Thursday, June 12, 2008

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்'

சன் டிவி மற்றும் அதனுடன் தொடர்புள்ள எவரோடும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் சேனல்களை பெற அழகிரி துடிப்பது ஏன் என்று எஸ்சிவி கேள்வி எழுப்பியுள்ளது.

எஸ்சிவி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரையில் ராயல் கேபிள் விஷன் சார்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தன்னிலை விளக்கம் தந்துள்ளார். தன்னிலை விளக்கத் தோடு விடாமல் எஸ்.சி.வி. மீது சில இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால், அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப் பட்டிருக்கிறோம்.

எஸ்.சி.வி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களை துன்புறுத்தியதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னிடம் சி.டி. இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.சி.வி. துன்புறுத்தி இருந்தால் அதன் இணைப்பை பெற்று இத்தனை ஆண்டு காலம் எஸ்.சி.வி.யுடன் அவர்கள் இணைந்து பணியாற்றி இருப்பார்களா? இதுபோன்ற புகாரை இத்தனை ஆண்டுகளும் யாரும் கூறவில்லை. ஏன், கடந்த ஓராண்டு காலமாகக்கூட யாரும் கூறவில்லையே. இப்போது சில அதிகாரிகள் மூலம் யாரையாவது மிரட்டி இவர்களே சி.டி. தயாரித்திருக்கலாமே ஒழிய இது முற்றிலும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டாகும்.

பெரும்பாலான ஆபரேட்டர்கள் அவர்களோடு இணைந்து விட்டதாகவும், சன் குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் யாரும் கவலைப்படவில்லை என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அவர்களோடு இணைந்த ஆபரேட்டர்கள் எப்படி இணைந்தார்கள், ஏன் இணைந்தார்கள், எப்படிப்பட்ட நெருக்கடிகளினால் இணைந்தார்கள் என்பது அவர்களது மனசாட்சிக்கே தெரிந்த விவகாரம். பொதுமக்களும் அறிந்த விவகாரம். அதனுள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.

சன் டிவி குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் அடைந்துள்ள கொதிப்பின் காரணமாகத்தானே தன்னிலை விளக்கம் அளிக்க புறப்பட்டிருக்கிறார்கள். பிறகு முழு பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? பொதுமக்கள் கொதிப்பு இல்லை என்றால் சன் குழும இணைப்பை பெற டிராய் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக கூறுவது ஏன்?

பொதுமக்களுக்கு கேபிள் டி.வி. இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் தரவேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே மு.க.அழகிரிக்கு இருந்தால், அதிமுக ஆட்சி நடைபெற்றபோது ஆர்.சி.வி. நிறுவனத்தை தொடங்காதது ஏன்? சன் டிவி மற்றும் அதனோடு தொடர்புடையவர்களோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் குழும இணைப்பை பெற டிராய்க்கு போகப்போவதாகவும் நீதிமன்றம் மூலம் முயற்சிக்கப் போவதாகவும் துடியாய் துடிப்பது ஏன்?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும் என்பதை தவிர வேறு எதுவும் இப்போது கூற நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு எஸ்சிவி கூறியுள்ளது.


x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

தென்மாவட்டங்கள் முழுவதும் கேபிள் டிவியை தொடங்குவேன்





மதுரை, ஜூன் 13: தென் மாவட்ட்ங்கள் முழுவதும் கேபிள் டிவி தொடங்குவேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது:

பொதுமக்கள் நலனுக்காக ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம். சன் நெட்வொர்க் சேனல்களை எங்களுக்கு தாருங்கள் என்று சன் குரூப்பை சேர்ந்த சேனல் பிளஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் அனுப்பினோம். பதில் இல்லை. கடிதம் அனுப்பினோம். அதற்கும் பதில் இல்லை. எனவே சன் சேனல்களை எங்களுக்கு வழங்க உத்தரவு போடுமாறு டிராய் அமைப்பில் மனு கொடுத்திருக்கிறோம்.

ஸ்டார் எங்களுக்கு 20 சேனல் தந்து விட்டது. ஜீ 25 சேனல் தந்து விட்டது. ராஜ் 3 சேனல் தந்திருக்கிறது. ஜெயா கூட தந்துவிட்டது. சன் மட்டும்தான் தரவில்லை.

நாங்கள் ஆபரேட்டர்களை இழுக்கவில்லை. அவர்களாகத்தான் எங்களிடம் வந்தார்கள். எஸ்சிவி தங்களை அடிமையாக வைத்திருந்ததாக கூறினார்கள். நீங்கள் வேறு, நான் வேறு இல்லை என்று சொல்லி சேர்த்துக் கொண்டேன்.

இவ்வாறு அழகிரி கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

? சன் உங்களுக்கு சிக்னல்கள் தரவில்லை என்கிறீர்கள். ஆனால் நேற்று சில இடங்களில் சன் டிவி தெரிந்தது. இது எப்படி?

?? இப்போது 85 சதவீத ஆபரேட்டர்கள் எங்களிடம் உள்ளனர். மீதிப்பேர் எஸ்சிவி இணைப்பில் உள்ளவர்கள். அவர்கள் ஒளிபரப்பி இருப்பார்கள்.

? உங்கள் ஆர்சிவி ஒளிபரப்பும் பகுதியிலேயே சன் டிவி தெரிந்ததே?

?? லோக்கல் ஆபரேட்டர்கள் ஏதாவது செய்திருக்கலாம். அது எனக்கு தெரியாது.

? சன் டிவி தெரியவில்லை என செய்தி அறிவிக்கிறீர்கள். கே டிவி, சன் நியூஸ், சன் மியூசிக் சேனல்களுக்கு அப்படி அறிவிப்பு செய்யவில்லையே?

?? சன் நெட்வொர்க்கிடம் நாங்கள் சன் பேக்கேஜ் கேட்டுதான் விண்ணப்பித்துள்ளோம். அதில் நீங்கள் சொல்கிற எல்லா சேனல்களும் அடங்கும்.

? தமிழகம் முழுவதும் உங்கள் கேபிள் கம்பெனியை விரிவுபடுத்த போகிறீர்களா?


?? முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் தொடங்கப் போகிறேன். சன் சேனல்கள் கிடைத்துவிட்டால் வேகமாக விரிவுபடுத்துவேன்.

? அரசு துவக்க உள்ள கேபிள் டிவியில் ஆபரேட்டர்கள் சேர வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில் நீங்கள் தனி கேபிள் துவக்கியுள்ளீர்களே?

?? அதைப் பற்றி எனக்கு தெரியாது. நாங்கள் தனியார். தனியாக தொழில் தொடங்கியுள்ளோம்.

இவ்வாறு அழகிரி கூறினார். பேட்டியின்போது ராயல் கேபிள் விஷன் நிர்வாக இயக்குனர் துரை அழகிரி, இயக்குனர்கள் ராஜபிரபு, நாகேஷ், மதுரை துணைமேயர் மன்னன், தமிழக அரசு மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பாஸ்கரன், சாலி தளபதி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: படம்: நன்றி: தினகரன் 13 ஜூன் 2008 (சென்னை பதிப்பு)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பி.கு: நீங்கள் கூகிள் ரீடர் அல்லது அது போன்ற செயலிகளால் பதிவுகளைப் படிப்பவரா ? வலைப்பதிவின் புதிய பகுதிகளான ' சொன்னாங்க..சொன்னாங்க,,!!' மற்றும் 'படம்..பப்படம்' பகுதியைக் காண வலைப்பதிவு முகவரிக்கு செல்லவும்.

No comments: