Wednesday, September 30, 2009

டாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு

இன்று முதல் அமல் - டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.3 வரை விலை உயர்வு

சேலம், அக்.1: தமிழ்நாட்டில் 6,500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் 34,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலான பிராந்தி வகை மதுபானங்கள் குவார்ட்டர் (180 மி.லி.) ரூ.67, ரூ.69, ரூ.57, ரூ.68, ரூ.59 எனவும், பீர் வகை மதுபானங்களும் 325 மி.லி. பாட்டில் ரூ.32, ரூ.47 என்றும், 650 மி.லி. பாட்டில் ரூ.66, ரூ.68 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சில்லறை பிரச்னையைக் காரணம் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.67, ரூ.68 என்ற விலை உள்ள மதுபான பாட்டிலை ரூ.70க்கு விற்று வந்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடிக்கடி ‘சில்லறை தகராறு’ ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், மதுபானங்களின் விலையை ரூ.50, ரூ.60, ரூ.70 என பத்தின் மடங்காக உயர்த்தினால் கடைகளில் சில்லறை பிரச்னை வராது என்பதோடு, அரசுக்கும் கூடுதலாக ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கூறினர். இதையடுத்து, எல்லா வகை மதுபானங்களின் விலையையும் ‘ரவுண்டாக’ உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, பிராந்தி, ரம் வகை மதுபானங்கள் குவார்ட்டர் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பீர் வகைகள் ரூ.3 வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


புதிய விலை பட்டியல்


மதுபான வகைகள் குவார்ட்டர் ஆஃப்ஃபுல்

நெ.1 மெக்டவல் பிராந்தி 70 135 265
நெ.1 மெக்டவல் விஸ்கி 70 140 275
மானிட்டர் பிராந்தி 60 115 230
மானிட்டர் விஸ்கி 60 120 230
கார்டினல் கிரேப் பிராந்தி 70 140 275
மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி 60 120 240
மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி 80 160 325
ஹனி டே பிராந்தி 60 120 240
ஓல்டு மான்ஸ்ட்டர் ரம் 60 120 240
ஓல்டு சீக்ரெட் ரம் 60 120 240
ஓல்டு மாங்க் ரம் 60 120 240
டாப் ஸ்டார் ஸ்பெஷல்
பிராந்தி 60 120 235
ஓல்டு செப் ரம் 60 120 235
பிளாக் கேட் ரம் 60 120 240
வெனிலா ஓட்கா 70 140 285


செய்தி: நன்றி: தினகரன்

Thursday, September 24, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு

உன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார்.

கலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.

இதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

சில சந்தேகங்கள்:

* ஜெயலலிதா இந்தப் படத்தை எப்படிப் பார்த்தார் ? கோடநாட்டு எஸ்டேட்டில் ரிலிசாகியிருக்கிறதா ? இல்லை கோயமுத்தூருக்கு இரவு வேளையில் சென்று தனிக்காட்சியா ?

* ஸ்ருதியைப் பாராட்டியதில் பெண்ணினம் என்னும் அக்கறையா இல்லை சட்டைக்குள் குறுக்காக ஓடும் சமாச்சாரமா ?

* மகளுக்கு மட்டும் பாராட்டா ? கோபாலபுரத்தையும் மு.கவின் குரலையும் உபயோகித்த தந்தைக்கு பாராட்டு கிடையாதா ?

Wednesday, September 16, 2009

உலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்



(படத்தின் மீது க்ளிக்கவும்)

உயர்ந்த சாதனை: உலகின் மிக உயரமான மனிதர் இவர். பெயர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவர் கால் பந்து வீரர். 26 வயதாகும் சுல்தான், முன்பு 8 அடி உயரம் இருந்தார். முழுவதும் நிமிர முடியாமல் முதுகு பிரச்னையில் தவித்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு, உயரம் 8 அடி 1 அங்குலமாக மேலும் உயர்ந்து விட, உலக சாதனை படைத்து விட்டார். லண்டனின் டவர் பிரிட்ஜ் அருகே அவர் நேற்று கொடுத்த போஸ் இது.

படம்: நன்றி: தினகரன்

Monday, September 14, 2009

ஜெ.ஆதரவு: சங்கடத்தில் அழகிரி

நாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி.

ஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவனஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.

அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.

சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வதாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.

இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளுமன்றத்திலே எடுத்துரைக்க முடியும்? எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும்போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது? அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும்? அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?.

தமிழ்! தமிழ்மொழி! செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்த திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா?.
ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா? இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா? இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா?.

எது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார்.

“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

செய்தி: நன்றி: Maalaisudar

நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அழகிரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் வீழ்கின்ற சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்றும் அவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மை யிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான வினாக் களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.

சென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த தாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணை அமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வ தாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளு மன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளு மன்றத்திலே எடுத்துரைக்க முடியும்? எப்படி வெளிப்படுத்த முடியும்?
ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழி யில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும் போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது? அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும்? அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?

தமிழ்! தமிழ்மொழி! செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்த திமுக அரசின் முதல மைச்சர் கருணாநிதி, நாடாளு மன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே? மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா? ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா? இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா? இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டு வதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளு மன்றத்தில் பேசினால் என்ன, பேசா விட்டால் என்ன என்று கருதுகிறாரா?

எது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். “உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, September 8, 2009

விஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்

நடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.

ராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .

நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.

என் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, September 7, 2009

கோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி

அதிமுக கோமா நிலைக்குப் போய் விட்டது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதா கட்சி போட்டியிடும். பாஜவில் ஏற்பட்ட உச்கட்சி குழப்பத்தால் அந்த கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

பாஜவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. காங் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதிமுகவில் இப்போது எந்த தலைவர்களும் இல்லை. அந்த கட்சி கோமா நிலையில் உள்ளது.

இலங்கையில் புலிகள் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இலங்கை அரசு மறுவாழ்வு ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இலங்கையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்து கட்சிகள் அனைத்தும் விரைவில் ஓன்றிணைந்து இந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்

Sunday, September 6, 2009

தனிமனிதன் கோபப்பட்டால்....! - கமல்ஹாசன்

தனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக கூறியுள்ளார். ஜெயகாந்தன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
.
"உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.

அதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.குழந்தை வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு.

என் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறி கொள்வேன். அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள்.

சினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.

டிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட "மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.

திரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கிறோம். மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.

இந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையை போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன். கவிஞர் மனுஷ்யபுத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை.

தஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது ஆகியவை ஆபாசமானவைதான். இன்று இன்டெர்நெட்டில் ஆபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழில் தற்போது வருடத்திற்கு சில படங்களே வெற்றி பெறுகின்றனவே என்று நிருபர்கள் கேட்டபோது, கமல் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு கமல் பதிலளித்தார்.

திரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்டபோது, நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன் என்று கமல்தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, இது குறித்து ஆதாரித்தோ அல்லது எதிர்த்தோ நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.

செய்தி: நன்றி: தட்ஸ்தமிழ்