
    பிறந்த தேதி : 12.08.1970 (39)
    கல்வித்தகுதி : பி.இ.,
    சாதி: கொங்கு வேளாள கவுண்டர்
    கட்சியில் பொறுப்பு : 20 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினர்.
    தொழில் : திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி.
    பிற தகவல் : அமைச்சர் நேரு சகோதரரின் கல்லூரி தோழன் மற்றும் தொழில் பங்குதாரர்.


    கள்ளக்குறிச்சி

    பெயர்: ஆதி.சங்கர் (51)
    படிப்பு: பி.எஸ்சி., பி.எல்.,
    ஜாதி: முதலியார்
    தொழில்: வக்கீல்
    கட்சி பதவி: மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர்,தலைமை செயற்குழு உறுப்பினர்.தற்போது, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர்
    வகித்த பதவிகள்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்,1999-04 ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்.பி.,
    ஊர்: திருக்கோவிலூர்.


    கன்னியாகுமரி
    பெயர்: ஹெலன் டேவிட்சன் (38)
    படிப்பு : எம்.எஸ்சி., பி.எட்.,
    தொழில்: வீட்டு நிர்வாகம் மற்றும் கணவரின் டைல்ஸ் கடைக்கு இயக்குனர்.
    ஜாதி: ஆர்.சி., கிறிஸ்தவ நாடார்
    ஊர்: குருசடி
    கட்சி பொறுப்பு: ஐந்து ஆண்டுகளாக மகளிர் தொண்டரணி குமரி மாவட்ட அமைப்பாளர். கணவர் டேவிட்சன் நாகர்கோவில் நகர தி.மு.க., இளைஞரணி துணை செயலராகவும், 51வது வட்ட செயலராகவும் உள்ளார். மாமனார் லாரன்ஸ், அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க.,வில் பணியாற்றியவர்.


    ஸ்ரீபெரும்புதூர்
    பெயர்: டி.ஆர்.பாலு
    வயது: 67
    படிப்பு: பி.எஸ்சி., எல்.சி.இ.,
    சொந்த ஊர்: தலச்சேரி, திருவாரூர் மாவட்டம்.
    அரசியல்: ஐந்தாவது முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்தார். 1986 - 1992ல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். 1996, 98, 99 ஆகிய தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்டு, பெட்ரோலியத்துறை, சுற்றுச்சூழல், கப்பல் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.


    மத்திய சென்னை
    பெயர்: தயாநிதி
    வயது: 42
    படிப்பு: பி.ஏ.,
    தொழில்: மீடியா அதிபர்
    அரசியல்: மறைந்த முரசொலிமாறனின் மகன். 2004ல் தகவல் தொழில்நுட்பத் துறையில் மத்திய அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.


    ராமநாதபுரம்
    பெயர்: சிவக்குமார் (எ) ஜே.கே.ரித்தீஷ்குமார் (36)
    தொழில்: நடிகர்
    படிப்பு: பி.சி.இ., (பி.இ.,)
    ஜாதி: மறவர்
    ஊர்: மணக்குடி
    கட்சி பொறுப்பு: ராமநாதபுரம் 23வது வார்டு பிரதிநிதி.


    தூத்துக்குடி
    பெயர் : எஸ்.ஆர்.,ஜெயதுரை(41)
    தொழில்: சென்னை தி.நகரில் சித்தா ஆயுர்வேத இயற்கை யுனானி மருத்துவமனை வைத்துள்ளார்.
    படிப்பு: பி.எஸ்சி., விலங்கியல். இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் முதுகலை பட்டய படிப்பு (பி.ஜி.டி. ஒய்.என்.,)
    ஜாதி: இந்து நாடார்
    ஊர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மொட்டச்சி குடியிருப்பு (எ) மங்களபுரம்.
    கட்சி பொறுப்பு: 1988 முதல் தி.மு.க., இளைஞரணியில் இருந்து வருகிறார். கிளைக்கழக தலைவராக இருந்து தற்போது கட்சியின் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார்.
    குடும்பம்: மனைவி செல்வி, மகள்கள் சுதாராணி(9), சுஜா(7), ரோஜாஸ்ரீ (4).


