Tuesday, January 8, 2008

இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலை கிடையாது ?

இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு மலேசியாவில் வேலை கிடையாது ? படாவி அரசு திடீர் தடை ? ஏற்கனவே இருப்பவர்களையும் திருப்பி அனுப்ப முடிவு


கோலாலம்பூர், ஜன.9: மலேசியாவில் இந்திய தொழிலாளர்களை வேலையில் அமர்த்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை கோயில் அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று திடீரென தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில் உரிமை புதுப்பிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படுவர்.

மலேசியாவுக்கு 3 நாள் பயணமாக இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி சென்றார். தலைநகர் கோலாலம்பூரில் இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக உறவு பற்றி பேச்சுநடத்தினார். ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக உறவு குறித்து நேற்று காலை மலேசிய பிரதமர் அப்துல்லா படாவியுடன் 40 நிமிடம் பேசினார். பின்னர், பினாங்குக்கு அவர் புறப்பட்டு சென்றார். இந்நிலையில்தான், இந்த அதிரடி முடிவை மலேசியா அறிவித்துள்ளது.

சம உரிமை போராட்டம்: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள், தங்களுக்கு மலேயா இன மக்களைப் போல் சம உரிமை வேண்டும் என்று கோரி கோலாலம்பூரில் கடந்த நவம்பரில் பேரணி நடத்தினர். போலீஸ் அடக்குமுறை நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இது குறித்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்த நிலையில் மலேசிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இனி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை என்று முடிவு எடுக்கப் பட்டது. இது பற்றிய சுற்றறிக்கை எல்லா அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த தடை டிசம்பர் 31 முதல் அமலுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 18ம் தேதியே இந்த முடிவை அமைச்சரவை எடுத்து விட்டதாகவும், நேற்று தான் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது என்றும் மலேசிய அதிகாரிகள் கூறினர்.

உரிமை புதுப்பிப்பு இல்லை: இந்த தடை உத்தரவு தொழிலாளர்களுக்கு மட்டும் இன்றி, அர்ச்சகர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் விளக்கினர். ஆனால், தொழில்துறையினருக்கும் பொருந்துமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையில் உள்ள இந்தியர்களுக்கு தொழில் உரிமத்தை புதுப்பிப்பது இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு முடிவுக்கு எதிர்ப்பு: மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்து உரிமை இயக்கம் (இண்ட்ராப்) புத்தமதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், மற்றும் தாவோயிசம் போன்ற அனைத்து மத ஆலோசனைக் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. யாரையும் கலந்து பேசாமல் மலேசியா அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மலேசிய அமைச்சர் மறுப்பு: மலேசியாவில் இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு டெல்லியில் நேற்று மறுத்தார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். மலேசியாவில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதித்திருப்பதாக கோலாலம்பூரில் செய்தி வெளியாகி இருப்பது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து சாமிவேலு கூறியதாவது:

இந்த தகவல் உண்மையல்ல. அப்படி எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மலேசிய பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருடன் பேசினேன். அந்த செய்தி உண்மையல்ல. மலேசியாவில் இந்திய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தேவைப்பட்டால் இன்னும் இந்திய தொழிலாளர்கள் வருவதை வரவேற்போம். இவ்வாறு சாமிவேலு கூறினார்.

பேட்டியின் போது உடன் இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், மலேசிய அமைச்சர் கூறியது சரிதான் என்று நான் நம்புகிறேன். அவர் பிரதமருடன் பேசியதை கேட்டேன். அவரை நாம் நம்புகிறோம். வேறு தகவல்கள் கிடைத்தால் பேசுவோம் என்றார்.


நன்றி: செய்தி: Dinakaran
Dinamalar

Which is True ?: The Hindu:

No comments: