Thursday, April 10, 2008

கத்திப்பாரா, கத்திப் பாரா, பாரா, உஷார்

வெளிநாடுகளுக்குச் செல்வதிலே எனக்கு எப்போதும் அதிக ஆர்வம் இருப்பதில்லை. அதிலே ஆர்வம் படைத்தவர்கள் டி.ஆர். பாலு, ஸ்டாலின் போன்றவர்கள் தான்

---------------------------------------
சென்னை: சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும் எனது தலைமையிலான திமுகவுக்கும் இடையே நிலவும் உறவு வெறும் அரசியல் உறவல்ல, இது கொள்கை ரீதியான உறவு என முதல்வர் கருணாநிதி கூறினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.122 கோடியில் சென்னை இரும்புலியூரில் வாகன சுரங்கப்பாதை, சென்னை புறவழிச் சாலையில் போரூர் வரை நான்கு வழிப்பாதை, சென்னை திரிசூலத்தில் சுரங்கவழி நடைபாதை ஆகியவற்றின் திறப்பு விழாவும் குரோம்பேட்டையில் நடை மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் நடந்தது.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த அந்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்துத.

வெளிநாடுகளுக்குச் செல்வதிலே எனக்கு எப்போதும் அதிக ஆர்வம் இருப்பதில்லை. அதிலே ஆர்வம் படைத்தவர்கள் டி.ஆர். பாலு, ஸ்டாலின் போன்றவர்கள் தான்.

ஆனால் தவிர்க்க முடியாமல், போப் அவர்களைப் பார்ப்பதற்காகவும், நான் ரோம் நகரத்திலே வாடிகன் சிட்டியிலே, ஒரு நாள் தங்கி அவரைப் பார்த்து விட்டு வந்த போதும், லண்டன் மாநகரத்திலே தங்கி இரண்டு மூன்று நாட்கள் அங்குள்ள அமைச்சர்களையும் நண்பர்களையும் சந்தித்த போதும், தொடர்ந்து ஜெர்மனி நாட்டிற்கும், வேறு பல நாடுகளுக்கும், என்னுடைய சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போதும் நான் அந்தப் பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நாட்கள் இருபது.

வந்த பின் 'இனியவை இருபது' என்ற ஒரு சிறிய நூலை எழுதினேன். அந்த நூலில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். சென்னை திரும்பிய பிறகு நண்பர்களிடம் சொல்லும்போதும் அதை சொல்லியிருக்கிறேன்.

நான் வெளிநாடுகளிலே கண்ட இந்தக் காட்சிகளை நம்முடைய தமிழகத்தில், இந்தியத் திருநாட்டில் என்றைக்குக் காண்பது என்ற ஏக்கத்தோடு தான் திரும்பி வந்திருக்கிறேன் என்று நான் அப்போது சொன்னேன், நினைத்தேன்.

இன்றைக்கு தமிழகத்தை, சென்னை மாநகரத்தை, சென்னை மாநகரத்தைச் சுற்றியுள்ள இடங்களை, காஞ்சீபுரம் மாவட்டத்தை காணுகின்ற நேரத்தில் நான் அப்போது சென்ற வெளிநாடுகளில் கண்ட காட்சிகளை தத்ரூபமாக இன்றைக்கு தமிழகத்திலும் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த வாய்ப்பை நமக்கு வழங்கியது மத்திய அரசு-மாநில அரசு நல்லுறவு.

அங்கே பொறுப்பேற்றுக் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியும், தமிழகத்திலே திமுக ஆட்சியும்- அங்கே சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடு நடைபெற்று வருகின்ற பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியும், இங்கே அவர்களின் உதவியோடும், அனுசரணையோடும் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு நடைபெறுகின்ற இந்த ஆட்சியும் தான் இந்த திடீர் மாற்றங்களுக்குக் காரணம் என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையிலே தான் இன்றைக்கு இந்தத் திட்டங்களை நிறைவேற்ற தம்பி பாலு இரண்டு மூன்று ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட முயற்சிகளையெல்லாம் நான் கண்டிருக்கின்றேன். வியந்திருக்கின்றேன்.

அவர் ஒவ்வொரு முறையும் என்னைப் பார்க்கும்போதும் 'கத்திப்பாரா, கத்திப் பாரா' என்று "பாரா, உஷார்'' மாதிரி சொல்லிக் கொண்டே இருப்பார்.

நான் கூட விளையாட்டாகச் சொன்னேன். அந்த இடத்திலே போய் நின்று கொண்டு 'கத்திப் பார்ரா', 'கத்தி பார்ரா' என்று தம்பியை அவன், இவன் என்று சொல்கின்ற அந்த உரிமையோடு 'கத்தி பார்ரா' என்று நான் அவருக்குச் சொன்னேன். அப்படி கத்திப் பாராவை அவருடைய உதடுகள் உச்சரிக்காத நேரமே இல்லை.