    தென் சென்னை
    வேட்பாளர் பெயர்: ஆர்.எஸ்.பாரதி,
    பெற்றோர் பெயர்: ராமன்-விஜயலட்சுமி.
    பிறந்த தேதி : 15.08.1947 (சுதந்திர தினம் அன்று)
    கல்வி தகுதி: பி.ஏ., பி.எல்.,
    மனைவி பெயர்: டாக்டர் சம்பூரணம்.
    பிள்ளைகள் : இரண்டு மகன்கள்.
    முகவரி : எண்: 18, 29வது தெரு, தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம்.
    கட்சி பணி: கடந்த 1965ம் ஆண்டு கட்சியில் இணைந்தார், மாணவர் அணி செயலர், சட்டத் துறை செயலர் மற்றும் பல.
    வகித்த பதவி : கடந்த 1986ம் ஆண்டு முதல் ஆலந்தூர் நகராட்சித் தலைவர்.


    பெரம்பலூர்
    பெயர்: து.குமரேசன் (எ) நெப்போலியன்
    சொந்த ஊர்: திருச்சி மாவட் டம் லால்குடி அடுத்த பெருவளநல்லூர்.
    கல்வி: பி.ஏ., (வரலாறு)
    ஜாதி: ரெட்டியார்
    குடும்பம்: பெற்றோர் துரைசாமி-சரஸ்வதி, மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ்(11), குணாள் (8)
    தொழில்: திரைப்பட நடிகர் மற்றும் சென்னை ஜீவன் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவன அதிபர்.
    அரசியல் அனுபவம்: 2001-06ம் ஆண்டுகளில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,


    கரூர்
    பெயர்: கே.சி.பழனிச்சாமி
    பிறந்த தேதி: 24-4-1935
    பிறந்த ஊர்: கரூர் மாவட்டம் காவாலிப்பாளையம்
    கல்வித்தகுதி: 10ம் வகுப்பு
    ஜாதி: 24மனை தெலுங்கு செட்டியார்
    குடும்பம்: பெற்றோர் சின்னப்பனார்- வெங்கிட் டம்மாள், மனைவி பா.அன்னம்மாள், மகன் கே.சி.பி.சிவராமன் (தொழிலதிபர்), மகள் பி.கலையரசி. உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.
    தொழில்: கரூர் மாவட்டம் மாயனூரில் பாலித்தீன் சிமென்ட் பைகள் தயாரிக்கும் கே.சி.பி., பேக்கேஜிங் லிமிடெட் நிறுவனம். புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவிலில் காகித ஆலை.
    அரசியல் அனுபவம்: 1971ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் கம்யூ., உறுப்பினர். 1971 முதல் தி.மு.க., உறுப்பினர். 1986-1991 வரை கரூர் நகராட்சித் துணைத் தலைவர். 1990, 1997 இருமுறை பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர். 2004ல் கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.,யாகியுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக தி.மு.க., சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.


    தஞ்சாவூர்
    பெயர்: பழனிமாணிக்கம்.
    பிறந்த தேதி : 15.08.1950
    பிறந்த ஊர்: புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி.
    ஜாதி: கள்ளர்
    படிப்பு: எம்.ஏ., பி.எல்.,
    குடும்பம்: பெற்றோர் சுப்பையா வன்னியர் - மரகதம் அம்மாள், மனைவி - மகேஷ்வரி, மகள் - பிரீத்தி எம்.பி. பி.எஸ்., படித்து வருகிறார்.
    அரசியல் அனுபவம்: கல்லூரி பருவத்தில் இருந்து தி.மு.க., உறுப்பினர். தஞ்சாவூர் வக்கீல் சங்க செயலர், தி.மு.க., மாநில மாணவரணி செயலர், விவசாய அணி துணைச் செயலர், மத்திய அரசின் வேளாண் நிலைக்குழு தலைவர், தி.மு.க., லோக்சபா கொறடா.தற்போது மத்திய நிதித்துறை இணையமைச்சர்.1996ல் காங்., வேட்பாளர் துளசியய்யா வாண்டையாரையும், 1998ல் ம.தி.மு.க., வேட்பாளர் எல்.கணேசனையும், 1999, 2004ல் தேர்தல்களில் அ.தி.மு.க., வேட்பாளர் தங்கமுத்துவையும் வென்று எட்டாவது முறையாக மீண்டும் தேர்தல் களத்தில் உள்ளார்.


    திருவள்ளூர்(தனி)
    பெயர்: காயத்ரி
    வயது: 31
    பிறந்த தேதி:13.10.1978
    ஜாதி: ஆதிதிராவிடர்
    சொந்தஊர்: பூந்தமல்லி
    கல்வி: எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ., (படிக்கிறார்)
    பொறுப்பு:பூந்தமல்லி நகராட்சி தி.மு.க., வார்டு கவுன்சிலர்
    குடும்பம்: கணவர், மூன்று மகள்கள் கணவர் பெயர்:ஸ்ரீதரன் (தி.மு.க., பூந்தமல்லி ஒன்றிய துணை செயலர்)
    கணவர் தொழில்: செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்கள்.


    நீலகிரி
    பெயர்: ராஜா
    வயது: 46
    பிறந்த தேதி:10-5-1963
    சொந்த ஊர்: பெரம்பலூர் அருகே வேலூர் கிராமம்.
    பெற்றோர்: ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை
    மனைவி: பரமேஸ்வரி
    மகள் : மயூரி
    ஜாதி: ஆதிதிராவிடர்
    கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.எல்.,
    தொழில்: வக்கீல்
    அரசியல் அனுபவம்: 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அரசியல் பிரவேசம். கன்னி முயற்சியிலேயே வெற்றி. 1998ல் அ.தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி. 1999ல் மீண்டும் எம்.பி.,யானார். வாஜ்பாய் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர். 2001ல் சுகாதாரத் துறை இணை அமைச்சராக மாற்றம். 2006ல் வனத்துறை, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

    செய்தி: படம்: நன்றி: தினமலர்

    Thursday, June 19, 2008

    தேர்தலில் தி.மு.க. தோற்கும்: வைகோ

    "தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க., மண் டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:

    ம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமையான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.


    நிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

    நான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.

    செய்தி: நன்றி: தினமலர் 20 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

    Tuesday, June 17, 2008

    லட்சுமணன் கோடு இனி இல்லை - ராமதாஸ்

    லட்சுமணன் கோடு என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை, மக்கள் பிரச்னைகளுக்காக இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு மேற்கொண்டுள்ள முடிவைப் பார்க்கையில், ‘இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்கிறார்கள்Õ என்ற புகழ்பெற்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. திமுக முடிவுக்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்னையில் எங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியபடி இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்து வைக்கப்பட்டு விட்ட விவகாரம். முதல்வரால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட விவகாரம். ஆனாலும், 6 மாதங்கள் கழித்து அதனை பிரச்னையாக்கி, அரசியலாக்கி இருக்கிறார்கள்.

    தனிமனித விவகாரங்களை, தனிமனிதர்கள் மீது ஏற்படும் கோபதாபங்களை அரசியலாக்கி, அதனை முன்னிறுத்தி கசப்பான அரசியல் முடிவுகளை அறிவிப்பது என்பது தி.மு.க.வுக்கு புதிதல்ல. முன்பு ஒரு முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக என்.சங்கரய்யா இருந்தபோது, அவர் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தால் அந்தப் பொறுப்பில் அவர் இருக்கும் வரை, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்து செயல்பட்டது தி.மு.க. இப்போது அந்தச் சரித்திரம் திரும்பியிருக்கிறது. தி.மு.க. இன்னமும் மாறவில்லை என்பதை மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது.

    கூட்டணி என்கிறார்கள். தோழமைக் கட்சி என்கிறார்கள். ஆனால், முடிவை மட்டும் அவர்களே மேற்கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால், நடப்பது தி.மு.க. ஆட்சிதானே என்று முதல்வர் சொல்கிறார். அவர்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளையும் நட்புக் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால், பிறகு நட்புக் கட்சிகள் தனியாக ஏன் கட்சி நடத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளைக் கலைத்துவிட்டு தி.மு.க.வோடு இணைந்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக ‘வாழ்கÕ என்று குரல் கொடுத்துக் கொண்டுதானே இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது என்பதைத்தான் அவர்களின் முடிவு எடுத்துக் காட்டுகிறது. அதற்கு எப்போதோ முடித்து வைக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வை காரணமாகக் காட்டி பிரச்னையை திசைதிருப்பி பா.ம.க. மீது பழி சுமத்தியிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட முடிவை தி.மு.க. எடுத்துவிட்டதே என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஏனெனில், தி.மு.க.வின் முடிவு அதிர்ச்சியாக இல்லை. இதுவரை எங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள் நின்று செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தோழமை என்கிற உணர்வு அவ்வப்போது குறுக்கிட்டதால், சில பிரச்னைகளில் சுதந்திரமாக எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தது. இப்போது ‘லட்சுமணன் கோடு’ என்கிற எல்லைக்கோடு இனி எங்களுக்கு இல்லை. மக்கள் பிரச்னைகளுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் இன்னும் அதிகமாகக் குரல் கொடுப்போம். எங்கள் பயணம் நேரானது. லட்சியம் உறுதியானது. அதிலிருந்து கிஞ்சித்தும் மாற மாட்டோம்.

    செய்தி: நன்றி: தினகரன் 18 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)