எத்தனை பாலங்கள்? எத்தனை சுரங்கப் பாதைகள்? எத்தனை அருமையான கட்டிடங்கள்? இவைகள் எல்லாம் இங்கே தோன்றியிருக்கின்றன என்றால், எனக்கே கூட பொறாமையாக இருக்கிறது. அவ்வளவு திட்டங்களை தம்பி டி.ஆர். பாலு இங்கே நிறைவேற்றியிருக்கின்றார்.

தமிழகத்திலே இன்றைக்கு நாம் காணுகிறோமே, நான்கு வழிச்சாலைகள் - இவைகள் எல்லாம் அன்றைக்கு நாம் கண்ட கனவு. அவைகள் எல்லாம் இன்றைக்கு நிறைவேறியிருக்கின்றது. நினைவு வந்த காரணத்தால் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

திமுகஆட்சிக்கு வந்த போது, நான் அண்ணாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற நேரத்தில் தமிழ்நாட்டிலே கிராமங்களையெல்லாம் நல்ல சாலைகளால் இணைக்க வேண்டுமென்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.

அதன் பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது 1,000 மக்கள் இருந்தாலே போதும், அந்தக் கிராமங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளோடு இணைக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தேன்.

அதற்குப் பிறகு 1996ல் கழக அரசு அமைந்த பிறகு கிராமத்திலே 1,000 மக்கள் என்பதை 500 மக்கள் இருந்தாலே போதும், அந்தக் கிராமங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளோடு இணைக்க வேண்டுமென்று திட்டம் கொண்டு வந்தேன்.

இவைகளைச் சொல்வதற்குக் காரணம் - நகர்ப்புறங்கள் வாழ்ந்தால் மாத்திரம் போதாது என்று எண்ணுகிறவன் நான். அதனால் தான் கிராமப் புறங்களிலே நல்வாழ்வு வாழ - அந்த மக்கள் நகர்ப்புறத்திலே வாழ்கின்ற மக்களுக்கு நிகராக வாழ - இவர்கள் பெறுகின்ற வசதிகளையெல்லாம் அவர்களும் பெற வேண்டுமென்பதற்காகத் தான்.

கடந்த ஆட்சியிலோ, அதற்கு முன்பிருந்த ஆட்சியிலோ எந்த ஆட்சியிலே எந்தவொரு சாதனை செய்யப்பட்டிருந்தாலும், அதை அவர்கள் செய்தார்கள் என்பதற்காக விட்டு விடாமல், தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற நாணயமான ஒரேயொரு ஆட்சி திமு கழக ஆட்சி.

ஜனநாயகத்தை மதிக்கின்ற காமராஜர் கொண்டு வந்தார் என்பதற்காக கழக ஆட்சி எந்தத் திட்டத்தையும் நிறுத்தி விடவில்லை. அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார் என்பதற்காக கழக ஆட்சி சத்துணவு திட்டத்தை நிறுத்தி விடவில்லை. அதற்கு மாறாக சத்துணவா? சத்துணவாகவே இருக்கட்டும் என்று வாரத்திற்கு மூன்று முட்டைகள் கொடுக்கின்ற ஆட்சியாக தி.மு.கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி-திமுக அரசுகளுக்கு இடையிலான உறவு வெறும் அரசியல் உறவல்ல.

சோனியா காந்தி அவர்கள் தலைமையில் இருக்கின்ற அந்தக் காங்கிரசுக்கும், என்னுடைய தலைமையிலே இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மற்றுமுள்ள தோழமைக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவு கொள்கை ரீதியான உறவு.

அதை கொள்கை ரீதியான உறவாக மதிக்கின்றவர்கள் தான் எங்களோடு இன்றைக்கு உண்மையான நண்பர்களாக இருக்க முடிகிறது.

அதனால் தான் இன்றைக்கு இந்தத் திட்டங்களையெல்லாம் நாங்கள் திறம்பட நிறைவேற்றி நடத்துகின்ற நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

தமிழகத்திலே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தொகை - மத்திய அரசு தந்துள்ள தொகை- மொத்தம் ரூ. 13,842 கோடி என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்கக் காரணம், இரண்டு அரசுகளுக்கும் இடையிலே உள்ள அத்தகைய விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானது என்கின்ற ஜனநாயக தன்மையும் தானே அல்லாமல் வேறல்ல.

அப்படிப்பட்ட இணைப்போடு - அப்படிப்பட்ட நல்ல நினைப்போடு நடைபெறுகின்ற மத்தியிலே இருக்கின்ற அந்த ஆட்சியும் - மாநிலத்திலே இருக்கின்ற இந்த ஆட்சியும் தொடர்ந்து நடைபெற்றால் தான் உங்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்திட முடியும். தொடர்ந்து நன்மைகளைச் செய்ய முடியும் என்றார் கருணாநிதி.

நன்றி:Thatstamil

No comments: